சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார் - ஆசாரக் கோவை 36

பஃறொடை வெண்பா

சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்;
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்!
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்;
பலரிடை ஆடை உதிராரே யென்றுங்
கடனறி காட்சி யவர் 36

- ஆசாரக் கோவை

பொருளுரை:

விளக்குக்கும் ஒருவர்க்கும் நடுவூடறுத்துப் போகார், சுவரின்மேல் உமிழார், தமக்குக் குளிரான் இடர்வரினும் பிறர் உடுத்த அழுக்கு உடையை தங்கீழ்ப்படுத்தும் மேற்போர்ப்பதும் செய்யார், படை வந்தாயினும் தாம் உடுத்த ஆடையின் காற்று பிறர்மேல் படும்படி செல்லார், பலர் நடுவினின்று உடையை உதறார் எஞ்ஞான்றும் கடப்பாட்டை அறிந்த அறிவுடையார்!

கருத்துரை: விளக்குக்கும் ஒருவர்க்கும் ஊடே செல்லுதல், சுவரில் உமிழ்தல், பிறர் அழுக்குடை யணிதல், அடுத்தவர்மேல் தம் ஆடைக் காற்றுப்படச் செல்லுதல், பலரிடைத் தம் ஆடையை உதறுதல் ஆகியவற்றைச் செய்தலாகாது

மாசு + உணி - அழுக்கால் உண்ணப்பட்டது! "மாசுணி தங்கீழ்மேற் கொள்ளார்" என்றும் பாடம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-25, 3:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே