பாடம் ஒன்றுண்டு
பாடம் ஒன்றுண்டு....!
03 / 12 / 2024
நிலைக்கண்ணாடியே...
உன்னை நான் ஆராதிக்கிறேன்.
என்னைக்கூட அழகாக
பிரதிபலிக்கிறாயே - அதற்காகவே
உன்னை நான் ஆராதிக்கிறேன்.
உன் முன்னால்
நிர்வாணம் எத்தனை
அழகென்று உணரமுடிகிறது.
ஆனால்
உன்னால் எதையும்
மறைக்க முடியாது.
உள்ளதை உள்ளபடியே
காண்பிப்பதுதான்
உன் தனிச் சிறப்பு.
உன் முன்னால்
அரிதாரம் பூசி
அரசனாய் அரசியாய்
சிறிது நேரம்
கோலோச்சினாலும்
வேடம் களைந்து
உண்மை சொரூபம் காட்டி
எதார்த்த நெருப்பால் சுட்டு
தன்னிலை உணர வைக்கிறாயே...
உடைந்து பாகங்களாய்
துண்டுபட்டாலும்
ஒவ்வொரு துண்டிலும்
உள்ளதையேதான் காண்பிக்கிறாய்.
உண்மையைதான் பிரதிபலிக்கிறாய்.
உன்னிடம் கற்கவேண்டிய
பாடம் ஒன்றுண்டு.
எந்நிலையிலும்... சோதனை வந்து
உடைந்தபோதிலும்
உள்ளது உள்ளதுபடியே
உண்மையது நழுவாமல்
வாழ்வில் பிரதிபலிக்க
கற்றுக்கொள்ள உன்னிடம்
பாடம் ஒன்றுண்டு.