பள்ளியுள் பாயும், பசப்பு - கார் நாற்பது 27

ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற வற்புறுத்தது!
நேரிசை வெண்பா

முருகியம்போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; - பிரிவெண்ணி,
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்ட1,
பள்ளியுள் பாயும், பசப்பு! 27

- கார் நாற்பது

பொருளுரை:

மேகம் குறிஞ்சிப் பறைபோல் முழங்குதலைச் செய்ய காட்டின்கண் குருக்கத்தி யிலை விரிந்தன; (நம் காதலர்) பிரிதலை நன்றென்று நினைத்து நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று நாம் ஊடுதலைப் பாராட்டுவதால் பசலை நோய் படுக்கை யிடத்தில் பரவும்!

முருகுஇயம் - குறிஞ்சிப் பறை விசேடம்; முருகனுக்கு இயக்கப்படுவது!

தொண்டகம், துடி என்பனவும் குறிஞ்சிப் பறைகள் முழங்கி இரங்க; ஒரு பொருளிருசொல்.

குருகு – குருக்கத்தி; இலையென்றமையால் பூத்தலாவது தழைத்தல் எனக்கொள்க;

பள்ளியுட்பாயும் என்றது படுக்கையிற் கிடக்கச் செய்யும் என்னும் குறிப்பிற்று! 1.பாராட்டில் என்றும் பாடம்

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (4-Oct-25, 8:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே