உலகம் பலவிதம்

உலகம் பலவிதம்

நீங்கள் அந்த காலத்தில் வெளி வந்த பாட்டை கேட்டிருப்பீர்கள் “உலகம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்” உலகம் பலவிதம்தான், ஆனால் அவை அனைத்தும் ஒரே கூடான சமுதாயம் என்னும் இந்த உலகத்துக்குள் அடங்கித்தான் போய் விடுகிறது.
உலகம் பலவிதம் என்று சொல்வது ஒவ்வொரு மனித எண்ணங்களும், அவர்களின் வாழ்க்கை, நோக்கம். கவலை, இப்படி அனைத்தும் கொண்ட கூட்டு கலவையாக மனிதன் இருக்கிறான். அப்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆயிரமாயிரம் எண்ணங்கள் இருந்தும் அனைவரும் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.
உதாரணாமாக எடுத்து கொண்டாலும், ஒரு மனிதன் அவனுக்கு கவலைகள், பயங்கள், இன்னும் எத்தனையோ..! அதே போல அவன் குடும்பத்துக்குள்ளேயே உறுப்பினரான மனைவியிடமோ அல்லது அவர்களின் குழந்தைகள் இவர்களிடமோ கேட்டு பார்த்தோமென்றால் அவர்களுக்குள்ளும் ஆயிரமாயிரம் எண்ணங்கள், கவலைகள்.
வேடிக்கை என்னவென்றால் அவரவர்களின் கவலைகளுக்குள்ளும், எண்ணங்களுக் குள்ளும் புகுந்து கொள்ளும் இவர்கள் அவைதான் “இவர்களுக்கு உலகம்” என்று நினைப்பது தான். இவர்களை சுற்றிலும் பல உலகங்கள் இருப்பது அவர்களுக்கு தெரிவதில்லை.
தன் மனதை திறந்து வைத்து மற்றவர்களின் உலகத்தை தன்னுள் வாங்கிக் கொள்ளும் பக்குவம் மனிதனிடம் குறைந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது.
எதுவுமே அறியாத குழந்தைகள் உலகம், அவைகளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பசித்தால் அழும், துன்பம் வந்தால் அழும், அதனுக்கு என்ன தேவைகள் என்பதை பெரியவர்கள் பார்த்து கவனித்தால் உண்டு.
அடுத்த பருவம் அடையாளம் கண்டு கொண்டு சிரிக்கும் குழந்தை, தன் உணர்வுகளை சைகைகள் மூலம் காட்டும், பேச்சு ஆரம்ப நிலையில் இருப்பதால் திக்கி திணறி தனது தேவைகளை சொல்ல முற்படுகிறது. இது அடுத்த கட்ட குழந்தைகளின் உலகம்.
சிறுவர்களின் உலகம், இதில்தான் அவர்கள் இந்த உலகத்தை புரிந்து கொள்ள முற்படுகிறார்கள், அதற்கு முன் உதாரணமாக தங்களது பெற்றோர்களை கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் அப்படியே இவர்கள் மனதிலும் படிய ஆரம்பிக்கிறது. பொதுவாக இவர்களின் உலகம் என்பது பெற்றோரும் அருகில் இருப்போரின் நடவடிக்கைகளை கவனித்து, அதன்படி தன்னையும் மாற்ற செய்து கொள்ளும் முயற்சி மட்டுமே. உதாரணமாக அவர்களை ஒரு சினிமாவோ, மற்ற நிகழ்ச்சிகளுக்கோ கூட்டி செல்லும்போது அந்த சூழ்நிலை அவர்களை கவர்ந்து மனதுக்குள் படிந்து அது மாதிரி இருக்கவோ அல்லது செய்யவோ முயல்கிறார்கள்.
நிறைய கற்பனை உலகுக்குள் இருப்பார்கள். அவர்கள் மனதிற்குள் பலவிதமான கதைகளும், நிகழ்ச்சிகளும் ஓடிக்கொண்டே இருக்கும்.
சிறுவர்கள் வளர்ந்து இளைஞர்களாக இளைஞிகளாக வரும்போது இவர்களின் உலகம் முற்றிலும் மாறிப்போயிருக்கும். அவர்களுக்குள் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் கூட இவர்களின் உலகத்துக்குள் பெரிய உந்து சக்தியாக வெளிப்பட ஆரம்பிக்கிறது. அதனால் அவர்களின் திறன் மேம்பட்டு காணப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அவர்களை விளையாட்டு, கலைகள், போன்றவற்றில் ஈடுபடுத்தி அதில் சாதிக்க கூடிய வலிமையும் அடைகிறார்கள். என்றாலும் இந்த காலகட்டத்தில் அவர்கள் சூழ்ந்திருக்கும் சமூக அமைப்பு தவறாக இருக்கும் பட்சத்தில் இவர்களுடைய எண்ணங்களும், நோக்கமும் முழுவதுமாக மாறிப்போய் விடுகிற ஆபத்தும் ஏற்படுகிறது. அதனால்தான் இவர்களின் உலகம் எப்படி வெளி கொண்டு வரப்படுகிறதோ, அத்தகைய சூழ்நிலைக்கு இந்த சமூகமே மாறிப்போய் விடுகிறது.
அடுத்த கட்டத்தில் நடுத்தர வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் அமைகிறது. இவர்களின் உலகம் சில சமயம் முந்தையவற்றிற்கும் சம்பந்தமில்லாமல் கூட போய் விடுகிறது. காரணம் இவர்கள் குடும்ப அமைப்பில் உறுப்பினர் என்னும் அந்தஸ்தை அடைந்தவர்களாகி விடுகிறார்கள். இவர்களின் உலகமே அதைப்பற்றி சிந்திப்பதிலும், இவர்களை சுற்றி இருப்பவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஓடி ஓடி சம்பாதிக்கவும், எதிர்காலத்திற்கு சேமிப்பை உறுதி செய்து கொள்ளவுமே செயல் படுகிறார்கள். அதையெல்லாம் விட அவர்களின் பணிச்சுமை, வேலை வாய்ப்பை பற்றிய பயம், அதிகாரிகளின் ஆதிக்கம், இப்படி பல வகையான இக்கட்டுகள் அவர்களை சுற்றி படர்ந்து இளைஞர்களாய் இருந்தபோது இவர்களிடம் இருந்த பல வித கனவுகளையும், நோக்கங்களையும் தொலைத்து இந்த உலகத்தில் வாழ்ந்து ஆகவேண்டும் அது எப்படியாகிலும் என்னும் உணர்வுகளுடனேயே இவர்கள் உலகம் இருந்து விடுகிறது.
நடுத்தரமும் கடந்து முதுமைக்கு முன் என்னும் காலகட்டத்தில் வாழ்பவர்களின் உலகம் மிக எச்சரிக்கையானது. இன்னும் சில வருடங்களில் தன்னால் செயல்பட முடியாத முதுமை வந்து விடும் என்பது போன்ற எண்ணம் அவர்களை பயமுறுத்தியபடியே இருக்கிறது. அந்த சமயத்தில் தன்னை கவனிக்க ஆள் இருக்குமா? என்னும் கவலையும் வந்து விடுகிறது. தான் ஓடி ஓடி சேர்த்து வைத்த பணத்தை பாதுகாப்பதும் அவர்களுக்கு பெரிய பிரச்சினை ஆகிவிடுகிறது. இவர்களின் எண்ணங்களில் கூட இத்தகைய போக்கே காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் கவனிப்பும் தன்னிடம் குறைந்து போய்விட்டது என்னும் கழிவிரக்கம் தானாக வந்து ஒட்டிக்கொண்டு விடுகிறது.
முதுமை முழுவதுமாக தன்னை சூழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இவர்களின் உலகம் என்பதே கனவுகளாக இல்லாமல் “நடந்து போன” அல்லது “கடந்து போனவைகளை” பற்றிய எண்ணங்களே சூழ்ந்து, அதை கனவுகளாக கண்டு உடல் அசைவுகளை இயக்க முடியாத கட்டத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களது எண்ணங்கள் கடந்தவைகளையே நினைத்து தற்போது செயல்பட முடியாத நிலையில் அதை பற்றியே பேசிக்கொண்டிருப் பார்கள். பிறர் அதை கேட்டாலும் கேட்காவிட்டாலும்.
இப்படியாக மனித வாழ்க்கையிலேயே பருவத்திற்கு ஏற்ற உலகம் அவர்களின் எண்ணங்களாக இருக்கும்போது, இவர்கள் எல்லாம் (மனித கூட்டங்களாக) இந்த ஒரே சமுதாய உலகமாக பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
மற்ற உயிரினங்களும் இப்படித்தானா? என்னும் கேள்வி நம்முள் தொக்கி நிற்கும்போது “இருக்கலாம்” என்னும் எண்ணம்தான் வருகிறது என்றாலும், அவைகளுக்கு மனிதனை விட சிந்திக்கும் திறன் குறைவு என்பதால், மனிதனைப்போல “எல்லாம் எனக்கு” உலகமே என்னுடையதுதான், என்பது போன்ற சிந்தனைகள் எழாமல் இருப்பதால் மனிதர்கள் அளவுக்கு துன்பபடுவதில்லை. அடுத்தபடியாக அதன் வாழ்வு நிச்சயிக்கப் பட்டதாயில்லை என்பதும் அதற்கு ஒரு வரப்பிரசாதமே.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Sep-23, 12:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : ulakam palavitham
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே