தவநனி செய்தறீ தென்பாரை யின்றுகாறி யாங்கண் டிலம் - சிறுபஞ்ச மூலம் 60
நேரிசை வெண்பா
ஏலாமை நன்றீத றீதுபண் பில்லார்க்குச்
சாலாமை நன்றுநூல் சாயினுஞ் - சாலாமை
நன்று தவநனி செய்தறீ தென்பாரை
யின்றுகாறி யாங்கண் டிலம்! 60
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
(ஒரு பொருளை ஒருவனிடத்துச் சென்றிரந்து அவர் கொடுக்க) ஏற்றுக் கொளாமை நன்மையாம்,
நற்குணம் இல்லார்க்கு (அவர் வேண்டிய தொருபொருளை) கொடுத்தல் தீமையாம்,
(நற்குண மில்லாதவர்க்கு) நூற்கல்வி நிரம்பாதிருத்தல் நன்மையாம்,
(ஒருவன்) கெடுவதாயிருந்தாலும் நற்குணங்களால் உயர்வடையாதிருத்தலே நன்மையாம்,
மிகுதியாக தவத்தை இயற்றுதல் கெட்டதாம் என்று சொல்பவர்களை நாம் இன்றளவும் பார்த்திலம், (இவ்வாறு ஒருவரும் சொல்லமாட்டார்கள் என்றபடி)!
கருத்துரை:
ஈயாமை முதலியன நன்மையாம், ஈதல், முதலியன தீமையாம் என்பவர் எவருமிலர்.
‘இன்றுகாறி யாங்கண் டிலம்’ என்றமையால் இனிக் காண்டுமோ வென்னுமையம் நிகழ்தற்கிடமாயிற் றென்க. சாயினும் என்பதன் உம்மை - உயர்வு சிறப்புப் பொருட்டு.

