புத்தக தினக் கவிதை

📚📚📚📚📚📚📚📚📚📚📚

*புத்தகம் தின*
*சிறப்பு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

📚📚📚📚📚📚📚📚📚📚📚


#புத்தகம்....

வாசித்தவர்களுக்கு
வரிகள் தான் தெரியும்... நேசித்தவர்களுக்கு
வசந்தங்கள் புரியும்.....

அது ஒரு
அகல் விளக்கு
அதில்
அனுபவத்தீபங்கள்
எரிகிறது...
அருகில்
வைத்துக் கொள்
உன் வாழ்க்கை
பிரகாசமாகும்.......

அது ஒரு
திசை காட்டும் பலகை
அருகில் சென்று வாசி...
நீ தடம்
மாறும் போதெல்லாம்
உன்னைத்
தடுத்து நிறுத்தி
நல்வழி காட்டும்....

அது ஒரு மயில்
முருகன்
உலகைச் சுற்றி வந்து
ஞானம் பழம் பெற
காரணமாய் இருந்த
மயிலை விட
உயர்வான மயில்....
ஏனெனில் ?
இந்த மயில்
ஞானப்பழத்தை அல்ல
ஞானத்தையே
பெற்றுத்தரும்......!!!

அறிஞர் அண்ணா முதல்
டாக்டர் அம்பேத்கர்
வரையிலான
ஆலமர
விருட்சங்கள் எல்லாம்
இந்த வித்துக்களில்
இருந்து தான்
வேர் விட்டு வளர்ந்தது.....!!

பகத்சிங் முதல்
சேகுவேரா வரையிலான
புரட்சி எரிமலைகள் எல்லாம்
இதன் பக்கங்களில் தான்
வெடித்து சிதரியது......!!!

அதன் முன் மண்டியிட
நேரம் ஒதுக்கு....
அப்போதெல்லாம்
நீ
ஆசீர்வாதிக்கப்படுவாய்...!!

அதன் மீது
தூசி படியாமல்
பார்த்துக் கொள்
நீ
பரிசுத்தம் அடைவாய்...!!

உனது புறத்தை
தூய்மைப்படுத்தும்
நீர் போல்.....
அது
உனது ஆன்மாவை தூய்மைப்படுத்தும்.....!

நல்ல புத்தகங்களை
வீட்டில் வாங்கி வை...
அது உன் வீட்டை
அழகாக அல்ல....
ஆலயமாகவே மாற்றிவிடும்...!

உனது பணத்தை
புத்தகமாக
சேமித்து வை......
நாளை
நீ விழ நேர்ந்தால்
கைக்கொடுத்து
தூக்கி விடும்........!!

அமைதியைத் தேடி
உலகெங்கும்
அலைகிறாய்.....
அது புத்தகங்களின்
பக்கங்களில்
ஒளிந்து இருப்பதை
அறியாமல்........!!

படிக்க நேரமில்லாமல்
போனாலும்
அதை உற்று நோக்கு
அதன் மௌனம்
உன்னை
அர்த்தமாக மொழிபெயர்க்கும்...!!

பணத்தை நேசித்தால்
பணமாக முடியாது
பொன்னை நேசித்தால்
பொன்னாக முடியாது
ஆனால்
புத்தகத்தை நேசித்துப்பார்
புத்தகமாவாய்......!!

புத்தகங்களோடு
பேசி
பழகி நட்புக்கொள்
அது உன்னை
"மகானாக" மாற்ற விட்டாலும்
நிச்சயம்
"மனிதனாக" மாற்றும்....!!!

*கவிதை ரசிகன்*

📚📚📚📚📚📚📚📚📚📚📚

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-Apr-24, 8:56 pm)
பார்வை : 23

மேலே