நினைவுகளை நேசிப்போம்

நினைவுகளை நேசிப்போம்
*************** ****************
நினைவுகளைப் பற்றி
நினைக்காமலிருக்க முடிவதில்லை
இவன் நினைப்பானென அவளோ
அவள் நினைப்பாளென இவனோ
எவர் நினைப்பாரென எவரோ
என எல்லோரும்
எதையாவது நினைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்
நினைவுகளை நீக்கி வைத்துவிட்டால்
இதயம்
நிறமில்லாத வானவில்லுக்கு ஒப்பானதாகிவிடுகிறது
நினைவுகள் இருப்பதனால்தான்
நினைக்கின்றோம்
அவை இல்லையென்றால்
எதை நினைப்போம்?
சம்பவங்களின் விதையாய்
நெஞ்சுக்குள் விழுந்துவிடும்
நினைவுகள் காலப்போக்கில்
மரமாய் வளர்ந்து
சிலருக்குப் பூக்களையும்
சிலருக்கு முட்களையும்
சிலருக்கு நிழலையும்
சிலருக்கு கனிகளையும்
சிலருக்கு சருகுகளையுமென
சந்தர்ப்பம் பார்த்து வழங்கிவிடுகிறது
ஒருகாலத்தில்
ஒருத்தர் நம்மை
நினைக்கமாட்டாரா என்று
நினைத்திருப்போம்
அது வசந்தகால நினைவு
ஒரு காலத்தில் ஏன் அவரை
நினைத்தோமென நினைத்திடுவோம்
இது கசந்தகால நினைவு
நினைக்க வேண்டியவரை விட்டுவிட்டு
நினைக்கக் கூடாதவரை
நினைக்கும் நினைவுகளில்
எப்போதும்
மறக்க முடியாத நினைவுகள்
மறைந்திருக்கின்றன
உயர் விலைக்கு விற்பனையான
பாகற்காய் இனிப்பான நினைவுகளையும்
விலை படுத்துக் கையைக்
கடிக்கவிட்டக் கரும்பு
கசப்பான நினைவுகளையும்
தந்து வாழ்க்கை சந்தையில் முரண்பாடான வியாபாரமாகின்றன
தனியார் பேருந்துகளைப்போல வாழ்வின் நிலையத்திலிருந்து ஏற்றிக்கொண்டு வழியறியாத இடங்களில் இறக்கிவிட்டுப்போகும் சில நினைவுகள் பரிதாபத்திற்குரியவை
இலட்சியங்களைத் தன்முதுகில்
சுமந்துகொண்டு
எதிர்கால கதைகேட்ட
வேதாளங்கள் முடிவில்
வழக்கம்போலவே
அலட்சிய முருங்கையில் ஏறிய
கதைகளின் நினைவுகள்
எல்லோருக்கும் இருக்கின்றன
வாழ்க்கை மைதானத்தில்
பந்தாய் உதைபட்டு
மைதானத்திற்கு வெளியே
விழுந்த நினைவுகளில்
கண்ணீர் பேராறுகள் ஒடியுமிருக்கின்றன
நினைவுகளை சேமித்து வைத்திருக்கும்
இதயக் கலஞ்சியத்திலிருந்து
எடுத்து உண்டு அசைபோட்டுப் பார்க்கையில்
சில நினைவுகள்
ஆழ்கடலைப்போல
மிக அமைதியாகவே இருக்கும்
பல திமிங்கிலங்களை மறைத்து வைத்துக்கொண்டு
சில நினைவுகள்
அலைகளைப்போல் அடித்துக்கொண்டேயிருக்கும்
சில உலறுவாய்களை உதாரணமாக்கிக்கொண்டு
அணையாத சில நினைவுகள்
அகல் விளக்கைப்போல
இதயக்கோயிலில்
ஒளிர்ந்த வண்ணம் இருக்கவும் செய்கின்றன
சில நினைவுகள்
மழைக்கால விறகடுப்பைப்போல
புகைந்துகொண்டும் இருக்கின்றன
நினைவுகள்
கைரேகையைப்போன்றவை
ஆளுக்காள் வித்தியாசமானதாகவே இருக்கின்றன
நம் இதயங்கள் சிறைச்சாலை
என்பதனால்தான்
நினைவுகளை கைதியாக்கி அடைத்துவைத்திருக்கிறோம்
இதயங்களைப பள்ளிக்கூடங்களாக
மாற்றிவைத்துப் பார்த்தால்
நினைவுகள் புத்தகப்பையுடன்
ஒரு மாணாக்கனாய் வந்துநிற்கும்
நினைவுகள்
ஒரு கண்ணாடி மாதிரி
நம் பழைய முகங்களை
நமக்கே அடையாளம் காட்டுகின்றன
கசாப்புக்கடை வாசலில்
அறுவைக்காய் நின்று
அசைபோடும் மாட்டுக்கும்
எட்டாக் கிளையமர்ந்து
இசைபாடும் குயிலுக்கும்
நினைவுகள் இருக்கலாம்
நாம் அதை
நினைத்துப் பாராதிருக்கிறோம்
கல்வெட்டுக்களாய் இருக்கின்ற
வரலாற்றுப் பொக்கிசங்களில்
நேற்றைய மனிதனின்
நினைவுகள் வாழ்ந்த வண்ணம்
இருக்கின்றன
நினைவுகள் காற்றைப்போல
கண்ணுக்குத் தெரியாத போதும்
சுதந்திரமாக எங்கும் திரியக்கூடியவை
நாம் வீட்டுக்குள் அடைபட்டிருந்தாலும்
நினைவுகள் ஊரைச் சுற்றி வந்து விடுகின்றன
நம்மை நினைக்கக்கூடாதென
நினைத்துக் கொண்டிருப்பரையுமே
நினைத்துப் பார்க்கும்
நினைவுகள்
நமக்குச் சொந்தமானவை
நமக்குள் விழித்திருக்கும்
நினைவுகளுக்கு
நாமே தாலாட்டும் தாயாகினாலும்
அவை உறங்குவதில்லை
நாம்
நினைக்கக் கூடாதென
எந்த நினைவுகளும் இல்லை
நல்லதும் கெட்டதும்
நினைவுகளே..
கெட்டதை நினைத்து துன்ப்பப்படாமல்
நல்லதை நினைத்து நலம் பெறுவோம்
நினைவுகள்
நிம்மதி தந்தாலும்
தராவிட்டாலும் இதயத்திலிருந்து
ஒதுக்கிவைத்து வாழமுடியாது
அனுபவங்களைப் பக்கங்களாய்க் கொண்டு அமைக்கப்பட்ட
புத்தகமாய் இருக்கும்
நினைவுகள்
பக்கங்கள் விரிய விரிய சுவாரசியமுள்ள
நாவலாகி சுவைகூட்டும்
வல்லமை கொண்டவை
வாசிப்பு எல்லோருக்கும் அவசியம்
வாருங்கள் ..
நினைவுகளை வாசிப்போம்
கூடவே நேசிப்போம்
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Sep-23, 1:50 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 131

மேலே