இன்னும் ஒரு முறை சொல்

#இன்னும் ஒரு முறை சொல்

எதற்கு மனமே கலங்குகிறாய்
எதுவும் நிலையில்லை
அறிவாயே
பிதற்றிப் பிதற்றித் திரிவதனால்
பெரிதாய் கிடைப்ப தெதுவுமில்லை..!

மண்ணில் உதிக்கையில்
நிர்வாணம்
மயானம் சென்றபின் நிர்வாணம்
கொண்டு வந்தது எதுவுமில்லை
கொண்டு போவது மேதுமில்லை..!

உறவும் ஊரும் கூடவரா
உடைமைகள் அதுவும் கூடவரா
மறையப் போகும் உடலின்மேல்
மயங்கிக் கிடந்து வாடுவதா..!

இடர்கள் பெருகிய பூமியிது
இன்னல்க ளளித்து
வாட்டுமிது
தடைகளைத் தாண்டி வரவேண்டும்
மனமே விழித்திருத்
துயர்நீங்கும்..!

பொய்யாய் முகங்கள்
பலஉண்டு
புரிந்து நடப்பாய் பலனுண்டு
வெய்யிலில் நிழலாய்
மனிதருண்டு
வேகா திருந்து நிழலொதுங்கு..!

எங்கும் போரின் முழக்கந்தான்
எதிலே போய்தான்
முடியுந்தான்
பொங்கும் மனமே ஆற்றிக்கொள்
பூக்கும் அமைதி வேண்டிக்கொள்..!

வன்கொ டுமைகள் நாட்டினிலே
தலைவி ரிக்குது பேய்போலே
வன்மம் கண்டு அஞ்சாதே
வன்மர் அழிக்கத் தயங்காதே..!

இயற்கைக் கூட சதிசெய்யும்
இரக்க மின்றி அதுகொல்லும்
வயது வசதி பார்க்காது
மனமே அழுதால் கேட்காது..!

பயந்து கிடந்தால் பயனில்லை
பாவ புண்ணியம் அதற்கில்லை
இயற்கை யழித்தோம் இரக்கமின்றி
இறையாய்த் தொழுவோம்
தயக்கமின்றி..!

கலியுகம் கொடிது
கண்டாயா
கலங்கி நிற்றல் சரிதானா
வலிமைகொள் மனமே இரும்பாக
வருவதை எதிர்கொள் துணிவாக..!

வேதனை என்பது யாருக்கில்லை
வெற்றித் தோல்விகள் நிலையுமில்லை
சோதனை வந்து வாட்டுங்கால்
சோர்வுகள் நீக்க
சுடரொளிபார் ..!

இன்னும் ஒருமுறை சொல்கின்றேன்
எத்தனை முறையும்
கூறிடுவேன்
அன்பால் எதையும்
வென்றிடலாம்
ஆன மட்டும் பார்த்திடலாம்…!

கனக்கும் மனமே கரைவாயே
காலம் உனக்காய்
மகிழ்வாயே
மனமே துவளா திருநாளும்
மன்றிலைச் சூழும்
திருநாளும்..!

#சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (16-Dec-24, 2:14 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 2

மேலே