நால்வர்- காவல் விசாரணை- கதை சொல்லி
நால்வர்- காவல் விசாரணை- கதை சொல்லி
இந்த கதையின் கரு எனது சொந்த கற்பனை அல்ல. “ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை” என்னும் தலைப்பில் சிறு கதை தொகுப்பு ஒன்றில் படைத்திருந்த எழுத்தாளர் எழில் வரதன் அவர்களுடையது. சந்தியா பதிப்பகம், சென்னை-83, முதல் பதிப்பு-2008
நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம், பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று வைத்து கொள்ளுங்கள். அந்த காலகட்டத்தில் ஓரளவு நகர நாகரிகம் வளர்ந்து வந்து கொண்டிருந்த அந்த ஊரின் காவல்துறை துணிச்சலாக ஒரு நடவடிக்கை எடுத்திருந்தது. அன்றும் சரி இன்றும் சரி, அப்படிபட்ட துணிச்சலான நடவடிக்கை எடுப்பது என்பது சாதாரண விசயமல்ல.
மறு நாள் செய்தி தாள்களிலும், பொதுமக்களிடையேயும் அந்த நடவடிக்கை வெளிப்பட்டு ஒரு சில இடங்களில் மக்களிடையே மன கொதிப்பையும், ஒரு சில இடங்களில் மகிழ்ச்சியையும் கொடுத்திருந்தது.
நள்ளிரவில் அந்த ஊரின் கடைகோடியில் ஆசிரமம் வைத்து நடத்தி கொண்டிருந்த ஒரு சாமியாரை இரவோடு இரவாக குண்டு கட்டாய் தூக்கி கைது செய்து, காவல்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து விட்டது காவல்துறை. அதுவும் அவரை இறைவனின் இத்தனையாவது அவதாரம் என்று காது மூக்கு சுற்றி பூச்சூற்றி கொண்டிருந்தவர்கள் மத்தியில் அத்தகைய துணிச்சலான நடவடிக்கை எடுத்தது ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்த ஆச்சார்யமான காவல் அதிகாரிதான் அத்தகைய நடவடிக்கையை எடுத்தார்.
அவர் அந்த சாமியாரை கைது செய்தபோது சாமியார் நல்ல போதையில் கஞ்சாவாகவோ, அபினாகவோ எடுத்து இருக்கலாம், பலருடன் பிறந்தபோது இருக்கும் உருவத்துடன் நடனமாடியபடி இருந்தார். அவருடன் அயல்நாட்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் அதே தோற்றத்துடன் நடனமாடி கொண்டிருந்தனர். காவல்துறை சாமியாரை கைது செய்தபோது ஆரம்பத்தில் எதிர்ப்பை காட்ட முயற்சித்து பின் தயங்கி ஓடி விட்டனர்.
ஆனால் காவல்துறை அவரை கைது செய்தது, இப்போதைய செயலுக்காக அல்ல. இருபது வருடங்களுக்கு முன்னால் அவர் சம்பந்தபட்ட ஒரு கொலை குற்றத்திற்காக.
முப்பத்தி ஐந்திலிருந்து நாற்பதுக்குள் இருக்கும் ஒரு பெண்ணை இரவு நடந்து வரும்போது நகைகளை பறித்து கொண்டு குத்தி கொலை செய்து விட்டு, தப்பித்து ஓடி விட்டிருக்கிறார். அதற்காக இத்தனை வருடங்களாக துப்பறிந்து, இறந்து கிடந்த அந்த ஊரில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி அந்த சாமியார்தான் இவர் என்று கண்டு பிடித்து, இங்குள்ள காவல்துறைக்கு செய்தி தெரிவித்து சாமியாரை இரவோடு இரவாக கைது செய்து விட்டது.
சிறைக்குள் கொண்டு போன சாமியார் அதிகமாக முரண்டு பிடிக்கவில்லை. அந்த கொலையை தான்தான் செய்ததாக ஒப்பு கொண்டார். அவரது ஆசிரமத்து பக்தர்கள்தான் பாவம் “எங்கள் சாமியார் அப்படியெல்லாம் செய்திருக்கமாட்டார்’ என்று புலம்பி கொண்டிருந்தார்கள். அவருடன் நடனமாடிக்கொண்டிருந்த உள்ளூர், அயல்நாட்டு மனிதர்கள் சத்தமில்லாமல் உடைகளை மாற்றிக்கொண்டு பெரிய மனிதர்களாக பொது வெளியில் நழுவி வந்து விட்டார்கள்.
இவரால் கொலை செய்யப்பட்ட பெண்ணை பற்றி மேலும் விசாரணையை கொண்டு போன போது இவர் அந்த பெண்ணை கொலை செய்யும்போது அந்த பெண் கர்ப்பமாய் இருந்ததாக தெரிந்தது. இவர் அவளை குத்தி விட்டு நகைகளை பறித்து கொண்டு ஒடிய பொழுது அவள் அந்த வேதனையில் பிரசவித்து ஒரு பையனை பெற்று விட்டே இறந்திருந்தாள்.
அந்த குழந்தை நடுக்காட்டில் அழுது கொண்டிருக்க அந்த வழியாக நடந்து சென்ற ‘நரிக்குறவ கும்பல்’ ஒன்று அந்த குழந்தையை எடுத்து சென்று விட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த ‘நரிக்குறவ கூட்டத்தை’ பிரயாசைப்பட்டு காவல்துறை கண்டுபிடித்து அந்த குழந்தை யார்? என விசாரித்து கடைசியில் கண்டுபிடித்து இங்கு கொண்டு வந்த போது அந்த குழந்தை பெரியவனாகி அவர்கள் முன்னால் வந்த நின்றது. காவல் அதிகாரிகள் திகைத்து விட்டார்கள். காரணம், எதிரில் நின்ற இளைஞன் கைது செய்த ஆசிரமத்து ‘சாமியாரை’ போலவே ஒத்திருந்தது.
அப்படியானால்..! திகைத்த காவல்துறைக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி, சாமியார் அன்று இளம் சிறுவனாக அந்த பெண்ணை கொன்று இருக்கிறார், ஆனால் அவள்தான் தன் தாய் என்று அறியாமல்..!
இது எப்படி என்று? மீண்டும் ஒரு விசாரணை வளையத்துக்குள் செல்ல, அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் சிறு வயதில் நடந்து இந்த சாமியாரை பெற்றபின் அவள் கணவன் எங்கோ ஓடி விட, இவளும் வேறு வழியில்லாமல் வேறொரு இடத்துக்கு பிழைக்க போய் அங்கு மற்றொருவருடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறாள். அன்று இரவு அவனுடன் சண்டையிட்டு விட்டு கோபத்தில் வீட்டை விட்டு இந்த காட்டு வழியாக இவளது ஊருக்கு திரும்பி கொண்டிருக்கையில் பசி வெறியுடன், யாராவது வந்தால் அவர்களிடமிருந்து பணம் பறிக்க காத்திருந்த இந்த சாமியாரிடம் மாட்டி கொண்டாள். அதிலும் அவள் ‘நகையை’ கொடுக்க முரண்டு பிடித்ததால் கொலை செய்ததாக தெரிவித்தார். அந்த சாமியார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் இப்பொழுது இந்த சாமியாரின் சகோதரனாக நின்று கொண்டிருக்கிறான். அடுத்த விசாரணை கட்டத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி மூன்றாவதாக ஒருவன் இந்த சாமியாரை போலவே காவல்துறையின் விசாரணை அமைப்புக்குள் வந்தான். அவனும் ஏறக்குறைய சாமியாரை போலவே..!
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவளது கணவனுக்கும் அன்று இரவு நடந்த சண்டையே அவள் கணவன் இவளது வீட்டில் தங்க வந்த இவளது தங்கையையும் ரகசியமாய் காதலித்து அவளுடன் வாழ்க்கையை அனுபவித்திருக் கிறான். அதனால் அவளும் கர்ப்பமாய் இருப்பதை கேள்விப்பட்டே, இவள் கோபித்து வெளியில் வந்து மகனான இவனிடம் மரணத்திருக்கிறாள்.
கோபித்து காட்டு வழியாக வந்து இந்த சாமியாரிடம் கொலை செய்யப்பட்டு விட்டாள் என்பதை அறியாத அவள் இரண்டாம் கணவன், அவள் எங்கோ போய் விட்டாள், என்னும் தைரியத்துடன் இவளின் தங்கையுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்திருக்கிறான். அவளுக்கு பிறந்த குழந்தையும் இப்பொழுது பெரியவனாய் காவல்துறையின் விசாரணைக்கு வர அவனும் ஏறக்குறைய சாமியாரின் அச்சில் இருந்தான்.
காவல்துறை இப்பொழுது சற்று தடுமாறத்தான் செய்தது, என்றாலும் அடுத்து அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி இதை விட ஆச்சர்யகரமானதான இருந்தது. இந்த கொலையை பற்றி துப்பறிந்து, ஆராய்ச்சி செய்து அந்த சாமியாரை கைது செய்ய இங்குள்ள ஆச்சார்யமான காவல்துறை தலைவருக்கு எல்லா உதவிகளையும் செய்த காவல் அதிகாரியை பார்த்ததும் இந்த அதிகாரி அதிர்ச்சியாகி விட்டார். காரணம் அவரும் ஏறக்குறைய சாமியாரின் அச்சில் வார்த்தது போல இருந்ததுதான்.
பின் அதற்கும் ஒரு விசாரனையை மேற்கொள்ள, சாமியாரின் தகப்பனுடன் இணைவதற்கு முன்பு அவர்களின் ஊருக்கு மாற்றல் ஆகி வந்திருந்த ஒரு அரசு ஊழியனுடன் தவறான தொடர்பில் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தாயாகி இருந்திருக்கிறாள் அந்த பெண். அந்த ஊழியர் அவளை ஏமாற்றி விட்டு சத்தமில்லாமல் வேறொரு ஊருக்கு மாற்றல் ஆகி சென்று விட்டிருந்திருக்கிறார்., இவளும் குந்தி தேவியை போல, அந்த குழந்தையை பெற்றெடுக்க, தாயாரின் உதவியுடன் கண் காணாத இடம் சென்று குழந்தையை பெற்று யாரோ ஒருவரிடத்தில் கொடுத்து வளர்க்க ஏற்பாடு செய்து விட்டு உள்ளூர் வந்தவள் சாமியாரின் தகப்பனுடன் இணைந்து கொண்டாள்.
அப்படி பிறந்த குழந்தை நல்ல மனிதரிடம் வளர்ப்புக்கு சென்றதால் நன்கு படித்து காவல்துறையில் சேர்ந்து மிகப்பெரிய ‘துப்பையும்’ கண்டு பிடித்து பேர் வாங்கி உள்ளார்.
மேற்கொண்டு காவல்துறை விசாரணையை தீவிரபடுத்த தயங்கி இதை சாமியார் செய்த கொலை குற்றத்துடனே முடித்து கொள்ள முடிவு செய்து விட்டது, காவல்துறை.
காரணம் அடுத்தடுத்து இன்னும் இரண்டு மூன்று உருவங்கள் சாமியாரை போலவே வர வாய்ப்பு இருக்கும் என்னும் வதந்தியோ அல்லது உண்மையோ தெரியாது.