ஐம்பது செண்ட் இடமும் அரசியலும்

ஐம்பது செண்ட் இடமும் அரசியலும்

நகரை விட்டு அரை கிலோ மீட்டர் தள்ளி நல்ல விசாலமாய் காணப்பட்ட அந்த காலி நிலம், எத்தனையோ காலமாக அவ்வப்பொழுது பிரபலாகும் விளையாட்டு சூழ்நிலைக்கு தகுந்த மைதானமாக காட்சி தரும். அதாவது மூன்று தலைமுறைகளை அந்த மைதானம் கிட்டிப்புள்,பம்பரம்,கோலிக்குண்டு, பாஸ்க்கட்பால், அடுத்து கிரிக்கெட் விளையாட்டு சூடு பிடிக்க கிரிக்கெட், திடீரென கம்பம் நடப்பட்டு வாலிபால், கால்பந்து சீசன் ஆரம்பித்து விட்டால் கால்பந்து, இப்படி இந்தியாவில் தமிழகத்தின் எல்லா விளையாட்டையும் அந்த தரை பார்த்திருக்கிறது. ஜல்லிக்கட்டு மட்டும்தான் பாக்கி.
என்னவாயிற்றோ தெரியவில்லை சில நாட்களாக அந்த மைதானத்தில் யாரும் விளையாடுவதாக தெரியவில்லை. அந்த வழியாக வருவோர் போவோரும் கூட அதை பற்றி கண்டு கொள்ளாமல்தான் இருந்தார்கள்.
திடீரென்று அந்த மைதானத்தை சுற்றி கம்பி வேலி போடுவதற்காக எல்லா சாமான்கள் வந்து இறங்கவும் அக்கம் பக்கம் குடியிருப்பவர்களுக்கு சந்தேகம் வந்து விட்டது, இந்த இடத்து சொந்தக்காரர்கள் வந்து விட்டார்களா?
இது நாள் வரைக்கும் இந்த இடத்துக்கு சொந்தக்காரர் யார் என்றே தெரியாது. தெரிந்து கொள்ளவும் யாருக்கும் விருப்பமும் இல்லை. கிட்டத்தட்ட இன்று அறுபதில் இருப்பவர்களும், நாற்பதில் இருப்பவர்களும் இந்த மைதானத்தில் உருண்டு புரண்டவர்கள். இப்பொழுது கண்ணை சுருக்கி போக வர அந்த மைதானத்தை சுற்றி வேலி போடும் வேலை நடந்து கொண்டிருப்பதை பார்த்தபடி கடந்து கொண்டிருக் கிறார்கள்.
அறுபதை தாண்டி வீட்டில் இருக்கும் ஓய்வு பெற்ற ஜீவன்களால் அந்த திறந்த வெளி மைதானம் அடைபட்டு போவதை சகிக்க முடியாமல் சபரீசன் தலைமையில் நான்கைந்து பேர் அங்கு சென்றார்கள்.
இரண்டு ஆண்கள் குழி எடுத்து கொண்டிருக்க, இரு பெண்கள் அரட்டை அடித்தபடி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். சற்று தள்ளி ஒரு பையன் கம்பி வேலியை சுற்றியபடி இருந்தான்.
இந்தாப்பா…சபரீசன் இரண்டு முறை கூப்பிட்டும் அவன் கண்டு கொள்ளாமல் அந்த பெண்களிடம் அரட்டை அடித்தபடி இருந்தான். சபரீசன் அருகில் இருந்த நபர் ஏம்ப்பா கூப்பிட்டா உனக்கு காது கேக்காதா? வேகமாகவும் கொஞ்சம் சத்தமாகவும் கேட்டார்.
இதற்கு அவன் கொஞ்சம் அசைந்து கொடுத்து என்ன வேணூம்? கேட்ட தோரணையே உங்களுக்கெல்லாம் பதில் சொல்வதா? எண்ணும்படியாக இருந்தது.
சபரீசனுக்கு எரிச்சல் வந்தாலும் அவனிடம் வார்த்தையாடி, அவனும் ஏடாகூடமாக ஏதாவது பேசி விட்டால் இந்த பயம் இருந்தது. அதனால் மெதுவாக ஏம்ப்பா இந்த கிரவுண்ட யாராவது வாங்கிட்டாங்களா?
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, இங்க வந்து வேலி போடுன்னு சொன்னாங்க, நாங்க வந்து போடறோம், அவ்வளவுதான் தெரியும். வேற ஏதாவது கேக்கணும்னா இன்னும் கொஞ்ச நேரத்துல சூப்ரவைசர் வருவாரு, அவர்கிட்ட கேட்டுக்குங்க, சொல்லிவிட்டு “ஏய் பரமு அந்த ஜல்லி கல்லை எடுத்து வந்து குழியில போடு”, என்று சொன்னான்.
சரி இவங்கிட்ட ஒண்ணும் கேக்க முடியாது, முடிவு செய்தவர்கள் அருகில் இருந்த ஒரு குடியிருப்பின் வாசலில் சென்று அமர்ந்தனர் அரை மணி ஒரு மணி நேரமாகியது, காத்திருந்தவர்கள் களைத்து போனார்கள், வயசாகிறதில்லையா? ஒவ்வொருவராக மெல்ல கழண்டு கொள்ள ஆரம்பித்தார்கள்.
கடைசியில் மிஞ்சியது சபரீசன் மட்டும்தான். அவரும் பார்த்தார், இப்ப வேணாம், சாயங்காலமா வந்து விசாரிச்சுக்கலாம், மனதுக்குள் நினைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார்.
இதே போல் பல முறை இவர்கள் முயற்சி செய்தும் அந்த ‘சூப்பர்வைசர்’ என்று குறிப்பிடுபவனை பார்க்கவே முடியவில்லை. இரண்டு நாட்கள் ஓடி விட்டது.
திடீரென்று ஒரே கூச்சல், அக்கம்பக்கம் இருப்பவர்கள் என்னவென்று வந்து பார்க்க வேலி போடும் வேலை செய்தவர்கள் நட்டு வைத்திருந்த கம்பங்கள் எல்லாம் சாய்க்கப்பட்டிருந்தன. இதை காலையில் வேலை செய்ய வந்த ஆண்கள் இருவரும் பார்த்து விட்டு கூச்சல் போட்டு கொண்டிருந்தனர்.
அக்கம்பக்கம் வீட்டுக்காரர்களுக்குள் ஒரே குறுகுறுப்பு, யார் செய்ததாய் இருக்கும்?. கொஞ்சம் பேர் தைரியமாய் கூச்சலிட்டு கொண்டிருந்தவனிடம் சென்றார்கள். என்னப்பா என்ன பிரச்சினை? எதுக்கு இப்படி கூச்சல் போட்டுகிட்டிருக்கே?
ஏதோ வேகமாய் பதில் கொடுக்க போனவன் கேட்டவரின் பின்னால் நின்ற கூட்டத்தை பார்த்தவன் மெல்ல சொன்னான்,”இங்க பாருங்க” நாங்க நட்டு வச்சிருக்கற போஸ்ட் எல்லாத்தையும் யாரோ பிடுங்கி போட்டிருக்காங்க.
அதுக்கு நாங்க என்னப்பா பண்ண முடியும்? போய் போலீஸ்ல கம்பிளெயிண்ட் பண்ணு, உனக்கு இங்க வேலி போட சொன்னது யாரு? அவரை இங்க வர சொல்லு, இது முதல்ல அவரு இடமான்னு எங்களுக்கு தெரியணும். நீ முதல்ல கிளம்பு, இங்க சத்தம் போடாதே.
அவன் ஏதோ முணு முணுத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
மறு நாள் இரண்டு மூன்று ரவுடிகள் போல் தோற்றமளிப்பவ்ரகள் அந்த மைதானத்திற்குள் சுற்றி நிற்க சுற்றி வர கம்பி வலைபோடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்தன. சுற்றி வர வீட்டில் இருந்தவர்கள், அந்த ரவுடிகளை ஒரு வித பயத்துடன் சன்னலை திறந்து வைத்து வேடிக்கை பார்த்தனர். கதவை திறக்க கூட பயந்தபடி இருந்தனர்.
இரண்டு நாட்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது, மூன்றாம் நாள் காலையில் விழித்து பார்த்தபோது..!
அவர்கள் போட்டிருந்த அனைத்து கம்பங்களும் பிடுங்கி எறியப்பட்டு, வலைகள் வீசி எறியப்பட்டிருந்தது.
வேலை செய்ய வந்தவர்கள் மீண்டும் குய்யோ முய்யோ என்று கூச்சலிட்டபடி நீண்ட நேரம் இருந்தார்கள். பின் மெல்ல மெல்ல அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்கள்.
அதன் பின் அந்த மைதானத்தில் மீண்டும் வேலை எதுவும் நடை பெறவில்லை. ஒரு வாரம் அமைதியாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக போட்டிருந்த சாமான்கள் காணாமல் போய் இப்பொழுதெல்லாம் மீண்டும் அந்த ஊர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாளம் மைதானத்தில் விளையாண்டு கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
ஆனால் இது வரை யார் அந்த மைதானத்தை வளைக்க முயற்சி செய்தது? யார் அதை முறியடித்தது என்பது மட்டும் பரம ரகசியமாகவே இருந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Sep-23, 11:22 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 51

மேலே