நல்லவன்

************
உள்ளதைச் சொல்லியே ஊரார் வெறுப்பதற்
குள்ளாகும் உத்தமக் குன்று
*
நல்லதைப் பேசி நலங்கெட்டுப் போவதில்
வல்லவராய் நின்றிடும் வார்ப்பு
*
கெட்டவர் பார்வையில் கேலிக்கூத் தாகியே
விட்டவர்தா னிந்த விளக்கு
*
ஏமாளி என்றொரு ஏளனப் பேச்சர்முன்
கோமாளிக் கூத்திவர் கூற்று
*
பொல்லாப்பு வாங்கும் பொதுநல வாதியாய்
எல்லா விடத்துமிவ ருண்டு
*
பட்டுத் தெளிந்துமிவர் பாங்குடன் சொன்னதை
விட்டு விடுமுலகின் வேம்பு
*
எருதுமேல் பெய்மழை என்பதா யானவர்
கருதிடா வெற்றிக் கனி
*
உண்மையும் நேர்மையும் உள்ளத்தே தூய்மையும்
கொண்டு நடந்திடும் குன்று
*
நல்லவர் போர்வையில் நாட்டில் நடப்பார்வாய்ச்
சொல்லினால் கொல்லும் சுடர்
*
முள்குத்தும் காலை முயன்று தடுத்தாலும்
உள்குத்துக் காளாகும் உப்பு
*
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Feb-24, 1:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 54

மேலே