வாழ்க்கை

அரக்கப்பறக்க அலைந்துதிரிந்து பிறந்தவீட்டின் தரம்கொஞ்சம் நிமிர்ந்து நிற்க தன்னைத்தானே உடைத்துக்கொள்ளும் சிற்பி அவள்.

ஏராமாய் ஏளனங்கள் தாராளமாய் துயரங்கள் என அவள் படித்திடாத பாடங்களில்லை. அடுத்தடுத்த அடிகளையும் இடுகிறாள் முன்னேறி.

தந்தை, தாய்க்கோர் மகளாய் வந்துசேர்ந்ததை தவிர வேறோர் வரம் அவள் பெற்றதில்லை. மாதம்வந்துசேரும் மங்கைவலியும் அதிகமாக இலவசம்.

அன்னைக்கு பெயரெடுத்துத்தரும் பாக்கியத்தைத்தவிர வேறேதும் ஆசைகொண்டதுமில்லை, இந்த இலவச இணைய நாட்களிலே!

ஆண்துணையோ, யார்துணையோ, ஏதும் அவள்பக்கமில்லை, கலங்கி நிற்கும் கோழையில்லை.

நித்தம் ஓட்டமும்,வறுமையின் வாட்டமும்,உடலில் ஊட்டமென்பதே சிதைக்கத்தான் செய்கிறது.ஆனபோதும் மலையேறுகிறாள்.

பக்குவமாய் பயணம்தொடர பருவம் முற்றுவதாய் பக்கவாட்டில்
உதைக்கும் உற்றார் கூட்டம், சேர்ந்துகொள்ளும் தாயின்மனமும் அவள் ஈரமனதில் மின்சாரம் பாய்ச்சுகிறது.

ஜாதகமாக வந்துசேர்பவை அனைத்தும் பொறுத்தங்களல்ல, அவளின் வருத்தங்கள். வான்நோக்கி கண் ஈரம் உலர்த்துகிறாள்,.

எதிர்கொள்ள எதுவுமின்றி துயர்துடைக்க படைத்தவனை நாடுகிறாள்,நாளும்தினமும்..அவன்செவி வலுவிழந்த கதைதெரியாமலே.

இரத்தபந்தமில்லாத அண்ணன் நானோ அனைத்தையும் வழியின்றி வலியாக வரிகளாக்கிக்கொண்டிருக்கின்றேன்.

வாசிக்கும் விழிகள் எவையென்று தெரியாமல்.

எழுதியவர் : அமரன் (12-Sep-23, 5:42 pm)
சேர்த்தது : அமரன்
பார்வை : 102

மேலே