எனக்கு மனைவியானவள் தாயான பின்

எனக்கு மனைவியானவள் தாயான பின்?

தெரிந்தவர்கள் கொண்டு வந்து கொடுத்ததாக சொன்ன பெண்ணின் ஜாதகம் இவனுக்கு பொருத்தமாக இருப்பதாக, அம்மா சொன்னதும் திவாகரனுக்கு கல்யாண விசயத்தில் கொஞ்சம் சுவாரசியம் தட்டியது.
ஏற்கனவே பல இடங்களில் இவனது திருமண சம்பந்தம் பல இடங்களில் ‘இதோ அதோ’ என்று அலைக்கழித்து கடைசியில் கொஞ்ச நாளைக்கு இந்த கல்யாண பேச்சே வேண்டாம் என்று தன்னை இறுக்கி பிடித்து, மனதுக்குள் ஒளித்து வைத்திருந்தான். வீட்டிலும் அதை பற்றி பேச வேண்டாம் என்றும் தெரிவித்திருந் தான். அதனால் ‘நான்கு’ மாதங்களாக இந்த பேச்சுக்கள் எதுவும் வீட்டில் நடைபெறாத தால் இவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
‘பொண்ணு’ டீச்சர் படிப்பு படிச்சிருக்கு, பிரைவேட் ஸ்கூலுக்கு வேலைக்கு போயிட்டிருக்கு, மேற்கொண்டு தகவல்களை அம்மா அப்பாவிடம் சொல்லி கொண்டிருந்ததை இவனும் கேட்காதவன் போல் கேட்டு கொண்டிருந்தான்.
இந்த சம்பந்தமாவது இவனுக்கு ஒழுங்கா அமைஞ்சா சரிதான் அம்மா அலுப்புடன் தனது பேச்சை முடித்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தவுடன் இவனுக்கு அம்மாவின் கவலையின் நியாயம் புரிந்தது. அதற்கு இவன் என்ன செய்ய முடியும்? இவன் வேலை பார்ப்பது தனியார் நிறுவனம் ஒன்றில். மூன்றாயிரம் சம்பளம் என்பதே அதிகம் இவனுக்கு..! என்று நினைக்கும் முதலாளியும் அவரின் மனைவியும்.
பெண்ணுக்கு ‘தாய் தந்தை’ இல்லை என்பதால் அதிகமாக, கல்யாண சம்பந்த பேச்சுக்கள் இல்லாமல் ஒரு நாள் உறவுகளுடன் போய் பெண் பார்த்து விட்டு வந்தான். இதில் இவனுக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாததால் சாதாரணமாகவே பார்த்து விட்டு வந்தான். பெண்ணின் மூத்த அக்கா, மற்றும் அவள் கணவர், கூட இந்த பெண்ணுடன் பணி புரிந்து கொண்டிருந்த ஆசிரியர்கள். உதவிய ஆசிரியர்கள் தாய் தந்தை அற்ற இவளுக்கு உதவுவது தங்களது கடமையாகவே நினைத்து உதவினர்.
திருமணம் முடிந்த பின்தான், இணைந்த வாழ்க்கையின் ஒவ்வொரு சிக்கல்களும் தெரிந்தது. முதலாவது இவனின் பொறுமைக்கும், பெண்ணின் முன் கோபத்திற்குமே பெரிய இடைவெளியே இருந்தது. அடுத்து இவனது பேச்சுக்கள் சில நேரங்களில் அவளால் உதாசீனப்பட்டது கூட இவனுக்கு வலித்தது.
இது என்னடா..! கல்யான வாழ்க்கை என்பது இவ்வளவு சிரமமா? என்று அப்பொழுதான் நினைத்தான். இதற்காகவா இத்தனை வருடங்கள் தான் அலைந்து திரிந்திருக்கிறோம்? என்று நினைக்கும் போது அவனுக்கு ஒரு வெட்கம் வந்தது.
என்னதான் அவளது முன் கோபமும், எரிச்சல் மூட்டும் பேச்சுக்களும் இவன் மனதை காயப்படுத்தி கொண்டே இருந்தாலும், இவள் வேலை செய்யும் இடங்களிலும், அவளது அக்கா வீட்டிலும் தன்னை பற்றி உயர்வாகவே பேசியிருந் ததை இவனால் அவர்கள் மூலம் அறிந்த போது அவளது தன்னை காயப்படுத்தும் குணங்கள் அவனிடம் அவளை பற்றி ஒன்றுமில்லாமல் செய்து விட்டது.
அதற்கு பின் அவன் அவளோடு ஒரு சில விசயங்களில் ஒத்து போக ஆரம்பித்தான். வாரிசு வருவதில் அவளது உடல்நிலை தாமதிக்கும், என்று அறிந்த போது, அது அவனுக்கு பெரிய குறையாக தெரியவில்லை.
இருவருக்குள்ளும் தினம் தினம் சண்டை சச்சரவுகள் வந்து கொண்டிருந்த போதிலும், வாழ்க்கையில் இவனுக்கு அவளும், அவளுக்கு இவனும் முக்கியமானவர் களாக இருந்ததால் இடையில் எப்படியாவது சிக்கலை இவர்களுக்கு இடையில் நுழைக்க நினைத்தவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது.
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்துத்தான் இவர்களுக்கு ஆண் வாரிசு ஒன்று உருவானது.
ஏற்கனவே அவளுக்கு தாய் தந்தையர்கள் இல்லாததால், குழந்தை வளர்ப்பு என்பது பிறந்தது முதல் இவர்கள் இருவரை மட்டுமே சார்ந்தது என்னும் கடமையாக பயணபட்டு கொண்டிருந்தது. இதனால் இவர்களின் சண்டை என்பது இந்த குழந்தை வளர்ப்பு சம்பந்தமாகவே இருந்தது. அடுத்து மாமியார் பிரச்சினை என்று தொடர்ந்து கொண்டிருந்த போது அடுத்து ஒரு பெண் மகவு மூன்று வருடங்கள் கழித்து பிறந்து மீண்டும் அடுத்த சண்டை இருவருக்குள்ளும் நடக்க தொடங்கியிருந்தது.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் சூ, சாக்ஸ் வாங்குவது வரைக்கும் இந்த சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தாலும் அவர்களின் வளர்ச்சி என்பது ஆரோக்கியமாகவே இருந்தது. என்னதான் சண்டை இருவருக்குள்ளும் இருந்தாலும் அடிமட்ட மனதிற்குள் இருவருக்குள்ளும் விட்டு கொடுத்தலும், மற்றவர்களிடம் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் இருந்ததிலும், நன்கு புரிதல் கொண்ட குடும்பமாகவே சென்று கொண்டிருந்தது.
ஆனாலும் அதையும் மீறி கொஞ்சம் கொஞ்சமாக இவனது பிடிமானம் அவளிடமிருந்து குறைவதாகவே தோன்றியது. ஆரம்பத்தில் இவனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அப்பொழுது அவன் மனைவியை பற்றி பெருமிதமாகவே நினைத்து கொண்டிருந்தான்.
அவர்களின் மகனோ மகளோ அவர்களின் சொல் மட்டுமே இவளை பொறுத்தவரை முக்கியமானதாக தோன்றியிருந்தது. இதனால் அதீத ஈடுபாட்டை அந்த குழந்தைகள் இருவருக்குள்ளும் கொண்டு செல்ல முயற்சித்தாள். காரணம் தன்னை போல அவர்கள் தாய் தந்தை இல்லாதவர்களாக இல்லாமல் இருந்து விட கூடாது, என்னும் குருட்டுத்தனமான பாசம் கூட இருந்திருக்கலாம்.
வருடங்கள் கடந்து செல்ல செல்ல திவாகரின் பெற்றோர் காலமும் கரைந்து போய் இவர்களின் வாரிசுகள் பெரியவர்களாகி தங்களது எண்னங்கள் மட்டுமே இனிமேல் குடும்பத்தில் தீர்மானமாக இருக்க வேண்டும் என்னும் அளவுக்கு போயிருந்ததாக இவனுக்கு தோன்றியது.
மனைவியிடம் சாடை மாடையாக சொல்லி பார்த்தான், அவங்களையே தலை மேல தூக்கி வச்சு ஆடாதே, நாளைக்கு உனக்குத்தான் சிக்கல். அவளோ அவனையே திருப்பி அடித்தாள், உங்களுக்கு அவங்க மேல தேவையில்லாத கோபம், சந்தேகம், இன்னும் என்னென்னமோ சொன்னாள். அதை விட இவள் உறவுகள் நட்புகளிடம் கூட இவனை விட்டு கொடுக்காமல் இருந்தவள், இன்று குழந்தைகளிடம் “உங்கப்பாவுக்கு ஒரு இழவும் புரியாது” என்று எதிரிலேயே சொல்லும் அளவுக்கு மாறியிருந்தாள்.
வாழ்க்கை ஏதோ ஒரு இடத்தில் நின்றுதானே ஆக வேண்டும். திவாகரனின் உழைப்பு ஓய்வை கொடுக்க, வந்த ஊதியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிருந்தது.
வாரிசுகளுக்கும் இன்னும் பெரிய அளவுக்கு வருமானம் இல்லையென்றாலும் மகனின் மிரட்டல் அவளிடம் எல்லை மீறி பேச வைத்திருந்தது. அவளும் அதை கேட்டு அமைதியாக இருந்ததை பார்த்து இவன் எதிர்த்து பேச முற்பட்ட போது அவள் தடுத்ததும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கல்யாணம் முடிந்து ஓடிய பத்திருபது வருடங்கள், கணவனான இவனிடம் பதிலுக்கு பதில் வார்த்தையால் கொடுத்த அவளது தைரியம், மகனை எதிர்த்து பேச எங்கே போனது?
“ஓ”……இவள் இப்போதைக்கு தன் மனைவி அல்ல, இனி அவள் எப்பொழுதும் இவனுக்கு மனைவியாக திரும்ப வர போவதில்லை. மகனோ மகளோ அவர்களுக்கு தாயாக மட்டுமே நினைத்து கொண்டு அடுத்த வாழ்க்கைக்கு நகரப்போகிறவள்.
திவாகரால் இன்னும் தன் மனைவியின் நலனை பற்றி மட்டுமே சிந்திக்க முடிந்தது. இதற்கு அவன் வாரிசுகள், இவனை பற்றி கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தாலும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Apr-25, 1:28 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 240

மேலே