நிழல் தேடும் நிஜங்கள்
#நிழல் தேடும் நிஜங்கள்...!
பாசனம் கண்டநம் பூமி - இன்று
பாசானம் ஆகுது சாமி
பச்சையாடை கொண்ட மேனி
கச்சையும் மிஞ்சிடு மோயினி…!
சொத்துக்கள் நம் சொந்தம் இல்லை - நிலம்
கையகத்தால் நித்தம் தொல்லை
பாட்டன் சொத்துபறி போகும்நிலை
எட்டு வழிக்கோயினி தீனி மலை..?
அல்லாடுறார் மக்கள் இங்குமங்கும்
அநி யாயம் நடக்குது எங்குமெங்கும்
நீதி, நியாய தர்மம் ஏழைக்கில்லை
நேர்மையில்லை.. நீதி வாழவில்லை…!
பட்டம் பயின்றோர்க்கு வேலையில்லை
பட்டா நிலம் கூட சொந்தமில்லை
உண்மை உரைத்திட உரிமையில்லை
உள்ளது சொல்வோர்க்கு உயிருமில்லை..!
கருவறை இங்கு பூக்கவில்லை
காரணங்கள் சுற்றி மாசு தொல்லை
கோடி ..கோடி ..பலர் காணுதற்கு
வாடுகின்றார் பல கோடி முல்லை..!
ஒன்றுபட்டால் இங்கு உண்டு வாழ்வு சொல்லிவைத்தார் அவை இன்று பாழு
கூடியிங்கு ஏழை கோஷமிட்டால்
பாயுது ஒன்றுடன் நாலு நாலு…!
மந்தியெல்லாம் இன்று ஒன்று கூடி நாட்டைச் சிதைக்குது ஆட்டம் ஆடி
தங்கும் நிழல் என்று ஏதுமில்லை - நிஜம்
நின்று களித்திட கூரையில்லை..!
போராட்டமே நித்தம் ஆனதிங்கு
தேரோட்டம் நாமெல்லாம் காண்பதென்று..?
கேள்வியுடைந்திடும் நாளும் வரும் - நிஜம்
கூரைகண்டு நிழல் நீட்சி பெறும்..!
#சொ.சாந்தி
ஆக்கம் 2019ல்