ஜாலங்கள்
ஜாலங்கள்
இதனை நல்ல தமிழில் சொல்லவந்தால் மந்திரம், தந்திரம் (magic, trick ) என பொருள் படுகிறது நம் பேச்சு மொழி வழக்காக “படம் காட்டுதல்” அல்லது (பில்டப்) ஆங்கில வார்த்தையை போட்டு நிரப்பி கொள்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவைப்படும் திறமை இது. என்னதான் நீங்கள் திறமைசாலியாக இருந்தாலும் அதை வெளி உலகிற்கு எடுத்து செல்வது அவரவர்களின் இந்த ஜால வித்த திறமைகளில்தான் இருக்கிறது. அதுவும் இயந்திரமாக நான் இப்படி செய்தேன் அப்படி செய்தேன் என்று வாய் வார்த்தைகளை நீங்கள் வாய் வழியாக உரத்து இந்த உலகத்துக்கு சொன்னாலும் “போச்சு உங்களின் திறமைகள்”, அனைத்தும் காணாமல்தான் போய் விடுகிறது. அல்லது உங்கள் பின்னால் வருபவன், தன்னுடைய “ஜாலவித்தை” விளையாட்டால் உங்களை கவிழ்த்து தாண்டி போய் விடுவான்.
இதுதான் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம், வழியில் தெருவோர குடிநீர் குழாய் சரியாக மூடப்படாமல் தண்ணீர் ஒழுகி கொண்டிருக்கிறது. நீங்கள் இந்திய நாட்டு குடிமகன் என்பதால், அல்லது சமூக பொறுப்புள்ள ஒருவர் என்பதால் “தண்ணீர் வீணாகலாமா?” என்னும் எண்ணத்தில் அதை அடைத்து விட்டு உங்கள் வேலையை பார்க்க நடந்து செல்கிறீர்கள். உங்களுக்கு இது “சாதாரண செயல்” என்று மனதில் பட்டதால்.
அதே நேரம் அந்த செயலை செய்தவர் ஒரு “அரசியல்வாதியாகவோ அல்லது தன் புகழ் தேடி அலையும் யாரோ ஒருவராக இருப்பின் என்ன நடந்திருக்கும்?
அரசியல்வாதி ஒரு போட்டோ எடுத்திருப்பான், அங்குள்ள மக்களை திரட்டி இது போல செய்தால் நாட்டுக்கு எவ்வளவு நட்டம் என்பதை பத்து நிமிடம் கேட்பவர்கள் “காது சவ்வு கிழியும்” வரை பிரச்சாரம் செய்திருப்பான். தன் புகழ் தேடி அலைபவன் அன்றைய மாலை செய்தி தாளில் வரும் அளவுக்கு அதை பெரிது படுத்தி இருப்பான். அதை நாம் படித்து விட்டோ, அல்லது பார்த்து விட்டோ உணர்ச்சி வசப்பட்டு நாட்டில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு காரணமே இதுதான் என்னும் எண்ணத்துக்கு வந்திருப்போம்.
நாளை நாட்டை காப்பாற்ற துடிக்கும் குடிமகனாக கூட அவனை தேர்தல் காலத்தில் நினைத்து கொள்வோம். இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் எந்த வேலை செய்வதாக இருந்தாலும் அதை “பிரபலமாக்கும் அளவுக்கு” செய்தீர்கள் என்றால் உங்களை நாடு அதாவது நம் மக்கள் உயர்ந்த இடத்தில் வைத்து விடுவார்கள். அதே நேரத்தில் எந்த ஜாலங்களும் (ஆங்கிலத்தில் பில்டப்) செய்யாமல் உங்களது கடமை அது எனும் அளவில் அந்த செயலை கச்சிதமாக செய்து முடித்து விட்டால்…! விட்டால் என்ன? யாரும் உங்களை சீந்த கூட மாட்டார்கள். உலகமும் அதாவது நம் மக்கள் நம்பவே மாட்டார்கள்.
இப்படி சொலவதை உங்களால் ஏற்று கொள்ள முடியாமல் இருக்கலாம், நீங்கள் தினமும் “சமூக வலைத்தளங்களில்” பார்த்திருக்கலாம், ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் தானம் (கொஞ்சமாய்) இருந்தாலும் அதை எப்படியெல்லாம் (ஓரு பிண்ணனி இசையையும் போட்டு). அதை பார்க்கும் நாம் ஒரு நிமிடம் கலங்கி போய் (மூக்கிலா கண்ணிலா) தெரியாமல் வரும் நீரை கைகுட்டையால் ஒற்றி எடுத்து கொள்கிறோம். ஒருவர் சாதாரணமாக இந்த செயலை செய்து விட்டு போயிருந்தால் நாம் கண்டு கொள்வோமா?
சரி அதை விடுங்கள் நம்மையே எடுத்து கொள்வோம், அரசாங்கத்தில் நம் சொந்த விசயமாக ஒரு அனுமதி வேண்டி இருக்கிறது, அங்கு போனவுடன் அங்கிருக்கும் ஊழியர் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் (அதுவும் உடனே) செய்து கொடுத்து விட்டால் நம்மால் நம்ப முடிகிறதா? அவர் உண்மையில் அங்குள்ள ஊழியர்தானா? என்னும் சந்தேகப்படும் அளவுக்கு கூட போய் விடுகிறோம்.
இப்படித்தான் மருத்துவரிடமும் நடந்து கொள்கிறோம் “உங்களுக்கு ஒன்றுமில்லை” என்று சொன்னால் நாம் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்றே முடிவு செய்து கொள்கிறோம்.
அண்மையில் நகைச்சுவை பேச்சாளர் (நல்ல தமிழறிஞர், தமிழாசிரியர்) (உண்மையில் பெயர் ஞாபகம் வரவில்லை) அவர் சொன்னது அவர்கள் ஊர் தஞ்சாவூர் பக்கம் திருவையாறு, ஒரு முறை தனது நண்பரான மருத்துவரை பார்க்க சென்றிருக்கிறார். ‘அந்த ஏரியாவில்’ பேர் பெற்ற மருத்துவர் கூட, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இவருக்கு தெரிந்தவர் தன்னுடைய அம்மாவை அழைத்து (படுக்கையில் வைத்து) மருத்துவரை பார்க்க வந்திருக்கிறார். வரும்பொழுதே அம்மாவின் உடல் நிலை அபாயகட்டத்தில் இருந்தது. சோதித்து பார்த்த மருத்துவர் “ அம்மாவுக்கு வேணுங்கறதை கொடுங்க, யாரையாவது பார்க்கணும்னா கூட்டிட்டு வந்து காட்டுங்க” மறைமுகமாக அவரின் இறுதி யாத்திரியை சொல்லியிருக்கிறார். அதை கேட்ட அவரின் மகன் டாக்டர் “எங்க அம்மாவை தஞ்சாவூருக்கு கூட்டிட்டு போகட்டுமா? என்று கேட்டிருக்கிறார்.
டாக்டர் போகும் வழியில் ஒரு ஊரை குறிப்பிட்டு அங்க வரைக்கும் தாங்கும் என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் நடந்து ஐந்தாறு மாதங்கள் கழித்து நம் தமிழாசிரியர் அந்த நண்பரை வழியில் யதேச்சையாக பார்த்திருக்கிறார். பார்த்தவுடன் அவருக்கு ஞாபகம் வந்தது “அன்று அம்மாவை மருத்துவரிடம் கூட்டி வந்தது. என்னப்பா அம்மாவுக்கு எப்படி இருக்கு? அதற்கு அந்த நபர் சொல்லியிருக்கிறார் “அந்த டாக்டர் கருநாக்கு படச்சவன் சார்” அவன் சொன்னமாதிரியே எங்கம்மா அந்த ஊரு வரும்போதே செத்து போயிட்டாங்க”
இங்கு யோசியுங்கள், மருத்துவரின் குறையா இது? நம்மின் குறைதான், அந்த மருத்துவர் அந்தம்மாவை “படோபடமாய் படுக்கையில் சேர்த்து பலதும் பண்ணி” கடைசியில் மரணத்தை அறிவித்தால் நாம் மெளனமாய் அதை ஏற்று கொள்கிறோம்.
அவரே மற்றொரு நிகழ்வை சொன்னார், அவரின் மாணவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனுக்கு சான்றிதழ் கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை. இவருக்கு துக்கம், அவனோ நீங்க எதுக்கு சார் கவலைப்படறீங்க? என்னை அனுப்பிச்சிடுங்க சார், என்று இவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறான்.
ஏழெட்டு வருடங்கள் ஓடியிருக்கும் யதேச்சையாய் இவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய அந்த மாணவன் சார் நல்லாயிருக்கீங்களா? இவர் அடையாளம் தெரியாமல் விழிக்க அவன் அன்னைக்கு எனக்கு “டிசி” கொடுத்து அனுப்பிச்சீங்கில்லை” ஞாபகப்படுத்தினான். அவருக்கு ஞாபகம் வர மகிழ்ச்சியாய் இப்ப என்ன பண்ணிகிட்டிருக்கே? அவன் சார் “டவுன்ல” ஜெராக்ஸ் கடை வச்சிருக்கேன் என்றவன், அவரை வம்புகட்டாயமாக காரில் ஏற்றி தன் கடைக்கு கூட்டி போகிறான்.
அவன் கடையில் நல்ல கூட்டம், இவன் கடையை போல் இரண்டு மூன்று கடைகள் அருகில் இருந்தாலும் இதில் தான் கூட்டம். இவர் வியப்பாய் அவனை பார்க்க அவன் கடையின் முன்புறம் கூட்டி வந்து கடையில் இருந்த பலகையை படிக்க் சொல்கிறான்.
“இங்கு எல்லா மொழிகளிலும் ஜெராக்ஸ் எடுத்து தரப்படும்” என்று போட்டிருந்தது. மக்கள் அட பரவாயில்லையே, எந்த மொழியில் இருந்தாலும் எடுத்து கொடுப்பாங்க போலிருக்கு என்று குவிந்து விட்டனர்.
இதிலிருந்து எந்த செயலுக்கு ஒரு “ஜாலம்” காட்டினால்தான் நம்மை போன்றவர்கள் நம்புகிறார்கள் என்று தெரிகிறதல்லவா.
ஏன் நாம் படைக்கும் கதை கவிதை எதுவானாலும் இயல்பாய் எழுதி வாசிக்க கொடுப்பதால் என்ன நன்மை? வாசிப்பவர் கதையை படித்து “திடுக்” அல்லது அழுகை அல்லது வேறு ஏதேனும் உணர்ச்சிகள் வந்தால்தான் சார் அந்த படைப்புக்கு மரியாதை.
இதற்காகத்தான் இயற்கை மனிதர்களை படைத்து அவர்கள் இரசிக்க ருசிக்க மயங்க, இன்னும் பல உணர்ச்சிகளையும் அவனுக்குள் ஏற்படுத்தி தந்திருக்கிறது.