பார்ப்பார் இலங்குநூல் ஓதாத நாள் - ஆசாரக் கோவை 47

நேரிசை வெண்பா
(ட் ப் க் வல்லின எதுகை)

அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க் குறுகண்ணும் - மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்! 47

- ஆசாரக் கோவை

பொருளுரை:

எட்டா நாள் அட்டமியும், அது ஒழிந்த அமாவாசையும் பௌர்ணமியும் பதினான்கா நாளும், தாந் தங்கியுள்ள பூமியைக் காக்கும் அரசர்க்கு துன்பம் வருங்காலமும், மிகுதியான பூமியின் அதிர்ச்சியுள்ள நாளும், மேக முழக்கமுள்ள நாளும், தாம் தூயரல்லாத நாளும் ஆகிய இந்நாள்களில் அந்தணர் விளங்காநின்ற மறை நூலைப் படிக்கலாகாத நாட்களாம்!

கருத்துரை:

அட்டமி அமாவாசை பௌர்ணமி சதுர்த்தசி அரசர்க்கு உறுகண்வேளை பூகம்பம் இடிமுழக்கம் தூய்மையின்மை என்னுமிவை வேதம் ஓதலாகாக நாட்கள்.

உறுகண் - கலக்க மடைந்த கண்; கலக்கமடைதல், துன்பமுண்டாயின இடத்தாதலால் உறுகண் துன்பம் எனப்பட்டது; வேதம் என்றும் அழியாது ஒரு தன்மையதாயிருப்பதால், இலங்குநூல் எனப்பட்டது; இச்செய்யுட்பொருள் அடியில் வருங் காசிகண்டச் செய்யுளில் அமைந்திருத்த லறிக!

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

உருமுமண் வாரி யுற்கைவீழ்ந் திடுநாள்
சுழல்வளி யுற்றநா ளோர்ப்ப
எரிபடு நாளி லரையிருட் போதிற்
பின்னவ ரிருந்திடு மிடத்தில்
அரசருக் கிடையூ றுற்றுழி யவர்கட்
கசுபம்வந் துற்றிடு நாளில்
மருவிய பதினான் கீருவா நந்தை
அட்டமி யோதல்மாண் பன்றே! - காசிகண்டம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Nov-25, 2:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே