பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் - சிறுபஞ்ச மூலம் 47
நேரிசை வெண்பா
நசைகொல்லார்; நச்சியார்க் கென்றுங் கிளைஞர்
மிசைகொல்லார்; வேளாண்மை கொல்லார்; - இசைகொல்லார்
பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய்! நன்குணர்ந்தார்
என்பெறினுங் கொல்லார் இயைந்து! 47
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
பொன்னிறத்தைப் பெற்ற அழகிய தேமலையுடைய மெல்லிய முலைகளையுடைய இளம் பெண்ணே!
நல்ல நெறிகளை யறிந்தவர் தம்மை விரும்பி வேண்டினவரின் விருப்பத்தை எக்காலத்தும் கொல்லமாட்டார்,
உறவினர், நண்பரின் உயர்வினைத் தடுக்க மாட்டார்; ஒருவர் மற்றொருவர்க்குச் செய்யும் உதவியைத் தடுக்கவும், தவிர்க்கவும் மாட்டார்;
தமக்கு வரும் பெருமையையும், புகழையுங் கெடுத்துக் கொள்ள மாட்டார், எவ்வின்பத்தைப் பெறலாயிருப்பினும் மனம் இசைந்து எந்தவிதமான தீய செயல்களையும் செய்ய மாட்டார்,
கருத்துரை:
நன்குணர்ந்தார் நசை கொல்லார், கிளைஞர் மிசை கொல்லார், வேளாண்மை கொல்லார்,
இசை கொல்லார், ஓருயிரையுங் கொல்லார் என்பதாம்.
நசை - விருப்பம். கொல்லன் - கொடுத்தல். மிசை - உண்ணல். இஃது ஆகுபெயராய் உணவை உணர்த்தியது.
வேளாண்மை கொல்லார் என்பதற்குப் பலர்க்கும் பயன்படுவதான பயிர்த்தொழிலைக் கெடுக்கமாட்டார்கள் எனப் பொருளுரைத்தலுமாம்.

