மானசீகக் காதலிகள்

சதர்ன் ரயில்வேயில்
பணியாற்றிய சப்-ஹெட் தாத்தா
ஆண்டில் சில மாதங்கள்
எங்கள் வீட்டில் தங்குவார்.
அவரது அறையின்
நிறைமாத புத்தக அலமாரி
என்னுடன் கதைக்கும்,
வாசிப்பின் மீதான
அவரது ஆழ்ந்த காதலை!
அதன் எவரெஸ்ட்டில்
கோலோச்சிய பலரில்
குறிப்பிடத்தக்கவர்கள்:
கிளியோபாட்றா…
சோபியா லோரென்…
மர்லின் மன்றோ…
எலிசபெத் டெய்லர்…
இரவல் தந்திடாமல்
எவர்கிரீனாக வைத்திருந்த
சூட்சுமம் பிடிபட்டதெனக்கு
வயது பதினாறில்!
அவரைப் போலவே
ஆஜானுபாகுவாக ஆக
அகடவிகடமாக
அவர் பாடமெடுத்த ஒரு நாளில்,
”உடம்பு தான் சிறுசு; மனசு
ரொம்ப பெருசு” என்றேன் சூடாக.
”பெருசுனா………. ஒரு
ஏர்கிராப்ட் கேரியர் இல்லனா
ஏரோப்பிளேன் சைஸ் இருக்குமா?”
கலாய்த்தவர் முகத்தில்
கவுண்டமணியின் பெருமிதம்!
விடாப்பிடியாக நானும்
“உங்க மனசை விட
ரொம்பவே பெ…ரு…சு…” என்றபடி
மானசீகக் காதலி பட்டியலை
மளமளவென ஒப்புவிக்க
மயக்கமானார் தாத்தா!

-ஜ. கோபிநாத்

எழுதியவர் : ஜ. கோபிநாத் (4-Oct-25, 8:16 am)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 55

மேலே