மாசற மாண்ட மனமுடையர் ஆகாத கூதறைகள் ஆகார் குடி - பழமொழி நானூறு 360

இன்னிசை வெண்பா

பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்(து)
ஆசறு செய்யாராய் ஆற்றப் பெருகினும்
மாசற மாண்ட மனமுடையர் ஆகாத
கூதறைகள் ஆகார் குடி. 360

- பழமொழி நானூறு

பொருளுரை:

துன்பம் நீங்குமாறு மிகவும் அன்பு செய்து குற்றம் அற்றவைகளைச் செய்யாதவராய் செல்வத்தால் மிகப்பெருகி வாழ்ந்தாலும் குற்றம் அற மாட்சிமைப்பட்ட மனமுடையராகாத கூளங்கள் நற்குடியிற் பிறந்தவராகார்.

கருத்து:

கீழ்மக்கள் செல்வம் பெறினும் மனத்தூய்மை யிலராகலின் உயர்குடியிற் பிறந்தாரை ஒவ்வார்.

விளக்கம்:

கீழ்மக்கள் மிகுந்த செல்வம் பெற்றிருப்பினும் தூய்மையான மனமின்மையால் பிறர் துன்பம் நீங்குமாறு நல்ல செயல்களைச் செய்ய இயலாமற் போவார். நற்குடியிற் பிறந்தார் செல்வம் இல்லாத இடத்தும் மனச்செம்மையராகலின் தங்குடிக்குரிய கொடைத் தொழிலினின்றும் நீங்கார். இதுபற்றியே கீழ்மக்கள் நற்குடியிற் பிறந்தவராகக் கருதப்படார் என்றது.

'கூதறைகள் ஆகார் குடி' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jul-23, 7:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே