வாசித்த நூல் ஒன்றை திரும்பி பார்க்கிறேன்
வாசித்த நூல் ஒன்றை திரும்பி பார்க்கிறேன்
“நிலம் பெயர்ந்த தமிழர் வேரும் விழுதும் “ கட்டுரை தொகுப்பை வாசித்து கொண்டிருந்தேன். “இரண்டாயிரத்து ஏழாம்” வருடம் பதிக்கப்பட்ட தொகுப்பு, பதிப்பாசிரியர்கள் ப.கு.சண்முகம், க..ப.அறவாணன், இரா.அறவேந்தன்.
முன்பெல்லாம் “திரைகடலோடி திரவியம் தேடு” என்னும் அடிப்படையில் வளமான அயல் நாடுகளுக்கு சென்று பொருளீட்ட வற்புறுத்தியது அன்றைய கால சூழ்நிலை, எனவே பொருள் சேர்த்தலுக்காக தாயகத்தை விட்டு அயல்நாடுகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது.
பொருளுக்காக புலம் பெயர்தலில் ஒரு திருப்பம், ஐரோப்பியர் வருகைக்கு பின் இந்தியாவிலும் இலங்கையிலும் புதுவையில் இருந்தும் ஏராளமான ஏழை தமிழர்களை ஐரோப்பிய தோட்ட முதலாளிகள் தம் காலனி நாடுகளுக்கு அழைத்து சென்று அவர்களின் தோட்டங்களில் வேலை செய்ய வைத்தனர். இது கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு விருப்பப்பட்டோ, அல்லது இல்லாமலோ, உள்ளூரில் அவர்கள் பட்ட சமூக கொடுமைக்களுக்காவோ இங்கிருந்து சென்றனர்.
அடுத்து உள் நாட்டு போர், அதனால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்று தஞ்சமடைதலும் நடை பெற்றது. இத்தகையவர்கள் ‘அகதிகள்’ என்னும் நிலைமையில் கூட வெளிநாடுகளில் தஞ்சமடைந்த நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கையில் நடைபெற்ற இனகலவரத்தால் ஏற்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியர்களின் ஆதிக்க காலம் முடிவடைந்ததால் புலம் பெயர்ந்திருந்த தமிழர்கள் அந்த நாட்டின் குடிமக்களாயினர். அவர்களின் பொருளாதாரம் இந்திய இலங்கையில் வசிக்கும் தமிழர்களை விட ‘மேம்பட்டதாக’ இருந்தது என்றால் மிகையில்லை.
இந்த கட்டுரை தொகுப்பை வாசிக்கும்போது அன்றைய சூழலில் எழுதப்பட்ட கட்டுரைகள் மனதை நெகிழச்செய்தபடி இருந்தது என்றால் மிகையில்லை, அதிலும் ஒரு சில கட்டுரைகளில் காணப்பட்ட கவிதைகளை பாருங்கள்:.
அவன் படகு புதிய உலகில்
தரை தட்டியது முன் பின் தெரியாத
மக்கள் கூட்டம் கரையில் தெரிந்தது.
அவன் கையில் இருந்தவற்றை
அவர்கள் கேட்டார்கள் ஒரு மூட்டையை
அவிழ்த்து ஒரு மண்ணாங்கட்டியை
நீட்டினான், அவன் கையிலிருந்து அதை பிடுங்கி
உடைத்து சிதறினார்கள். அவன் அழுதான்
என் ‘தாயகம்’ என்றான்
அடுத்து ஒரு கவிதை
உதடுகள் குலைத்த பின்னும் மண்வெட்டிய களை தீர
மாமரத்தின் கீழ் படுத்துறங்கிய-அந்த பொழுதுகளின்
புலர்விற்காக ஏங்கும் இதயங்கள்
இந்த சிக்கலுக்குள் உறைந்து போகும்
தனி மனித வாழ்வு
இப்படி கட்டுரைகளில் ஆங்காங்கே சுட்டி காட்டப்பட்டிருந்த கவிதைகள் மனதை சஞ்சலபடுத்தின. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற சோக சித்திரத்தில் தமிழர்களின், வேலை, பொருள் தேடி வெளிநாட்டு படையெடுப்பு சென்று கொண்டிருக்கிறதா? என்பதுதான் இந்த கட்டுரை அலசுகிறது.
அன்றைய சூழ்நிலை தமிழ்நாட்டில் சமூக அழுத்தங்களுக்கும், அதற்கு பின் இலங்கையில் நடந்த ‘பெருந்துயர்’ காரணமாக வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கும் இப்பொழுது சென்று கொண்டிருப்பவர்கள், செல்லப் போகிறவர்களுக்கும் எத்தனை இடைவெளி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இன்று ஆரம்ப கல்வியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கும் முன்னரே படித்து முடித்து வெளிநாடு சென்று “செட்டிலாகிவிடு” என்னும் பெரு விதையை விதைத்து விடுகிறார்கள்.
அன்று சூழ்நிலை, இன்றோ இவனுக்கு, அல்லது இவளுக்கு கட்டாயம், சீக்கிரம் பொருள் பணம் சம்பாதித்தல், அல்லது விருப்பப்பட்ட வாழ்க்கை, தனி மனித சுதந்திரம், உறவுகளின் தொல்லையில் இருந்து விடுபடல், இப்படி பல காரணங்களை அவர்கள் மனதில் வைத்தே வெளிநாடுகளில் தங்களது வாழ்க்கையை வளப்படுத்த செல்கிறார்கள். இதை தவறென்று எப்படி சொல்ல முடியும்?
இவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றாற் போல் உலகம் சுருங்கி விட்டதோ? என்னும் வகையில் “குளோபலிசேசன்” அல்லது “புற்றீசலாய் தகவல் தொழில் நுட்பத்தில் தேவைப்படும் வேலை வாய்ப்பு பணிகள், இவையெல்லாம் இன்று உலகம் முழுக்க தமிழர்களை பரவி வாழ வைத்து கொண்டிருக்கிறது.
கல்வி ‘குறைவாக’ பெற்றிருந்தாலும் அடிப்படை வேலைவாய்ப்புக்களை பெற்று வெளிநாடுகளுக்கு சென்று பொருள் ஈட்டுவதிலும் இன்று சிறந்துதான் விளங்குகிறார்கள் தமிழர்கள்.
அதே போல் தொழில் கல்வி, அல்லது தொழில் கல்வியை மற்றவர்களிடமிருந்து கற்று கொண்டு அரபு, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கு மின்சாரம், தண்ணீர், மற்றும் பலவித மின், எலக்ட்ரானிக், என்று அதை தயாரித்து உலகம் முழுக்க அனுப்பும் கம்பெனிகளில், கூலி ஆள் முதல் முதல் தர பணியாளர்கள் வரை, பலவித பணிகளை செய்து சம்பாதித்து இங்கு அனுப்புகிறார்கள், அப்படி சம்பாதிக்க மட்டும் செல்லாமல் முயற்சி செய்து அங்கே குடியுரிமை பெற்று வளமாக வாழவும் செய்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மற்றும் மேம்பட்ட கல்வி உயர் தகுதி பெற்றவர்களும் இவர்களை விட அதிகபடசமாக இன்று வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள், உள் நாட்டில் அவர்களுக்கு ஏற்படும் மதிப்பு குறைதல், குறைந்த பட்ச ஊதியம், இன்னும் பல காரணங்கள் சுட்டி காட்டப்படுகின்றன.
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புதுவை, மற்றும் பல மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் பணி செய்து கொண்டிருப்பவர்கள் நாட்டின் ‘நான்கைந்து’ சதவிகிதம் மக்களுக்கு மேல் இருக்கலாம்.இவர்களால் நாட்டிற்கு ஏராளமான ‘அந்நிய செலவாணிகள்’ வந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதானே.
‘அயலக தமிழர்களின் நலத்துறை’ ஒன்றையே தமிழக அரசு ஏற்படுத்தி அவர்களுக்கு தேவைப்படும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது என்றால், அவர்களின் தேவை, மற்றும் சேவை, உள் நாட்டுக்கு, அல்லது உள் மாநிலத்துக்கு எந்தளவுக்கு தேவைப்படுகிறது என்பது புரிகிறது.
இந்த நூலை வாசித்தபோது ஏற்பட்ட அன்றைய சூழலுக்கும், இன்றைய சூழலில், தமிழக மக்களின் வெளிநாட்டு படையெடுப்பு, அது உயர் கல்வி, வேலை வாய்ப்பு, கணிணி திறமை, மற்றும் தொழில் வளமை எதுவாக இருந்தாலும் முன்னர் இருந்தது போல ஒரு வித அழுத்தம், பயம், உள் நாட்டு போர், வேறு வழியில்லாமை, போன்ற காரணங்களால், வெளிநாடு செல்கிறோம் என்னும் வார்த்தை அடிபட்டு விட்டது என்பதுதான் கட்டுரையின் நோக்கம்.
மற்றபடி அவர்களின் தனி மனித துயரம், ஏக்கம், உறவுகள் பிரிவு, பணியின் அழுத்தம், இத்தனையும் தாண்டி தமிழர்கள் அனைத்தையும் தாங்கி கொண்டு, வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்பு பணிகளுக்கு சென்று பொருள் ஈட்டுவதும், அதை உள்ளூரில் கொண்டு வந்து கொடுப்பதும், அனுப்புவதும், அதனால் அவர்கள் ஊர் ‘நல்ல அந்நிய செலவாணியை‘ பெற்று கொடுப்பதும் நாம் மனதளவில் மகிழ்ச்சிக்குரியதாக ஏற்று கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். இதை விட வாய்ப்பு கிடைத்தால் நாமும் கூட செல்லலாமே என்னும் மனநிலையில் கூட இருக்கும் வாய்ப்பு உண்டு.
அப்படித்தான் இன்று ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, என்று குறைந்த பட்சம் ஐந்தாறு விழுக்காடு தமிழர்கள் (ஆண்&பெண்) அயல்நாடுகளுக்கு சர்வ சாதாரணமாக சென்றும் வந்தும், பணிபுரிந்தும் கொண்டும் இருக்கிறார்கள்.
“துன்பத்தால் ஏற்பட்ட விளைவு” என்பது அன்றைய கால கட்டம் என்றால் “இன்பத்தை நாடி” பொருள், பணம் வசதி, இவைகளுக்காக பறந்து கொண்டிருக்கும் மக்கள், இதுதான் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது
ஒரு சில இடங்களில் இந்த கருத்து மாறுபடலாம், அதற்கு காரணமாக சொல்வதென்றால், மனித துயரங்களை ஏற்று கொள்ளும், அத்தகைய வாய்ப்பை பெற்ற மக்களால் ஏற்படுத்தி கொள்வது. என்றாலும் அது சதவிகிதத்தில் குறைவாகத்தான் இருப்பதாக தோன்றுகிறது