வதைபட்டுச் சாகுதே வையம்
உலகில் வாழும் மனிதருக்கு – நல்ல
உள்ளம் உண்டா தெரியவில்லை
வாழும் பூமியை தினம்கெடுத்து – பல
வசதிகள் அடைந்தே களிக்கின்றார்
இயற்கை தந்திட்ட செல்வங்களை – தினம்
இன்முகம் கொண்டு அழிக்கின்றார்
விரைவாய் செல்லும் வாகனத்தால் – நம்மை
வருடும் காற்றில் புகைவிடுவார்
நெகிழிப் பைகளைப் பயன்படுத்தி – இந்த
நெல்தரும் மண்ணை மலடாக்கி
குடுவையில் நிரப்பிய நீர்குடித்து – அதை
குளம்குட்டை ஏரியில் எறிந்திடுவார்
தொழிற்சாலை கழிவின் பெருக்காலே – இங்கு
தொலைந்தது வனங்களின் வளமெல்லாம்
வான்முட்டும் வலைதள கோபுரத்தால் – வானில்
வாழ்ந்திடும் பறவைகள் அழிகிறதே.
இயற்கையை அழிக்கும் செயலெதுவும் – இ’ங்கு
இம்மியிம் இல்லாது காத்திடணும்
நன்னீர் காற்று மண்தன்னை - நம்
நட்பாய் நினைத்து போற்றிடணும்.
சொ. பாஸ்கரன்

