கண்கள் தொடுக்கும் காதல் பாகம் 1
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் 1
காதலை சுமப்பது இரு மனங்கள் மட்டும் அல்ல,இரு மனங்களை சுமக்கும் பேருந்தும் தான்..இக் காதல் கதை பேருந்து பயணித்திலே தொடர்கிறது..
மறவர் குல மாமன்னன் உக்கிர பாண்டியன் கட்டிய கோமதி அம்மனின் கோபுரம் முடி சூடிட, மரக்கிளையும் விழுதுகளும் பிணைந்த கூந்தலாக காற்றிலாட, வானுயர்ந்த கட்டிடங்கள் ஆவரம் பூவாக முகம் மலர,காக்கை குயிலோசை வெள்ளிச் சலங்கை யோசையாக சினுங்க மங்கையாக உலாவரும் சங்கை மாநகரில்..
வானத்து இருளகற்றி பூமியில் ஒளிபரப்பும் சூரியன் விழித்திடும் காலை வேளையில், நட்சத்திரப் பூக்களாக பூத்துக் குலுங்கும் கல்லூரிப் பெண்கள் நிறைந்து ததும்பிட,சர்க்கரையை தேடித் திரியும் எறும்புகள் கூட்டமாக கல்லூரி மாணவர்கள் கூட்டம் அலைமோதும் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில்...
காதலுக்கு முன்னோடி முருகன், முருகனுக்கு வாகனம் மயில்வாகனம்..நம் கதையின் காதலரை சுமக்கும் சங்கை முதல் நெல்லை செல்லும் பேருந்தின் பெயரும் மயில்வாகனமே..
குமரிக் கடலில் மெல்ல மேலேறும் கதிரவனைப் போன்று சிறகடித்து பறக்கும் மயில் படம் பதித்த பேருந்து மெல்ல பேருந்து நிலையத்திற்குள் வந்திடவே.. பேருந்திலிருந்து
காய்கறி மூட்டைகளோடு தோல் மெலிந்த உழவர் குடி காதலர்கள் பேருந்தை விட்டு இறங்கிட..
கல்லூரிக் கன்னிகளும் காளையர்களும் பேருந்தில் ஏறிடவே பேருந்தின் ஒலி நாடா இயங்கி பாக்யராஜின் மெளனகீதம் " ..மூக்குத்தி பூமேலே..
காத்து உக்காந்து பேசுதம்மா….
ம் ம்ம்.. " பாடல் காற்றில் கலந்து காதை வருட கன்னியரும் காளையரும் பறக்க விட்ட பார்வையில் சிலர் ஜோடிப் புறாவைத் தேட,சிலர் நல் தோழமைகளைத் தேட..
மாணவ மாணவிகளின் உடைகளில் வண்ணத்துப்பூச்சியாக மாறிய பேருந்து மெல்ல நகர்ந்து பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியே..
பேருந்து கோமதி அம்மன் கோவில் வாசலில் வந்திடவே ..நம் கதையின் நாயகன் கெளதம் நின்றிருந்தவன் கோபுரத்தினை நோக்கி வணங்கிட மெல்ல குனிந்த போது கண்டான், பேருந்தின் ஜன்னலோர சீட்டில் அவனது தேவதையை .....
..... தொடரும்
-சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்,
மேலக்கலங்கல்,
தென்காசி மாவட்டம்..