உயிர்ப்பு - 3

உயிர்ப்பு - 3
…………………..

நேரம் நகர்ந்து கொண்டேயிருந்தது…

சுற்ற நின்றவர்களெல்லாம் தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்களேயொழிய
மேற்கொண்டு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையும் தவிப்புடனே பார்த்துக் கொண்டே படுக்க வைத்திருந்த தகப்பன் அருகே வந்தாள்.

சலனமின்றிக் கிடந்த முகத்தை உற்று நோக்கிக் கொண்டவள் உள்ளம் வெடித்தது.

“நாங்கள் துடித்துப் போவோமென்று தெரியாதா உமக்கு…கொஞ்சம் கவனமாக இருந்திருக்கக் கூடாதானீர்…!” என்று வெம்பினாள்.

பின் திண்ணையின் அருகிருந்த வாயிற் கதவினருகே ஒடுங்கி உட்கார்ந்து தன் தகப்பனி்ன் கால்களையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

தடித்துத் திரண்டு தினம் சேறு கண்ட அப்பாதங்கள் உணர்த்தின தகப்பன் உழைப்பின் உன்னதம்.

கட்டெறும்பொன்று ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது அப்பாதத்தில் அதைக் கூட உணராது கிடந்தவரின் நிலையெண்ணிப் பரிதவித்தவள் ‘வெடுக்’கென எழுந்து அழுந்தத் தட்டிவிட்டாள்.

பின் என்ன நினைத்தாளோ…. வாசல் தாண்டி சுவாமியறையினுள் ஓடி வந்தவள், மூச்சுவாங்க… வரிசையாக சாமிப் படங்கள் அடுக்கப்பட்ட சாமி மாடம் முன்னின்று நடுங்கிய கரம் கோர்த்து உருகி…

“கடவுளே….! என் அப்பனை எப்படியாவது காப்பாற்றிவிடு!

அப்பன் சொல் தட்டாமல் கடைசி வரை நான் இருப்பேன்.” என வேண்டிக் கொண்டாள்.
கண்ணீர் கோடாய் இறங்கிக் கொண்டிருந்தது கன்னத்தில்.

பின் மாடத்திலிருந்த திருநீற்றுத் தட்டில் கை பதித்து தகப்பனருகே வந்தவள், முகத்தருகே குனிந்து அதனை அவன் நெற்றியிலிட்டாள். அவளுக்குத் தெரிந்த உலகமகா வைத்தியம் அதுதான்.
அதனைச் செய்து விட்ட
ஆழ்ந்த பெருமூச்சொன்று அவளிடம் வெளிப்பட்டது.

சுவர் மணிக்கூடு மணி பதினொன்று என அடித்துரைத்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மா வந்து விடுவாள். ஆனாலும் வந்ததும் அவள் பதறப் போவதை நினைத்தால் அடி வயிறு கலங்கியது. அப்பன் எவ்வளவு அமைதி சொரூபியோ அதற்கு நேர்மாறு அவள்.

மனம் போலவே கால்களும் ஓரிடத்தில் நில்லாது முற்றம் நோக்கி மீண்டும் நகர்ந்தது.

அவர்கள் எல்லோரும் கூட்டாமாகச் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் இப்போது.

அவர்களுக்குத் தெரிந்து இருக்கலாம் இது போன்ற சூழ்நிலையை எப்படிக் கையாள்வதென்பது என்று அவளுக்குத் தோன்றியது.

கேட்டறியத் தயங்கிய அவள் சுபாவமும் மனதும் அவர்கள் முகரேகைகளை ஆராய்ந்து கொண்டே தகப்பன் கால்மாட்டுக் கதவுநிலையில் மீண்டும் தஞ்சம் கொண்டது.

ஏதாவது அசைவிருக்கின்றதா எனப் பரிசோதித்தது மனது… இப்பவும் அவர் பாதம் பட்ட சாறன் மட்டுமே காற்றிலசைந்து கொண்டிருந்தது.

……………,

சோர்வு மேலிட உணவின்றியிருந்த அவள் உடல் கண்ணயர்ந்து பக்கம் சாய்ந்தது.

………………..

…………..

திடீர்த் தும்மல் ஒலி கேட்டு சட்டென விழித்தவள்… முன், முகவாயை துடைத்த படி சாய்வாக எழுந்த தகப்பனைக் கண்டதும் விம்மல் வெடிக்க பின்புறம் திரும்பி….

“மாமா….! அப்பா எழும்பீற்றார்….” என்று
கதறிய படி தாவித் தகப்பனை அணைத்துக் கொண்டாள்.

அன்று மீள உயிர்த்தது ஒரு விவசாயி மட்டுமல்ல அவன் பிரிய மகளும்.

🍀

எழுதியவர் : நர்த்தனி (13-May-24, 4:39 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 25

மேலே