படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம் - - கார் நாற்பது 32

இன்னிசை வெண்பா

கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு! 32-

- கார் நாற்பது

பொருளுரை:

அழியாத புகழை விரும்புகின்ற செல்வரது மனத்தைப் போல கெடுதலில்லாத மகிழ்ச்சியை யுடைய வண்டுகள் காட்டின்கண் பிடவமாகிய பெருந்தகை யாளிடத்து நன்றாக இசைப்பாட்டினைப் பாடாநிற்கும்; பாகனே! மேகம் ஓடுதலைக் கண்டு தேரை விரையச் செலுத்துவாயாக!

இப் பாட்டு நான்கடியிலும் முதற்கண் அளபெடை வந்தன; கடாவுக என்று பாடமோதுவாரு முளர்; கார் ஓட என்றமையால் மேகத்தின் விரைந்த செலவு குறிப்பித்தவாறு! புகழை விரும்பும் செல்வர் மனம் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்க. பிடவம் - ஒரு செடி; வள்ளன்மையுடை யாரிடத்துப் பாண்மக்கள் பரிசில் கருதிப் பாடுமாறு போலப் பிடவத்தினிடத்துத் தேன்கொளக் கருதிய வண்டுகள் பாடின வென்று உரைக்கப்பட்டது.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (16-Oct-25, 8:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே