அப்பாவின் ஆசை முத்தம் 😘

அப்பாவின் ஆசை முத்தம் 😘

அது ஒரு அழகான மலைக்கிராமம். எங்கும் பச்சைப் பசேல் என பச்சைப் பட்டாடை விரித்தது போன்ற புல்வெளி. பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அங்குதான் ஆரணியின் குடும்பம் வசித்து வந்தது.

ஆரணியின் இரண்டு சகோதரர்களும், தாயும் தந்தையும் இருக்கின்றனர். மிகவும் வறுமைப்பட்ட குடும்பம். ஆனாலும் அன்புக்கு குறைவில்லை. ஆரணி ஏழாம் வகுப்பில் கல்வி கற்று வந்தாள். மிகவும் கெட்டிக்காரி. எல்லாவற்றிலும் ஆர்வம் உள்ளவள்.

படிப்பதற்கு பணம் ஒரு தடையே இல்லை என்று மூவரும் படித்தனர். ஆரணியின் அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் சென்றால்த்தான் அவர்களின் அன்றாட தேவை நிறைவேற்றப்படும். வாழ்க்கையில் என்னதான் துயரம் வந்தாலும் ஆரணியின் பெற்றோர் சோர்ந்து போகவில்லை. பிள்ளைகளும் வறுமைக்கேற்ப பிடிவாதமின்றி வாழ்ந்து வந்தார்கள்.

இப்படியான நிலையில் பாடசாலையில் சிறுகதைப் போட்டி நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆரணியும் அப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினாள். தனது பெயரை பதிவு செய்துவிட்டு வீடு திரும்பினாள்.

வரும் வளியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த பாட்டி சிறிது புன்னகையோடு பார்த்தார். பாட்டியின் கண்களிலிருந்து வந்த கண்ணீரையும் புன்னகையையும் பார்த்து ஆரணியால் பேசாமல் செல்ல முடியவில்லை. இவ்வளவு துன்பத்திலும் கண்ணீரை மறந்து புன்னகைக்கிறாரே என்று யோசித்தாள். இந்த சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்றால் குடும்பத்தின் வறுமையும் இல்லாமல் போய்விடும் என்று யோசித்தாள். போட்டியில் வெற்றிபெற்றால் கிடைக்கும் பணம் சிறியது எனினும் அவளது மனநிலை பெரிது.

வீட்டுக்குச் சென்று உணவு உண்டபின் தூங்கினாள். அவளால் தூங்க முடியவில்லை. அவளது ஞாபகம் எல்லாம் சிறுகதையைப் பற்றியும் வீட்டின் வறுமையையும், பாட்டியின் வறுமையையும் பற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மறுநாள் ஆசிரியர் சிறுகதைப் போட்டிக்கு தயாராகுமாறு கூறினார். ஆரணி போட்டிக்குத் தயாராகி கதையை எழுதி முடித்தாள்.

நாட்கள் நகர்ந்தது. மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆரணியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஓரிரு வாரங்களின் பின்பு போட்டி முடிவுகள் வந்தது.பரிசுப் பொதிகளும் வந்தது. ஆரணியின் எதிர்பார்ப்பு நிறைவேறியது. அவளுக்கு பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது. அந் நிகழ்ச்சிக்கு ஆரணியின் தந்தை வந்திருந்தார். போட்டி முடிந்ததும் வீடு திரும்பினர்.

வரும் வழியில் தந்தை ஆரணியைப் பார்த்துப் போட்டியில் வெற்றிபெற்ற பணத்திற்கு உனக்கு என்ன வேண்டும் எனக்கேட்டார். அதற்கு ஆரணி எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டு, நான் மரத்தடியில் தினமும் ஒரு பாட்டியைப் பார்ப்பேன். அந்தப் பாட்டி சிறிது புன்னகையோடு என்னைப் பார்ப்பார். அந்தப் பாட்டிக்கு ஏதாவது உதவி செய்யலாமா? என்று கேட்டாள். அப்பா மிகுந்த மகிழ்வோடு தலையை வருடி இந்தப் பணத்தை முழுவதுமாகப் பயன்படுத்தினால்த்தான் அந்தப் பாட்டுக்கு ஒரு இருப்பிடம் அமைத்துக் கொடுக்கலாம் என்று கூறினார்.

ஆரணி எல்லைவிரிந்த சந்தோசப்பட்டாள். அப்பொழுது அப்பா, ஆரணியை ஒரு மகாராணிபோல் மனதில் எண்ணி கன்னத்தில் முத்தமிட்டார். ஆரணிக்கு எவ்வளவு பெறுமதியான பரிசில்கள் கிடைத்தாலும் தனது தந்தையின் ஆசை முத்தம் ஒன்றே மிகப் பெரியதும் நிலையானதுமானதாகவும் உணர்ந்தவளாய் கடவுளுக்கு நன்றி கூறினாள்.
( 2022 ஆம் ஆண்டிற்கான சிவமணி சிறுவர் இலக்கிய விருதினைப் பெற்ற சிறுவர் சிறுகதை)

எழுதியவர் : சுலக்சிகா இராமக்குமார் (17-Oct-25, 3:34 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 21

மேலே