கடைசியாக காத்திருக்கும் அப்பா

கடைசியாக காத்திருக்கும் அப்பா

என் பெற்றோருக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்களுக்கு பிறகு நான் பிறந்தேன். என் பிறப்பு என் அம்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவளைப் பார்த்து குழந்தை இல்லாத மலடி எனக் கூறி பூஜை சம்பிரதாயங்களில் அவளைச் சேர்க்காமல் நிந்தித்தவர்களின் வாயை என் பிறப்பு அடைத்தது.
இதனால் அவள் என்னிடம் தனது முழு நேரத்தையும் அன்பையும் கொட்டி வளர்த்தாள். அப்பாவும் என்னிடம் மிகவும் செல்லமாக இருந்து நான் எது கேட்டாலும் மறுக்காமல் வாங்கி தந்து விடுவார் . என்னிடம் யாரும் கோபமாக பேசக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். எனக்கு அமுதன் என்ற பெயர் சூட்டி அம்மா அமுதமாக உணவை சமைத்து எனக்கு ஊட்டுவாள்.நாட்கள் உருண்டோடிட என்னை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தது போல் நான் படிப்பில் மிக கவனம் செலுத்தி வகுப்பில் முதல் மார்க்கு எடுத்து நன்றாக படித்தேன்.
அம்மா தலை நிமிர்த்து வீதியில் செல்லும் பொழுது என் மனம் மகிழ்ச்சியில் நிறையும். நான் பள்ளியில் இருந்து வீடு வரும் வேளையில் அம்மாவையோ அப்பாவையோ வழியில் காண நேர்ந்தால் ஓடிச் சென்று கட்டிக் கொள்வேன். ஆண்டுகள் பறந்தன நான் இப்பொழுது பள்ளியில் இறுதி ஆண்டிற்கு வந்து விட்டேன். பள்ளி ஆசியர்கள் என்னிடம் மிக கவனம் செலுத்திப் பாடங்களைப் புரிய வைத்து என்னை இறுதி ஆண்டு பரீட்சைக்கு தயார் செய்து பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி அடைய வேண்டும் எனப் பெரும் பாடு பட்டனர். அதன் விளைவாக நான் பள்ளியிலும் மாநிலத்திலும் தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவனாக வந்தேன். என் பெயர் எல்லா பத்திரிகையிலும் வெளி வந்தது. என்னை பத்திரிகைகள் பேட்டி எடுத்த பொழுது நான் என் ஆசிரியர்களையும் என் பெற்றோர்களையும் புகழ்த்தி பேசினேன். எனக்கு முதல் அமைச்சரின் பாராட்டும் பரிசும் வந்தது. என் பெற்றோர் மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைந்தனர். சில நாட்களில் எனக்கு பல கல்லூரிகளில் இருந்து அழைப்பு வந்தது. நான் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். என் பெற்றோர் என்னைப் பிரிய மனம் இல்லாமல் சில நாட்கள் கலங்கி இருந்தனர் பின் என் அப்பா என்னிடம் நானும் அம்மாவும் அங்கே வந்து ஒரு வீடு எடுத்து உன்னை பார்த்துக் கொள்கிறோம். கவலை இல்லாமல் நீ படிக்கலாம் என்று கூறிட நான் அவர்களுடைய பாசத்தையும் நேசத்தையும் அறிந்து வார்த்தைகளால் நன்றி செலுத்தி வணங்கி மனதில் மகிழ்ச்சியும் அடைந்தேன். கோவையில் என் படிப்பை முடித்து விட்டு தேர்வில் முதல் ரேங்க் வாங்கி வேலைக்கு செல்ல விரும்பி கல்லூரி வழியாக விண்ணப்பம் செய்ய நினைக்கையில் என் கல்லூரியின் முதல்வர் என்னிடம் உனக்கு அமெரிக்காவில் இருந்து மேல் படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது ஆகவே நீ அங்கு சென்று நம் கல்லூரியின் பெயரை நிலைநாட்டி விடு எனக் கூறிட நான் என் பெற்றோரிடம் அதைச் சொல்லி விட்டு வெளிநாட்டை நோக்கி புறப்பட்டேன். வெளி நாட்டில் படித்து முடித்ததும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. என் பெற்றோர்களிடம் ஆசி பெற்று அதை எடுத்து கொண்டேன். நான் வேலையில் சேர்ந்து வருடங்கள் சென்றன. என் பெற்றோர் என்னிடம் வந்து தங்கி செல்ல வேண்டிய செயல்முறைகளை ஆரம்பித்தேன் அது கிடைக்க வருடங்கள் ஆகும் என்றனர். ஆகையால் நான் தனியாகவே வாழ்ந்து வந்தேன். என் பெற்றோர் எனக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்து அதை எனக்குத் தெரிவிக்க நான் கோவைக்கு வந்தேன். சில நாட்களில் என் திருமணம் விமரிசையாக நடத்தது. அதற்கு பின் நான் வேலைக்கு வெளி நாடு செல்ல வேண்டியதால் நான் என் மனைவிக்கு அங்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பம் செய்த பின் அது கிடைக்கும் வரை அவளை என் பெற்றோர்களிடம் இருக்க சொல்லி விட்டு நான் அவளிடம் விடை பெற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டேன். கோவையில் வாழ்ந்து வந்த என் பெற்றோர் என் மனைவியை தங்கள் மகளாகவே கருதி அவளிடம் அன்பு செலுத்தி அவளை ஒரு வேலையும் செய்ய விடாமல் பார்த்து கொண்டனர்.
அவளும் தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து அவர்களை பார்த்து கொண்டதால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.நான் அவ்வப்பொழுது இவர்களை கூப்பிட்டு பேசுவதும் என் வாழ்க்கையை பற்றி கூறுவதுமாக இருந்தேன்.
என் அலுவலகத்தில் எனக்கு நல்ல மரியாதையும் மதிப்பும் இருந்தது. ஒரு வருடம் ஆனவுடன் கோவைக்கு வந்தேன். அங்கு வந்தவுடன் என் பெற்றோர் என்னை மனைவியுடன் சந்தோஷமாக இருக்கச் சொல்லி விட்டு அவர்கள் தேனியில் உள்ள தங்களது தாத்தாவின் பழைய வீட்டிற்கு சென்றனர்.
என் விடுமுறை முடியும் தருவாயில் என்னை என் அலுவலக நண்பர்கள் என்னிடம் இந்தியாவில் இருந்து வேலை செய்யுமாறு கூறிட எனக்கு மூன்றுமாதங்கள் மனைவியுடன் தங்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த மகிழ்ச்சியான வாழ்க்கையினை இன்னும் இன்பமயமாக்க நான் அப்பாவாக போகும் நற்செய்தியை என் மனைவி ஒரு நாள் உரைக்க என் மனம் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தது. என் பெற்றோரிடம் இந்த நல்ல செய்தியைக் கூற அவர்கள் உடனே தனது மருமகளை பார்த்து கொள்ள வந்தனர்.
நான் மீண்டும் வெளிநாடு செல்ல தயாரானேன். நாட்களும்
மாதங்களும் பறந்தது. எனக்கு ஒரு மகன் பிறந்துள்ளான் என்ற செய்தியை என் அப்பா தொலை பேசியில் சொல்லிட நான் மீண்டும் மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டேன். மகன் வந்த நேரம் எனக்கு பதவி உயர்வும் வந்தது. என் அம்மா என்னிடம் பேரப்பிள்ளை ஒரு ஆறு வருடம் எங்களுடனே இருக்கட்டும் எனச் சொல்லி அவன் நன்றாக நடந்து பேச ஆரம்பித்ததும் நீ உன் மனைவியையும் குழந்தையையும் கொண்டு செல்லலாம் என்றாள். என் மனைவியும் இதை ஆமோதிக்க நான் சரி எனக்கூறி வேலையில் என் முழு கவனத்தையும் செலுத்தினேன். ஒருநாள் அதிகாலை நான்கு மணி இருக்கும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் என் மனைவி மாமா மாமி என்று அலறுவது போல் கனவு கண்டேன் திடுக்கிட்டு விழித்தேன். மனம் மிகச் சஞ்சலப் பட்டவனாக மறுபடியும் தூக்கத்தை தொடர்ந்தேன் .

அடுத்த முப்பதாவது நிமிடத்தில் என் கைப்பேசி அலறியது, மனைவி தான் அழைத்திருந்தாள் பதட்டப் பட்டவனாய் கைப்பேசியை எடுத்து ஹலோ என்ற பொழுது
என் மனைவி அழுகையோடு விம்மி என்னங்க…என்னங்க… மாமாவும் மாமியும் என்றாள் நான் பதறியவனாய் என்னாச்சு என வினவ மாமா மாமி இருவரும் ஒரு பேருந்து விபத்தில் நம் யாவரையும் விட்டுட்டு போயிட்டாங்க என்று கதறி அழுதாள்.
கைப்பேசி என் கையில் இருந்து நழுவி விழுந்தது.ஓவென்று கதறி அழ ஆரம்பித்தவுடன் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தங்கியிருந்த அலுவலக நண்பர்கள் வந்துவிட்டார்கள் நிலைமையை எடுத்து கூறினேன் நண்பர்கள் எனக்கு ஆறுதல் கூறி தேற்றிட ஆரம்பித்தார்கள். எனது நிலைமையை அறிந்த அவர்கள் என் மேலாளரை தொடர்பு கொண்டு என் சொந்த ஊருக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்வதாக சொன்னார்கள். அடுத்த நாளே பயணம் செய்ய டிக்கெட் உடனே வேண்டியதால் எனக்கு கொடுத்த டிக்கெட் நான்கு ஊர்களுக்கு செல்லும் படியாக அமைந்தது.
சான்பிரான்சிஸ்கோ வில் இருந்து பாங்காக் அங்கிருந்து மலேசியா அங்கிருந்து சென்னை பின் கோவை என்று எனக்கு இமெயிலில் அனுப்பினர். என் மனைவியை அழைத்து எத்தனை மணிக்கு என்னால் வரமுடியும் என்பதை அவர்களே தெரியப்படுத்தினார்கள்.
மனம் முழுக்க அப்பா அம்மாவின் நினைவுகளை சுமந்தவனாய் ஏர்போர்ட் நோக்கி பயணம் மேற்கொண்டேன். கூடவே எனது நண்பர்களும் வந்தார்கள். இமிக்ரேஷன் மற்றும் செக்யூரிட்டி செக் முடிந்து விமான போர்டிங் அழைப்பும் வந்தது, விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.

பக்கத்து சீட்டு பயணியிடம் என் கவலை சொல்லி கண்ணீர் விட யாரும் இல்லை. நான் முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்டவனாய் உணர்ந்தேன்.


விமானம் புறப்பட்டு அரை மணிநேரத்தில் கவலையில் கண்களை மூடி துக்கத்தில் தூக்கத்தை வரவழைக்க முயன்று கொண்டிருந்த வேளையில், “எக்ஸ்க்யூஸ்மீ சார் வாட் வுட் யூ லைக் டு ஹேவ்” என்றொரு குரல் கேட்டு விழித்தேன்…. என் நண்பர்கள் சில வேளைகளில் கூறியதை நினைவில் கொண்டு மன தைரியத்தை அடைய மதுவின் துணையை நாடினேன் . அளவுக்கு அதிகமாகவே கேட்டு வாங்கி குடித்தேன்
கண்களை மூடியவாரே என் நினைவுகள் அப்படியே பின்நோக்கி நகர்ந்து என் அப்பா அம்மாவோடு இருந்த நாட்களுக்கு சென்றது. எப்படி அம்மாவும் அப்பாவும் என்னை பேணி வளர்த்தனர்,அப்பா எப்படி தனக்கு துணை இருந்து எல்லா விதத்திலும் உதவி செய்தார். அவர்கள் இருவரும் என்னுடைய மேல் படிப்பிற்கு கோவை வந்து எவ்வாறு என்னைக் காத்து ஒரு கவலையும் இல்லாமல் நன்றாக படிக்க வைத்தார்கள்.
நான் இன்று நல்ல நிலையில் வெளிநாட்டில் வேலை செய்வது அவர்களால் தான். அவர்களது அன்பையும் நேசத்தையும் தியாகத்தையும் ஈடுகட்ட முடியாது என மனம் புலம்பிட கண்கள் மூடிய நிலையிலும் கண்ணீர் வெளியே கொட்டியது. மனதின் துன்பங்கள் மறைய மீண்டும் மதுவை நாடினேன்.
இந்த துயர சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் தான், எனது தாயாரைக் கனவில் கண்டேன்… ”டேய் அமுதா…, இனிமேலாவது உனது பிள்ளை பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டுப் போய் சந்தோஷமாக இருடா…அப்பாவை நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லியது நினைவில் வந்தது. விமானம் பாங்காங் வந்து இறங்கிய அடுத்த ஒரு மணிநேரத்தில் எனக்கான மலேசியா விமானத்தில் தடுமாறியபடி ஏறி
அமர்ந்தேன்.
எனது வருகையை வைத்துத் தான் இறுதி சடங்கிற்கு நேரம் குறிக்கப்பட்டது .

மலேசியா வந்திறங்கிய நான் போதையில் தடுமாறியபடியே போர்டிங் நடக்கும் இடம் நோக்கி கால்கள் பின்ன இங்கும் அங்குமாய் ஆடியபடி போய்ச் சேர்ந்தேன். சிவந்த கண்களையும், நான் தடுமாறும் நிலையையும் பார்த்து போர்டிங் அதிகாரிகள் எனக்கு அனுமதி அளிக்க மறுத்தார்கள். என் வாய் குளறும் நிலையிலும் எனது நிலைமையை எடுத்துச் சொல்லி போய்த் தீர வேண்டிய அவசியத்தை சொன்னேன். அவர் என்னைச் சற்று இங்கே அமருங்கள் எனக் கூறி , மேலதிகாரிகளையும் கேப்டனையும் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றார். அந்த நிலையில் என் மனது தவித்த தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்.
ஊரில் இவனது வருகை எதிர்நோக்கி மற்ற சடங்குகளுக்கு ஆயத்தமானார்கள்… சொல்லி விட வேண்டிய அனைவருக்கும் சொல்லி எல்லோரும் வர ஆரம்பித்தார்கள். இவன் நிலை அங்கு யாருக்கும் தெரியாது.
என்னைப் பரிசோதித்த பிறகு… விமானத்தில் அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள் எனது செக்-இன் பேகேஜையும் ஆப்லோட் செய்து விட்டார்கள். ஆயிரம் இடிகள் என் தலையைத் தாக்கியது போல் வலியில் துடித்தேன்.
கடைசியாக முகம் காட்ட காத்திருக்கும் பெற்றோர்களைக் கூட என்னால் பார்க்க முடியவில்லையே என்ற தவிப்பு என்னை நிலைகுலையச் செய்தது.
..

நேராக ரெஸ்ட் ரூமுக்கு சென்று பூட்டிக் கொண்டு கதறி அழுதேன்.பேசும் பொழுது நீ எங்கே சென்றாலும் எங்களுக்கு கொள்ளி வைக்க நீ வர வேண்டும் என்று என்னிடம் சொன்ன அப்பாவின் குரல் மண்டைக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது
குறிப்பிட்ட அந்த விமானத்தில் அவன் பயணம் செய்யவில்லை என்று தெரிந்ததும் அவன் பையனை அவர் பேரனை வைத்துச் சடங்குகளை ஆரம்பித்தார்கள்.

அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாத மகனின் கடமையை அவனது பையன் நிறைவேற்றினான். பெற்றோரின் முகத்தைக் கடைசியாக பார்க்க முடியாமல் போனது மனதுக்கு பெரிய துக்கத்தை அளித்தாலும் அவன் மனதில் ஒரு குரல் கூறியது உன் பெற்றோர்களின் சிரித்த முகம் என்றுமே உனக்கு நினைவிருக்கட்டும் அவர்கள் இறைவனடி சேர்ந்த பின் உள்ள முகம் பார்க்க உன்னால் முடியாது என்பதை அறிந்து தான் இறைவன் உன்னை அங்கு போகாமல் தடுத்து விட்டார் என கூறியது.
அதைக்கேட்டவுடன் அவன் மனம் மௌனமாக அஞ்சலி செலுத்தியது.
. என் மனைவி மூலமாக சடங்குகள் யாவும் நடைபெற்றுவிட்டது என்பதை அறிந்து கொண்டேன். அவளிடம் அடுத்த நாள் வருவதாக கூறிவிட்டு மலேசியாவில் விமான நிலையத்திற்குள் தங்கும் அறை எடுத்து படுத்தேன் உறங்க முடியவில்லை என் மனம் முழுதும் மன்னிப்பை வேண்டியபடி இருந்தது.

என்னைப் பேணி வளர்த்தவர்கள் காத்திருக்க
என் மனவேதனையை முறிக்க மது அருந்தி
என் வாழ்வின் முக்கிய நிகழ்வை தொலைத்தேன்
என்னைப் பெற்றோரே மன்னிக்க வேண்டுகிறேன்
என்றுமே நான் கடன் பட்டவனாகவே வாழ்வேன்

எழுதியவர் : கே என் ராம் (4-Nov-25, 1:15 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 12

மேலே