இறுகிக் கிடந்த உள்ளம்

காலை சிற்றுண்டியும், மதிய சாப்பாட்டிற்குத் தேவையான உணவையும் ஆக்கி வைத்து விட்டு, சோற்றுக்கு வழிவகுக்கும் தரும் கைத்தொழிலாம் பீடி சுற்றும் வேலையைத் தொடங்க வேண்டும் என்னும்
அவசரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மீனாட்சியால், படுக்கை அறையில் ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியின் ஓசையினைக் கேட்க முடியவில்லைதான். வேலைகளை முடித்து , அதனை அதன்அதன் இடத்தில் மூடி வைத்துவிட்டு, வெளியே வந்தபொழுதுதான் அந்த அலை பேசிக் குரல் காதில் விழுந்தது.
‘யார் ‘ இந்த நேரத்தில் கூப்பிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டே, சற்று வேகமாக நடந்து சென்று, செல்லை எடுத்து காதில் வைத்து
‘யாரு ‘ என்றாள் மீனாட்சி.
‘அம்மா ! நான்தாம்மா மயில் பேசுறேன் ‘ என்ற குரலைக் கேட்டதும், ஒருகணம் இதயமே நின்றுவிட்டது போல் உணர்ந்தாள்.
தனது முதல் மகளான மயிலை ,சென்னையில் வேலையில் இருந்த அவளது கணவர் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்து இன்னும் முழுசா ஒரு வாரம் கூட ஆகவில்லை , அதற்குள் கூப்பிடுகிறாளே, எதற்காக இருக்கும், இப்போ என்ன குண்டைத் தூக்கிப் போடுவாளோ என்று துடித்தது அவளது இதயம்.
ஏன்னா ? திருமணமான ஆறு மாதத்தில் , இதுவரை ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ஐந்து முறை இங்கே வந்துட்டாள். ஒவ்லொரு முறையும் ,அவளுக்குத் தேவையான எதையாவது வாங்கிக் கொடுத்து ,சென்னையில் கொண்டு விட்டுவிட்டு வந்திருக்கிறாள் மீனாட்சி. அதற்காக அவ்வப்போது வாங்கி வைத்த கடனே இன்னும் அடைந்த பாடில்லை..இன்னும் கடன் வாங்க வேண்டுமென்றால் , அவளுக்குப் பயமாக இருந்தது. பட படத்த உள்ளத்தோடு,
‘சொல்லுடி என்ன செய்தி ? என்றாள்.
‘பெரிசா ஒண்ணுமில்லைம்மா… ‘ என்று சற்று இழுத்தாள் மயிலு.
‘சொல்லுடி.. சும்மா கூப்பிடமாட்டியே… அதான் கேட்டேன் ‘
‘ஊரில் இருக்கும் போது திருநெல்வேலியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக மனு போட்டிருந்தேன்… இப்போ நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி செய்தி அனுப்பி இருக்காங்க… அதான் அங்கே வரவேண்டி இருக்கிறது என்று சொல்லத்தான் கூப்பிட்டேன் ‘
ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வர்றேன்னு சொல்றவளை வரவேண்டாமென்று எப்படிச் சொல்லறது என்று தயங்கியவள்,
‘ சரி சரி வா . எப்போ வரப்போறே ? தனியா வரியா ? இல்லை வீட்டுக் காரரோடு சேர்ந்து வர்றீயா ? ‘ என்றாள்.
‘ அவருக்கு விடுமுறை கிடைக்காதாம் .அதனாலே நான் மட்டுந்தாம்மா வர்றப்போறேன்.’
‘சரி !சரி ! கிளம்பும் போது சொல்லு . வேற் ஏதாவது சொல்லணுமா?’ என்று சற்று சலிப்போடவே கேட்டாள்.
‘இல்லைம்மா..வச்சுடுறேன் ‘ என்று கூறிவிட்டு பேச்சைத் துண்டித்து விட்டாள்.
மீனாட்சிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியது. இன்னும் எவ்வளவு கடன் வாங்க நேருமோ என்னும் கவலையோடு, அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

சொன்னாளே தவிற ,மறுநாளே வந்து நிற்பாள்ன்னு மீனாட்சி நினைக்கவில்லை.
வந்தவள் வேலை சம்பந்தமாக எதுவும் கூறவில்லை. வழக்கம் போல குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, செல்லில் பேசுவது என்று பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்தாளே தவிற, , வேறு எதுவம் செய்யவில்லை. வீட்டு வேலையில் அம்மாவுக்கு உதவி செய்யவேண்டும் என்னும் எண்ணம் துளி கூட அவளிடத்தில் இல்லை.
ஒரு வாரம் ஓடிவிட்டது. மீனாட்சிக்கு இலேசாக சந்தேகம் வரத் தொடங்கியது. உண்மையிலேயே இவள் வேலைக்காகத் தான் வந்திருக்கிறாளா ? இல்லை எப்போதும் போல் வீட்டுக்காரனுடம் சண்டை போட்டுவிட்டு வந்திருக்கிறளா ? எப்படி அவளிடம் கேட்பது ? அப்படியே கேட்டாலும், ஒழுங்காகப் பதில் கூறுவாளா ? ஏட்டிக்குப் போட்டியாகத் தானே பதில் சொல்லுவாள்… எப்படியும் கேட்டுத்தானே ஆகவேண்டும் என்று எண்ணிக்கொண்டு,
‘ஏண்டி மயில் ! என்ன செய்யுரே ‘என்றாள் மீனாட்சி.
‘என்னம்மா செய்யுறது.. வேலைக்கான தேர்வுக்காகப் படித்துக் கொண்டு இருக்கிறேன்’ என்றவள் பக்கத்தில் இருந்த நூல் ஒன்றை எடுத்துப் பிரிக்கத் தொடங்கினாள்..
மீனாட்சிக்கு சுத்தமா படிக்காத் தெரியாது.பிள்ளைகள் சொல்வதை அப்படியே நம்பி விடுவாள். படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று நம்புக்கொண்டு இருப்பவள்.
‘ ஏண்டி …என்றைக்கு தேர்வு எழுதப் போகணும் ?’
‘போகணும் ‘ என்று ஒரு மாதிரி இழுத்தாள்.
அப்படி அவள் இழுப்பதைப் பார்த்த மீனாட்சிக்கு ஏற்கேனவே ஏற்பட்டிருந்த சந்தேகம் இன்னும் அதிகமானது.
‘என்னடி இழுக்கிற ஏதாவது சொன்னாத் தானே போயிட்டு வர செலவுக்கு பணம் புரட்ட முடியும். நீ பாட்டுக்கு வாயை மூடிட்டு இருந்துட்டு , திடீரின்னு வந்து பணம் கொடுன்னா நான் எங்கேடி போய் கேட்கிறது.. இல்லை உன் வீட்டுக்காரன் கிட்ட செலவுக்குன்னு பணம் வாங்கிக்கிட்டு வந்திருக்கியா ?’
என்ன சொல்லித் தொலைக்கப் போறாளோ என்று நெஞ்சம் படபடன்னு
அடிக்கத் தொடங்கியது.
‘இப்போ உனக்கென்னமா தொல்லை.. ஏதாவது வேணுமுன்னா சொல்ல மாட்டேன்னா.. ஏம்மா அப்பப்போ கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணுறே..’ என்றவளின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்தாள் மீனாட்சி.
‘ஆமாண்டி.. ஏன் பேச மாட்டே.. தினந்தினம் பீடி சுற்றி உழைச்சுதாண்டி உன்ன படிக்கவைச்சு கட்டியும் கொடுத்திருக்கேன்.. அந்த வலி என்னன்னு எனக்குத்தாண்டி தெரியும் என்றவளை இடைமறித்த மயிலு,
‘கல்யாணந்தான் பண்ணி துரத்தி யாச்சே…பின்னே ஏண்டி இங்கே வந்து கிடக்குறேன்னு கேட்கிறியா ? ‘ என்றாள்.
‘அப்படி இல்லடி.. கொஞ்சமாவது மத்தவங்க நிலைமைய நினைச்சுப் பாருன்னு சொல்றேன்… அடுத்தவளும் கல்யாணத்துக்குக் காத்து நிற்கிறான்னு புரிஞ்சுக்கோடி…அதுக்கும் நாலு காசு சம்பாதிக்க வேண்டாமாடி…’ என்றவளுக்கு தொண்டை அடைத்து, குரல் கரகரக்கத் தொடங்கியது.
‘அதை ஏம்மா என்கிட்ட சொல்லுறே…’
‘நீ தாண்டி மூத்தவா..உன்கிட்ட சொல்லாமா..வேறு யாருட்டடி சொல்லச் சொல்றே..’
இப்போ என்னதான் செய்யணுமுன்னு சொல்ல வர்றே..’
‘என்னத்தச் சொல்லுறது.. கல்யாணமான இந்த நாலு மாசத்துல இரண்டு மாசத்துக்கு மேலே இங்கே தான் இருக்கிறே.. அதுவும் தனியா வந்துடுறே…’
‘ஏன் தனியா வரக்கூடாதா ? ‘
‘நீ தனியா வந்து தங்குறதா பார்த்துட்டு ஊருல நாலு பேரு நாலு விதமான பேசுறாங்க தெரியுமா ?’
‘வாய் உள்ளவங்க பேசத்தான் செய்வாங்க.. அதுக்கு நீ ஏம்மா பயந்து சாகுற ‘
‘அடிக்கடி வீட்டுக்காரனோட சண்டை போட்டுட்டு வந்துடுறேன்னு பேசுறாங்கடி… எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா ?’
‘ புதுசா கல்யாணம் ஆன ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு வாழுறதுக்கு கொஞ்ச நாள் ஆகத்தாம்மா செய்யும் ..’
‘அதுக்காக அப்பப்போ வீட்டுக்காரர தனியா விட்டுட்டு வந்திடுவியா ?’
‘அவரு என்ன சின்னப் பிற்றையாம்மா… எல்லாம் அவருட்ட சொல்லி அனுமதி வாங்கிட்டுத்தான் வர்றேன். அதுவும் தப்புன்னு சொல்லுறீயா ?’
‘’அதில்லடி வந்தோமா வேலையை முடிச்சோமா.. கிளம்பிப் போனோமான்னு இருக்கணுடி.. இல்லைன்ன வீட்டுக்காரரோட வந்து தங்கணும். அது எனக்கும் பெருமையா இருக்கும் ..’
‘நீ தானேம்மா பணத்துக்கு சிரம்மா இருக்குது சொல்றே ‘
‘அதுவும் உண்மைதான்டி.. இருந்தாலும் கௌரவமுன்னு ஒண்ணு இருக்குதுல்ல..
‘முடிவா என்னம்மா சொல்றே.. வந்தியா வேலையை முடிச்சியா ..வீட்டுக்காரனோட போய் இருன்னு சொல்றே..அப்படித்தானே..’
‘புரிஞ்சுக்கிட்டா சரி ‘ என்றவள் பீடித்தட்டைத் தூக்கிக் கொண்டு வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து பீடி உருட்டத் தொடங்கினாள்.

மயிலுக்கு அம்மா சொல்லியதைக் கேட்டு மனதுக்குள் எந்த உறுத்தலும் உண்டாகவில்லை.. வழக்காமான ஒன்றாக எண்ணிக்கொண்டு ஏற்கெனவே பிரித்திருந்த கதைப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினாள்.
ரேசன் கடைக்குப் போய் பொருட்களை வாங்கி வந்து வைத்துவிட்டு ,பீடி உருட்ட உட்கார வேண்டுமென்ற எண்ணத்தோடு பையினை எடுத்துக் கொண்டு வாசலைத் தாண்டியபோது ,மயிலோட வகுப்புத் தோழி மல்லிகா வந்தாள்.
‘வாடியம்மா மல்லிகா.. எப்படி இருக்கே ? அம்மா எப்படி இருக்காங்க..’
‘நல்லா இருக்காங்க ..மயிலு இருக்காளா? ‘
‘உள்ளேதான் இருக்கா..நீ போய் பேசிட்டு இரு..நான் ரேசன் கடை வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்..’ என்றவள் ,உள்ளே திரும்பி,
‘ஏய் மயிலு உன் தோழி மல்லிகா வந்திருக்கா பாரு ..’ என்று மகளுக்கும் ஒரு குரல் கொடுத்துவிட்டு வேகமாக நடையைப் போட்டாள்.

நல்லவேளையாக கடையில் கூட்டமில்லை.போனவுடன் சட்டென எல்லாம் முடிந்துவிட்டது. பொருட்களை அதனதன் பைகளில் நிரப்பிக்கொண்டு,வீட்டிற்கு ஓடாத குறையாக வந்து சேர்ந்தாள். வாசலில் பைகளை இறக்கி வைத்துவிட்டு, கதவைத் தட்டலாம் என எண்ணிய போது உள்ளே இருந்து மயிலும் ,மல்லிகாவும் பேசிய பேச்சுகள் அவள் காதில் விழுந்தன.
‘கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதே ? போனமாதந்தானே உன்னை உன் கணவன் வீட்டிலே கொண்டு விட்டுட்டு உன்னோட அம்மா வந்தாங்க..அதற்குள்ளே என்ன அவசரமுன்னு திரும்பவும் கிளம்பி வந்துட்டே ‘
‘அடி போடி..அங்கே பகல் முழுதும் தனியாகவே இருக்கிறது பிடிக்கலைடி ரொம்ப எரிச்சலா இருக்குதடி..’
‘என்னடி இப்படிச் சொல்றே… நீதான் படிச்சிருக்கியே , ஏதாவுது வேலைக்குப் போகவேண்டியது தானே ? சம்பளம் கிடைச்ச மாதிரியும் இருக்கும். உனக்குப் பொழுது போனது மாதிரியும் இருக்குமில்லா ..’
‘அதான்டி பிரச்சனை..அம்மா கட்டாயப் படுத்துறாங்களேன்னு படிச்சேனே தவிற, ஒரு வேலைக்குப் போகணுமுன்னு நான் நினைச்சுப் பார்கவே இல்லடி..விருப்பமும் இல்லடி…’
‘ சரி விடு .. உன் வீட்டுக்காரர் பொறியியல் கல்லூரியில் தானே ஆசிரியராக வேலை பார்க்கிறார்.. அந்த சம்பளத்தை வைச்சுட்டு நிம்மதியாக இருக்க வேண்டியது தானே.. கல்யாணமுன்னு ஆயிட்டா நாமும் சில வற்றை விட்டுக் கொடுத்துதான் வாழப் பழுகிக்க வேணும்.. எல்லாமே நாம எதிர்பார்க்கிற படிதான் இருக்கணுமின்னு நினைக்கக் கூடாது..’
‘அடா நீ ஒண்ணு… கல்யாணம் கூட நான் ஆசைப்பட்டது மாதிரி நடக்கலடி ‘
‘ என்னடி சொல்றே ?’
‘ஆமாண்டி.. எனக்கு படிக்கிறதுக்கே ஆர்வம் இல்லை.. அம்மை ஆசைப் படுறாங்களேன்னு படிச்சேன். ஆனா என்னால படிச்சு பட்டம் வாங்க முடியல..முடிச்சுட்டேன்னு பொய்யைச் சொல்லி ஏமாத்திட்டு இருக்கேன்..’
‘ஏண்டி பாவி இதுல கூட பித்தாலட்டம் பண்ணி இருக்கே.. உங்க அம்மாவைப் பார்த்தா பாவமா இருக்குடி..’
‘சில சமயம் எனக்கே கூட அப்படித்தான் தோணும் ‘
‘உண்மையைச் சொல்லிட வேண்டியது தானே ?’
‘முடிச்சாச்சுன்னு சொல்லி கல்யாணமும் பண்ணியாச்சு …’
‘பாவன்டி ..உன் வீட்டுக்காரர் ‘
‘ நான் அப்பவே இந்தக் கல்யாணம் வேண்டாம், மாமாவையே கட்டிக்கிறேன்னு சொன்னேன். ஆனா கேட்டாத்தானே.. இவ்வளவு படிச்சுட்டு ஒரு பத்தாம் வகுப்பு படிச்சவனுக்கு எப்படிடி கட்டிக்கிறதுன்னு சொல்லி .என்னை இந்த மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்துட்டாங்க.. இப்போ இந்தக் கல்யாணம் மனசுல ஒட்டவே மாட்டேங்குதடி…’ என்ற மயிலின் வார்த்தைகளைக் கேட்ட மல்லிகா அதிர்ந்தே விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனைக் கேட்ட மீனாட்சிக்கு வானமே இடிந்து தலையில் விழுந்தது போல் இருந்தது. ஐயோ தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போடுகிறாளே என்று துடித்துப் போனாள். இவளது மனப்போக்கை எப்படி மாற்றி இவளை வாழ வைக்கிறது என்று புரியாமல் தவித்து நின்றாள். நாள்கள் ஓடின.

ஒருநாள் சோம்பிக் கிடந்த மயிலை எழுப்பி ,சாப்பிடச் சொல்லலாம் என்று ,அறையினுல் நுழைந்தாள். அவள் நன்றாக தூங்கிக் கொண்டு இருக்க, அவளது அலைபேசியின் மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. மயிலுக்குத் தூக்கம் கலையக் காணோம். சரி எடுத்து யார் என்று பார்க்காலம் ,என்று எடுத்துக் காதில் வைக்க மாப்பிள்ளையின் குரல் ஒலித்தது.
‘யாரு மாப்பிள்ளையா ? நான் தான் அத்தை பேசுறேன்.. மயிலு நல்லா தூங்கிட்டு இருக்கா ..அதான் நான் எடுத்தேன்.. இதோ ஒரு நிமிடம் இருங்க அவளை எழுப்புறேன் ‘ என்றாள்.
‘அவளை எழுப்ப வேண்டாம். உங்களிடமே சொல்லி விடுகிறேன். நீங்கள் அப்புறமா
அவளிடம் கூறுங்கள் ‘
‘சரிங்க மாப்பிள்ளை ‘ என்று மீனாட்சி சொல்லும் போதே குரல் கேட்டு, மயிலும் விழித்து விட்டாள்.
‘என்ன மாப்பிள்ளை.. அமெரிக்காவில் வேலை கிடைச்சுடுதா ? எப்போ கிளம்பணும்… என்னது மயிலையும் அழைச்சுட்டுப் போகணுமா ? பாஸ் போர்ட் எடுக்கணுமா ? மயிலை உடனே அனுப்பணுமா ? கொஞ்சம் பொறுக்க மயிலுட்ட குடுக்கிறேன் நீங்களே விவரமா சொல்லிடுங்க.. மாப்பிள்ளை.. ‘ என்று அலைபேசியை மயிலு கையில கொடுத்தாள்.காதில் வைத்துக் கேட்டவள்,
‘அப்படியா ? சரிங்க .. நான் உடனே கிளம்பி வர்றேன் ‘ என்று கூறிவிட்டு ,அலைபேசியை அணைத்தாள்.
‘ அம்மா ! நாளைக்கே நான் கிளம்புறேன்.’ என்றவளின் முகத்தில், இருந்த புன்னகையைக் கண்டபோது, இதுவரை மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் இறங்கி, பஞ்சு போல் இலேசாகிப் பறக்கத் தொடங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (8-Apr-24, 6:34 pm)
பார்வை : 64

மேலே