இறகுக் கள்வன்
இறகுக் கள்வன்
-----------------------------
ரொம்ப நேரமா
போரடிக்குதுடா தேவதையே
எங்கேனும் என்னை
அழைத்து போலாம்தானே என்கிறாய்.
எங்கு அழைத்துப்போவது
நாம் இணைந்திருக்கும் உலகம்
அத்தனை விசாலமாகிறது.
இரு இங்கிருந்துதான்
உனக்கொரு
தனிமையைக் கற்றுக்கொடுக்கப் போகிறேன்.
பழகிக் கொள்.
ஆண்தேவதை நான்
என் பரந்த இறகுகளைப் பார்
இதுபோன்ற இறகுகள்
உனக்கும் வேண்டுமாய்த் தோன்றும் தானே
சரி வா
நான் உடன் இருப்பதால்
நீயும் தேவதை ஆகிறாய்
இதைக்கேட்டு மெல்ல சிரிக்கும்
உனக்கும்
இறகு முளைவிடத் தொடங்குகிறதை
உணர்கிறாயா ம் ? .
நீ உறங்கிகொண்டிருக்கும்
ஒரு நள்ளிரவில்
சொல்லாமல் கொள்ளாமல் கூட
தொலைந்துவிடலாம்தான்.
பக்கம் வா
என் உள்ளங் கைகளை
உன் உள்ளங்கைகளால்
பற்றிக்கொள்.
என் கால்கள் இரண்டினையும்
உன் இரு கால்களால்
பின்னிக்கொள்.
நான் கொஞ்ச நேரம்
உன்னை இதம் செய்கிறேன்.
என் காட்டமான அணைப்பினால்
முத்தமழைப் பொழிகிறேன்.
அப்போது
உனக்கும் சிறகுகள் முளைக்கும்
நான் இணைசேர
நீயும் தேவதை ஆவாய்.
பறத்தலின்போது
கமனப் பாழ்வெளியின்
குளிர்த் தாளாதவள் நீ
என் உலகம் உனக்கு புதியதுதானே
அதுதான்
இரு
உன் இறகுகளை
நம் இருவருக்குமென போர்வையாக்கிக் கொள்கிறேன்.
பறந்து செல்வதற்கு
யாரோ ஒருவருடைய இறகுகள்
இருந்தால்
போதும்தானே ம்
ஆகையால் கொஞ்சம் இரு
இன்றுமட்டும்
உன் இறகுக் கள்வன் ஆகிவிடுகிறேன்.
பைராகி