ஐந்தும் உணர்வானாற் பெற்றானாட் கொள்க பெரிது - சிறுபஞ்ச மூலம் 43
நேரிசை வெண்பா
நாள்கூட்ட மூர்த்த மவற்றோடு நன்றாமக்
கோள்கூட்டம் யோகங் குணனுணர்ந்து - தோள்கூட்ட
லுற்றானு மல்லானும் ஐந்தும் உணர்வானாற்
பெற்றானாட் கொள்க பெரிது 43
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
நாட்பொருத்தமும், மூர்த்தமும், அவற்றுடனே நன்மையாகிய அந்த கோளின் பொருத்தமும், யோகமும், (இவற்றாலுண்டாகிற) நன்மையும் ஆராய்ந்தறிந்து (இவை ஐந்தும் நன்மையாயிருக்கிற) நாளைப் பெற்றால் இவ்வைந்தனையு மறிந்து சில நன்மையாகிய காரியங்களைச் செய்வோனும், (ஒருவனோடு ஒருத்தியைத்) தோள் கூட்டலுற்றவனும் மிகவும் நல்ல நாளாகக் கொள்க!
கருத்துரை:
திருமணம் முதலிய நற்செயல்களுக்கு எல்லாம் நாட்பொருத்தம் நாழிகைப் பொருத்தம் முதலியன பார்த்து நல்ல நாள் கொள்ள வேண்டும்.
நாள் - (வாரம், திதி, நட்சத்திரம்) கிழமை, பிறை; விண்மீன்! முழுத்தமாவது மூன்றே முக்கால் நாழிகை கொண்டவேளை; கோள் - ஞாயிறு திங்கள் முதலிய ஒன்பது கோள்கள்.
ஆண்பெண் கூட்டத்துக்குத் தோள் கூட்டம் என்றல் மரபு!

