விற்பனைக்கல்ல
விற்பனைக்கல்ல ...
ஆயிரந்தான் வியாபாரம் அவனியிலே உண்டு
ஆளுக்கொரு வணிகந்தான் ஆதாயத்திற் கென்று..!
நள்ளிரவில் வியாபாரம்
நங்கைசிலரின் கடையாம்
நைந்தவாழ்வைத் தைக்கவந்து
நழுவியது உடையாம்..!
நட்டாற்றில் நின்றபொழுது
நலங்கொடுப்பார் இல்லை
நசிந்துவிட்டக் கன்னிவாழ்வில்
நரிகளினால் தொல்லை..!
ஒற்றைப்பொருள் வியாபாரம்
ஒளிந்துஒளிந்து நடக்கும்
ஓட்டாண்டியாய் ஆக்கித்தான்
ஊர்க்காவல் மடக்கும்..!
ஓசியிலே வாங்கிடுவார்
ஓட்டைசட்டக் காக்கி
உடன்படவே மறுத்துவிட்டால்
உடன்சிறைதான் தாக்கி..!
வரிசெலுத்தா வணிகத்தில்
வரிகளுண்டு உடலில்
வாரித்தரும் ராசனையே
வைத்திடுவாள் மடியில்..!
கல்யாணம் காட்சியில்லை
கன்னிகழிந்து போகும்
காயம்சுமக்கும் காயத்திலே
வலிகள்கூடி மோதும்..!
வெப்பத்திலே தெப்பம்விட்டு
வியர்வைசிந்தும் வணிகம்
விட்டுவிடும் விடுமுறைதான்
மூன்றுநாளில் முடியும்..!
பொருளொன்று கடையினிலே
வாடிக்கைகள் பலவாம்
பொழுதானால் இருட்டுக்கடை
புனிதமற்றத் தொழிலாம்..!
இருளைவிழுங்கி வாழும்பெண்கள்
இருட்டுக்கடை அல்வா
இச்சைகொண்ட பயல்களுக்கு இனிக்கிறதோ நல்லா..!
பெற்றுச்செல்வார் தம்முடனே
வாங்கும்பொருள் கையில்
பிச்சிப்பூ வணிகத்தில்
வாசம்மட்டும் பையில்..!
விற்றுங்கூட குறையாத
விலைமாதர் உடல்கள்
விற்பனைக்கு அல்லஅது
வேதனையின்
மடல்கள்..!
பச்சிளங் கன்றுகூட
படையலுக்கா ஐயோ..
பாவிகளின் வணிகத்தில்
மூலதனம் மெய்யோ..!
பற்றுகொண்டு கரங்கொடுத்தால்
பரத்தையர்கள் பிழைப்பார்
பாழுந்தொழில் பற்றாது
பைங்கிளிகள் சிறப்பார்..!
#சொ.சாந்தி

