தளையவிழும் பூங்கோதைத் தாயரே - முத்தொள்ளாயிரம் 67
நேரிசை வெண்பா
தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
களையினும்என் கண்திறந்து காட்டேன் – வளைகொடுப்போம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்
தென்கண் புகுந்தான் இரா!.67
-முத்தொள்ளாயிரம்
பாண்டியன்
பொருளுரை:
மலரும் பூமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து நிற்கும் தாய்மார்களே! “விடிந்துவிட்டது, கண்ணைத் திற” என்கிறீர்கள். என் உயிரே போனாலும் கண்ணைத் திறக்க மாட்டேன். மாறன் என் வளையல்களைக் கழன்று விழும்படிச் செய்து எடுத்துக் கொண்டு போய்விட்டான். அவன் கொடுமைக்காரன். வாளைக் கையில் உடையவன். கருநிற யானை மேல் வந்தான். வந்தவன் இரவில் என் கண்ணுக்குள் அகப்பட்டுக் கொண்டான். கண்ணுக்குள்ளே இருக்கிறான். திறந்தால் ஓடிவிடுவான்.
மால் = கருமை

