நானும் அப்படியேதான் இருக்கிறேன்
நானும் அப்படியேதான்
இருக்கிறேன்.
02 / 12 / 2024
நான் அப்படியே இருக்கிறேன்.
பிறந்ததிலிருந்து இறப்புவரை
நான் அப்படியே இருக்கிறேன்.
என் குலமும் குடும்பமும்
அப்படியேதான் இருக்கிறது.
என் பிறப்பை
அரசியலாக்கி வாழும் கூட்டம்,
என் வாழ்வை
எருக்களாக்கி தோட்டம் போட்டு
அரசாளும் அதிகார கூட்டம்.
என்னை மிதித்து
அவமதித்து ஏறிய கூட்டம்.
எதுவும் மாறவில்லை - எல்லாம்
அப்படியேதான் இருக்கிறது.
நானும் அப்படியேதான் இருக்கிறேன்.
என் சுயத்தை இழந்து
என் முகமதை தொலைத்து
என் முகவரி கலைத்து
நான் அப்படியே இருக்கிறேன்.
என் அறிவு..
என் திறமை
என் அனுபவம்...
அத்தனையும் அங்கீகாரம்
இல்லாமல் புதைந்தே போகிறது.
உரக்க நான் கூவினாலும்
என் குரல் சபையேறாமல்
சாலையோரமே நின்று போகிறது.
நீ அவனா?
என்ற ஒத்த கேள்வியால்
நான் கூனி குறுகி போகிறேன்.
அப்படியே தலைநிமிர்ந்து
மார்தட்டி ஏதாவது ஒன்றை
செய்துவிட்டால்
ஒரேயொரு ஏளனப் புன்னகையில்
பொடிப்பொடி ஆக்கிவிடுகிறார்கள்.
என் மரபணுவில் மட்டும்
இந்த குறைபாட்டை
விதைத்தது யார்?
இறைவனா? இயற்கையா?
இல்லையில்லை
இந்த பிறப்பை
குறையுள்ளதாக்கி - அதை
ஊதிஊதி பெருசாக்கி
நாம் செய்வது குற்றமோ? - இல்லை
நாம் சொல்வது குறையோ?
என்கின்ற தாழ்வு மனப்பான்மை
விலங்கினை பூட்டி
எங்களை ஒதுக்கியே வைத்த
இந்த சமுதாயம் செய்த
சீர்கேடு...
இதனை தட்டி கேட்க
இதனை சமன் செய்ய
எத்தனை புத்தரோ
எத்தனை அம்பேத்காரோ
எத்தனை பெரியாரோ
பிறந்து வந்தாலும்
மாற்றம் ஒன்றுமில்லாமல்
நான் அப்படியே இருக்கிறேன்.
இன்றும்
நான் அப்படியே இருக்கிறேன்.
என்னை சுற்றி எல்லாம்
வளர்ந்து விட்டது.
நானும் கொஞ்சம் வளர்ந்து விட்டேன்.
எத்தனை வளர்ந்தாலும்
என் நிலைமை
அப்படியேதான் இருக்கிறது.
நானும் அப்படியேதான்
இருக்கிறேன்.

