அஃதன்றோ நெய்த்தலைப்பால் உக்கு விடல் - பழமொழி நானூறு 339

நேரிசை வெண்பா

விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார்
ஒழுக்குடையர் ஆகி ஒழுகல் - பழத்தெங்கு
செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ
நெய்த்தலைப்பால் உக்கு விடல். 339

- பழமொழி நானூறு

பொருளுரை:

தெங்கம்பழம் வயலின்கண் விழுகின்ற நீர் நிறைந்த மருதநிலத் தலைவனே!

சிறந்த தொடர்ச்சியை உடையாரை உடையது ஆகிப் புகழால் விளக்கம் உற்றுத் தொன்றுதொட்டு வந்த குடியின்கட் பிறந்தார் தத்தமக்குரிய ஒழுக்கத்தினை உடையராகிக் குடிக்கேற்ப ஒழுகுதல் ஆவின் நெய்யிடத்து ஆவின் பாலை ஊற்றிவிடல் போல்அஃது இனிமையைத் தரும் அல்லவா?

கருத்து:

தங்குடிக்கேற்ப நல்லொழுக்கினனாய் ஒழுகுதல் இனிமையைப் பயப்பதாகும்.

விளக்கம்:

பழைய குடியாவது 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி.' சிறந்த தொடர்ச்சியை உடைமையாவது நாங்கூர்வேள் புகார்ச் சோழற்குப் பெண் கொடுத்தமை போன்ற வீரக் குடிமக்கள் தொடர்ச்சியைப் பெறுதல், விழுத் தொடர்ச்சி விளங்குதல். தொன்றுதொட்டு வருதல், இவை குடிக்கு ஏற்றப்பட்டன.

'நெய்த்தலைப் பால் உக்குவிடல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-23, 12:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே