மழையாட வா மயிலே
***************
வானமுத மானமழை வாசலிலே தூறிடுதே
தானமென வாகுமது தானடியே - தேனதிலே
மீனெனவே ஓடிவிளை யாடிடவே வாவெனுதே
மேனகையே நீவெளியே வா
*
மழையோ டுடனே மயிலேநீ யாடு
பிழையே யிழையறி வாயே - பழைய
முகிலாலே பாரு மெழிலா குதேவா
சகிநீ புதுவா சகி
*
குடையி லடையாத கூதலொடு மாரி
நடையு மிடுதேநீ வாவா - தடையு
மிலையே அடியே தமிழி னெழிலே
அலையி லலையாக வா
*
குயிலி னினிய குரலாலே கூவி
மயிலா யகவு மழையே - வெயிலை
விடவு மழகு விரியு மமுத
மடலை யறியநீ வா
*
பருவமழை போலே பருகசுவை ஏது
உருக விலையோ உயிரு - தெருவே
நனைய தேவ நடமிடு வான
முனைநனை யாதோநீ வா
*
(ஒற்றிலாப் பாக்கள்)