கூர்வேல்வல் வேந்தனாற் தேறப் படுங்குணத்தி னான் - சிறுபஞ்ச மூலம் 58

நேரிசை வெண்பா

பொருள்போகம் அஞ்சாமை பொன்றுங்காற் போந்த
அருள்போகா ஆரறமென் றைந்தும் - இருடீரக்
கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனாற்
தேறப் படுங்குணத்தி னான்! 58

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

பொருளும், இன்பமும், (இடுக்கண் வந்தால் அதற்கு) அஞ்சாமையும், பிறிதோருயிர் அழிய எந்தவிடத்து மிக்க அருளும், நீங்காத அரிய அறமுமென்று சொல்லப்பட்ட இவ்வைந்தும் குற்றந்தீர சொல்லப் படுகின்ற தன் குணங்களை யுடையவன் கூரிய வேற்படையையுடைய வலிய அரசனால் ஒரு கருமத்தின்மேற் செலுத்தத் தக்கவனென்று தெளியப்படுகிற குணத்தை யுடையவனென்று சொல்லப் படுவான்

கருத்துரை:

பொருளும், இன்பமும், இடுக்கண் வந்த காலத்து அதற்கஞ்சாமையும், பிறிதோருயிர் அழிய வந்தவிடத்து அதற்கிரங்கும் அருளுடைமையும், அருமையாகிய அறமும் என்று சொல்லப்பட்ட இவ்வைந்தனையு முடையவன் அரசனாவொரு கருமத்தின் மேற் செலுத்துதற்குரியனாவான்.

இன்பம் முதலியவற்றை நுகர்தல் பெருளில் வழிகூடாமையின் பொருளை முன்வைத்தார். அறம்போலச் சிறந்தது மக்களுயிர்க்குப் பிறிதொன்றின்மையான் ஆரறம் என்றார். தேறல் - தெளிதல்; நம்புதல். போந்த என்பது வந்த என்னும் பொருளில் நின்றது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-25, 9:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே