மாமியாருக்காக

மாமியாருக்காக..!

இந்த கதை கரு என்னுடையது அல்ல..!

இவர்கள் கட்டப்போகும் இடத்தின் நடுவில் நின்றபடி வாசுகி உரத்த குரலில் தன் கணவன் வாசுவிடம் சொன்னாள். இங்க பாருங்க, வாழ்க்கையில ஒரு முறைதான் வீடு கட்டப்போறோம், அதனால என்னோட பேச்சை கேட்டு “பிளானை” கொடுங்க.
வாசு இப்ப உன் பேச்சை கேட்டுத்தான எல்லா ஏற்பாடும் செஞ்சுகிட்டு இருக்கேன், இப்ப என்ன குறை? என் பேச்சை கேளு கேளுங்கறே?
முன்னாடி வீட்டுக்குள்ள நுழையறதுக்கு முன்னாடி, காம்பவுண்டுக்குள்ளயே இருக்கற, நான் சொன்ன அந்த ‘பத்துக்கு பத்து’ ரூமை எதுக்கு பூஜை ரூமாக்கணும்கறீங்க?
பின்ன என்ன பண்ணனும்கறே?
அப்ப உங்க அம்மாவை எங்க தங்க வைப்பீங்க?
அவங்களுக்குத்தான் ஹாலுக்குள்ள நுழைஞ்ச உடனே வலது புறமா, “பதினாறுக்கு பத்துன்னு” ஒரு ரூம் ஒதுக்கிருக்கே, ‘அட்டாச்சுடு பாத்ரூம்’ மத்த எல்லா வசதிகளோட இருக்குதே.
ஏங்க வயசானவங்களுக்கு அவ்வளவு பெரிய ரூம் தேவையா?
என்ன நீ இப்படி சொல்றே? எங்கம்மா எனக்காக எந்தளவுக்கு உழைச்சிருக் குன்னு உனக்கு தெரியுமா? அவங்களை போய் இந்த ‘சின்ன ரூமில’ அடைச்சு வைக்கணும்னு சொல்றே. காம்பவுண்டுக்குள்ள இருந்தாலும் வீட்டுக்கு வெளிய இருக்கறமாதிரிதானே இருக்கு
எல்லாத்துக்கும் வயசாச்சுன்னா சின்ன ரூமே போதும், அதுல உள்ள என்னே வெளியே என்னே? இங்க பாருங்க இந்த ரூமை ஒட்டி ஒரு பாத்ரூம், டாய்லெட் கட்டுங்க. அவங்க சட்டுன்னு எந்திரிச்சு போக வசதியாய் இருக்கும்.
வாசுவுக்கு ஒரு விதத்தில் அவள் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது
இருவரும் தாங்கள் வீடு கட்டப்போகும் நிலத்திலிருந்து கிளம்பி வீட்டுக்கு காரில் வரும்போது இருவருக்குள்ளும் வீட்டின் கனவு பிரமாண்டமாய் வளர்ந்து இருந்தது.
அம்மா வாசுவிடம் கேட்டாள், என்னடா நீயும் உன் பொண்டாட்டியும் போய் இடத்தை பார்த்துட்டு வந்தீங்களே.
இடத்தை பார்த்து “பிளேன்” போட்டும் அப்ரூவலுக்கு கொடுத்துட்டு வந்திருக்கு.
அதுல அம்மாவுக்கு இடம் கொடுப்பியா?
இது என்ன அம்மா இப்படி கேட்கிறாள்? ஒரு வேளை தன்னை ஒரு சிறிய அறைக்குள் போட்டு அடைத்தாலும் அடைத்து விடுவார்கள் என்று தோன்றியிருக்கு மோ?
நியாயம்தானே பத்து வயதில் அப்பாவை இழந்து இவள் தனியாகத்தானே தன்னை வளர்த்து இன்று அரசு பணியில் அதிகாரி அளவுக்கு கொண்டு வந்திருக்கிறாள்.
அம்மா, என்னம்மா இப்படி கேக்கறே? உனக்கு பின்னாடிதாம்மா எனக்கு என் குடும்பம் எல்லாம். அம்மாவை சமாதானப்படுத்தினான். யோசிச்சு பாரும்மா இதுவரைக்கும் நாலு ஊரு மாத்திட்டாங்க, உன்னையும், குழந்தைங்களையும் கூட்டிகிட்டே எத்தனை முறை குடி போயிட்டிருக்க முடியும். அதான் நம்ம இடத்துல ஒரு வீட்டை கட்டி உங்களை எல்லாம் குடி வச்சுட்டா நான் மட்டும் நிம்மதியா எங்க மாத்துனாலும் போயிட்டு இருக்கலாம்.
அம்மா எதுவும் பேசாமல் அவள் கட்டிலில் திரும்ப படுத்து கொண்டாள்.
மறு நாள் வாசு அலுவலகம் சென்ற போது அவனுக்கு மாநிலத்தின் எல்லையில் இருக்கும் ஊருக்கு பதவி உயர்வுடன் மாற்றல் வந்திருப்பதாக செய்தி வந்தது.
வாசுகி சலிப்புடன் சொன்னாலும், நல்ல வேளை இப்ப வந்துடுச்சு, நாளைக்கு நம்ம கட்டிட வேலைய ஆரம்பிச்சுக்கறேன் நீங்க கிளம்புங்க, நான், தினம் வந்து பார்த்துக்கறேன்.
நான் அங்க போய் தனியா?...இழுத்தான்.
போய் ஆறு மாசம் ஏதாவது ரூம் எடுத்து இருங்க, அதுக்குள்ள வீட்டு வேலைய ஒழுங்கு படுத்திட்டு நானும் குழந்தைகளும் அங்க வந்திடறோம்.
சரி..அம்மாவை.. தனியா விட்டுட்டு
முறைத்தாள் இத்தனை நாளா உங்கம்மாவை யாரு பார்த்துகிட்டா?
சரி சரி.. விடு.
வாசு மாற்றல் வாங்கி அந்த ஊருக்கு சென்ற மூன்று மாதத்தில் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டு பதறியடித்து ஓடி வந்தான். பிரயோசனமில்லை. அவன் வந்து இரண்டு மூன்று நாட்களில் அவள் “இயற்கை எய்து விட்டாள்”
வாசுகி தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீடு கட்டும் இடத்துக்கு, மதிய உணவையும் எடுத்து சென்று விடுவாள். ஒரு குடையுடன் கட்டிட வேலை செய்யும் ஆட்களையும், மேஸ்திரியும், இஞ்சீனியரும் கேட்கும் பொருட் களையும் வாங்கி கொடுத்து, வாரம் இதுவரை ஆன செலவுகளுக்கான பணத்தை கொடுத்து, கணக்கு பார்த்து, எழுதி வைத்து, இப்படி கடுமையாக உழைத்தபடி இருந்தாள். வீட்டின் ஒவ்வொரு செங்கல் வரிசைகளின் வளர்ச்சியும் அவளது உழைப்பை சொல்லியபடியே வளர்வதாக இவளுக்கு தோன்றும்.
வீடு ஓரளவுக்கு நல்லபடியாக முடிந்து, பூச்சு வேலை முடிந்து வர்ணம் பூசி குடி போவதற்கு தயாரான போது, வாசுவின் உடல் நலம் சரியில்லை என்று தகவல் வந்தது. வாசுகி பையனையும், பொண்ணையும் கூட்டிக்கொண்டு வாசு இருந்த ஊருக்கே சென்றாள்.
அவனுக்கு வெளிச்சாப்பாடும், குடும்பத்தை விட்டு தனியாக இருந்த வருத்தமும், மனதையும் உடலையும் பாதித்திருப்பதாக மருத்துவர் சொல்லி விட்டார். இனி அவரை தனியாக விட வேண்டாம். எல்லாரும் ஒண்ணாகவே இருங்க, என்று அறிவுறுத்தி விட்டார்.
புது வீடு ‘பால்காய்ச்சி’ கொண்டாடி முடித்த நிலையில், அவர்கள் அங்கு குடியிருக்க வழியில்லாமல் வெளியூருக்கு கிளம்ப தயாராகியிருந்தார்கள். வாசுகி ஓரளவு கட்டிடம் கட்டும் போது அங்கேயே இருந்து கவனித்து கொண்டதால் அங்கு வசித்தவர்கள் நல்ல நட்புடன் பழகியிருந்தனர். அவர்கள் சிபாரிசு செய்த ஒருவருக்கு வாடகைக்கு வீட்டை விட்டு விட்டு வாசுகி குழந்தைகளை அழைத்து கொண்டு கணவனோடு சென்று விட்டாள்.
வாசுவுக்கு அடுத்தடுத்து ஊர் ஊராக, இரண்டு மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்று மாற்றல் வந்து கொண்டிருக்க, குழந்தைகளும் பெரியவர்களாக வளர்ந்து கொண்டிருந்தனர்.
பெண்ணுக்கு கல்லூரி படிப்பு முடிந்து கல்யாணம் செய்து வைத்தனர். அவள் கணவனோடு வெளி நாட்டுக்கு பயணமாகி விட்டாள்.
அவள் சென்ற ஒரு வருடத்தில் வாசுவுக்கு திடீரென்று ஏற்பட்ட “ஹார்ட் அட்டாக்” அவனின் வாழ்க்கையை இறுதியாக்கி விட்டது. வாசுகி கொஞ்சம் தடுமாறினாலும் மனதை தைரியப்படுத்தி கொண்டு வழக்கமான குடும்ப பொறுப்புகளை செய்து கொண்டிருந்தாள்.
பையனுக்கு ‘அப்பா பணி’ செய்து கொண்டிருந்த ஊரிலேயே அப்பாவின் வேலையை பெற்று கொடுத்து விட்டாள். இரண்டு வருடத்தில் ஒரு பெண்னையும் பார்த்து கல்யாணம் செய்து விட்டாள்.
அவனும் வாசுவை போலவே ஊர் ஊருக்கு மாற்றல் வாங்கி சென்று கொண்டிருந்தான். அவனுக்கும் இரண்டு குழந்தைகள் சேர்ந்திருந்தது.
ஒரு நாள்..! வாசுகி அருகில் வந்தவன், அம்மா நாளைக்கு, உம் மருமக சாந்தி நம்ம வீட்டை பார்த்துட்டு வரணும்னு சொல்றாம்மா.
அதுக்கென்ன போய் பார்த்துட்டு வாங்களேன்.
இல்லைம்மா, நாம் எல்லாரும் போலாம், குழந்தைகளையும் அழைச்சுட்டு, நம்ம கார்லயே போயிடலாம். இங்கிருந்து நாலு மணி நேரத்துல போயிடலாம்.
சரி நான் எதுக்கு?
இல்லைம்மா நீ பார்த்து பார்த்து, கட்டுன வீடு, வாம்மா போயி பார்த்துட்டு வந்துடலாம். ம்…தலையசைத்தாள் வாசுகி.
மறு நாள் தன் மகன் கொண்டு வந்து காரில் ஏற்றிய பொருட்களை பார்த்து வியந்து போனாள் வாசுகி.? சிலிண்டர், ஸ்டவ், மற்றும் பாத்திரங்கள், துணி மணிகள்
போய், வீட்டை பார்த்துட்டு வர்றதுக்கு எதுக்குடா? ஸ்டவ், படுக்கை, தலையணை, துணி மணி எல்லாம்?
இருக்கட்டும்மா, சமாளித்தவன் அம்மாவை காரின் பின்புறமாக கொண்டு வந்து உட்காரவைத்து விட்டு குழந்தைகளிடம் பாட்டியை தொந்தரவு பண்ணாம பக்கத்துல உட்கார்ந்திருக்கணும் அறிவுரை சொல்லிவிட்டு, முன்புறம் வந்து வண்டியை எடுத்தான். அருகில் உட்கார்ந்து கொண்ட அவன் மனைவி சாந்தி அவனிடம் குனிந்து ஏதோ சொல்வதும் அவன் ‘அங்க போய் பார்த்துக்கலாம்’ என்று சொன்னது மட்டும்தான் காதில் விழுந்தது.
அவர்கள் வீடு கட்டியிருந்த இடம் இப்பொழுது அடையாளமே மாறி போயிருந்தது. ஏராளமான வீடுகளும், கடைகளும் வந்திருந்தன. வீட்டில் குடியிருந்தவர்கள் இவர்களை வரவேற்றாலும், அவ்வளவாக இவர்களின் வரவை இரசிக்கவில்லை என்பது புரிந்தது.
ஒரு மணி நேரத்தில் எல்லோரும் கிளம்பலாம் சொன்னவன் வாசுகியிடம் வந்து அம்மா சொன்னா கோபிச்சுக்காதே, நம்ம வீட்டுல இருக்கறவங்க ஒழுங்கா வாடகை கொடுக்கறதில்லை, கேட்டா நாள் கடத்தறாங்க, அதை விட பாரு, வீட்டை எப்படி நாசம் பண்ணிட்டாங்க, இதுவரைக்கும் நாலைஞ்சு பேரை மாத்தி பார்த்தும் யாரும் வீட்டை சரியா பராமரிக்க மாட்டேங்கறாங்க, அதனால, அதோ ஹாலுக்கு முன்னால இருக்கற ‘பத்துக்கு பத்து’ ரூமை உனக்குன்னு ஒதுக்கிட்டோம். பாரு கட்டிலும் படுக்கை எல்லாம் போட்டு வச்சுட்டேன். இதா பாரு பாத்ரூம், பாம்பே டைப் லெட்ரீன் எல்லாம் பக்கத்துலயே இருக்கு. நீ வசதியா போய்க்கலாம். இந்த மூலையில இதா பாரு ஸ்டவ், பாத்திரம் எல்லாம் குடத்துல கூட தண்ணி எடுத்து வச்சிருக்கோம்.நீ எது வேணா சமைச்சுக்கலாம். உனக்கு வர்ற ‘பென்சன் பணம்’ உன் கைக்கு வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டேன். உனக்கு உதவிக்கு ஒரு அம்மாவை தினமும் காலையிலயும், சாயங்காலயும் வந்து வேலை செஞ்சு கொடுத்து போகறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு
வாசுகிக்கு அடிவயிற்றில் இருந்து கோபம் பொங்கி வந்தது, ஏண்டா இதுக்கோசரம்தான் நீயும் உன் பொண்டாட்டியும் என்னை திட்டம் போட்டு இங்க கூட்டிட்டு வந்தீங்களா?
அம்மா சொன்னா புரிஞ்சுக்கோ, எனக்கு அடிக்கடி “ட்ரான்ஸ்பர்” வந்துகிட்டே இருக்கு, உன்னைய கூட்டிட்டு சுத்திகிட்டே இருக்க முடியுமா? அது மட்டுமில்லை நீ இங்கியிருந்தியின்னா வீட்டுல குடியிருக்கறவங்களுக்கும் ஒரு பயம் இருக்கும். கொஞ்சமாவது பயப்படுவாங்க, புரிஞ்சுக்கம்மா..
அதற்கு மேல் அவனிடம் வாதிடுவது ஏற்புடையதல்ல மனதுக்கு புரிய மெளனமாய் இருந்தாள் வாசுகி. மெல்ல மெல்ல அடியெடுத்து தன் மாமியாருக்காக கட்டியிருந்த அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-Mar-25, 12:18 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 27

மேலே