மின்னல் ஹைக்கூ கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் மதிப்புரை திருமதி மகேஸ்வரி சிவா, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
"மின்னல் ஹைக்கூ" கவிதை நூல் !
ஆசிரியர்: கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை திருமதி மகேஸ்வரி சிவா, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீன. தயாளு தெரு,தியாகராயர் நகர்.சென்னை.17.பக்கங்கள் 84 விலை ரூபாய் 80. தொலைபேசி எண்கள் 044 24342810./ 24310769
அவரது படைப்புக்கு ஒரு படம் என் மனதுக்கு எட்டியது..
கவிஞர் திரு. இரா. இரவி அவர்கள் தமது மின்னல் ஹைக்கூ நூலை மதிப்புரைக்காக அனுப்பி வைத்தார்கள். கவிஞருக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
நூலை கையில் பெற்றவுடன் உணர்ந்தது மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு. தரமான தாள்கள் உபயோகப்படுத்தப்பட்டு, மிகவும் குறைவான விலையில் அற்புதமாக வெளியீடு செய்து, மேனாள் தலைமை செயலாளர் திருமிகு இறையன்பு ஐயா அவர்களின் தந்தையார், மாமனிதர் மதிப்புக்குரிய வெங்கடாசலம் ஐயா அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளது சிறப்பும்! மதிப்பும்!.
வானதி பதிப்பகம் முனைவர் டி ஆர் ராமநாதன் அவர்களின் பதிப்புரையில் இந்நூலின் தனி சிறப்பான கவிஞர் இரா இரவி அவர்களின் கவிதைகளுக்கு பொருத்தமான படங்களை தெரிவு செய்து பொருத்தியுள்ளதை வெகுவாக பாராட்டி படத்துக்காக கவிதையா? கவிதைக்காக படமா? என்று வினா எழுப்பி, ஒன்றை ஒன்று பலப்படுத்துகிறது என்று அவரே விளக்கமும் கொடுத்துள்ளது மிக அழகு! கவிதைக்கேற்ற படங்களை பொருத்திக் கொடுத்துள்ள திருமதி இர.ஜெயப்பிரியங்கா அவர்களின் தமிழ்ப்பற்றும், கவிஞர் இரவி அவர்களின் படைப்புகளின் மீதுள்ள பற்றும் நூலில் வெளிப்பட்டுள்ளது. அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
கவிஞரின் என்னுரையில் தனது சுட்டும் விழி நூலின் கவிதைகளுக்கு பொருத்தமான படங்களை திருமதி ஜெயப்பிரயங்கா வடிவமைத்து வண்ணப் படங்களுடன் அனுப்பியதை நூலாக்க எண்ணி நூல் உருவானதை விளக்கியுள்ளது திருமதி ஜெயப்பிரியங்கா அவர்களுக்கு கொடுக்கும் பரிசாக என்ன தோன்றுகிறது. மிக அழகான செயல்! பாராட்டுக்கள்!
திருமதி ஜெயப்பிரங்கா அவர்களின் பதிவில் அவரது தமிழ் ஆர்வம் கவிஞர். இரா.ரவி அவர்களின் படைப்புக்களை தேடச் செய்துள்ளதை அறிய முடிகிறது. தமது ஆய்வு கட்டுரையை கவிஞரின் நூலில் இருந்து தயாரித்து வழங்கியும், தாமும் கவிதைகள் எழுதி அச்சில் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்ததைச் சொல்லி வளரும் கவிஞர்களுக்கு கவிஞர் இரா. இரவி அவர்களின் ஊக்கப்படுத்தும் உதவிகளை குறிப்பிட்டு பெருமைப்படுத்தியுள்ளார்.
நான் கவிஞர் இரவி அவர்களின் கவிதை நூல்களையும் மதிப்புரை நூல்களையும் வாசித்திருக்கிறேன். மதிப்புக்குரிய நிறைய எழுத்தாளர்கள் கவிஞர்கள் குறித்தும், பெரிய மனிதர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள் குறித்தும் எப்போதும் அவரது பொதுநோக்குப் பார்வை வெளிப்படுவதைப் பார்க்க முடியும். மிகவும் உயர்வாகவும் பெருமையாகவும் தமது பதிவுகளில் வெளிப்படுத்தும் விதம் அனைவரையும் கவரும், எனக்கு மிகவும் பிடிக்கும். கவிஞர் ரவி அவர்களின் தமிழ் தொண்டு போற்றுதலுக்குரியது. திருக்குறளை விடவும் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அர்த்தமுள்ள ஹைக்கூ வரைவது அவருக்கே உரித்தான சிறப்பு!
"மின்னல் ஹைக்கூ" நூலில் மிகவும் கவர்ந்த கவிதைகளை காரணத்தோடு பார்க்கிறேன்..
"சோகத்தில் உளி பாராட்டு வாங்கினார் சிலையோடு சிற்பி"
நேர்மறையாக நோக்கினால் சிலையின் அழகும் சிற்பியின் உழைப்பும் கண்ணுக்குத் தெரியும் ஆனால் அடிவாங்கிய உளியின் கண்ணீர் தெரிவதில்லை அதுபோல பல நேரங்களில் சிலரது உழைப்பும் கண்களுக்கு தெரியாமல் யாரோ பெயரை தட்டிக் கொண்டு போவதும் நடக்கிறது என்பதை கவிஞரின் வரிகள் புலப்படுத்துகிறது.
"மனிதனால் படைக்கப்பட்டு பாடுபடுத்துகிறது பணம்" - உண்மை
"மூச்சுக்காற்று வெப்பமானது தங்கம் விலை உயர்வு " இன்றைய தங்கத்தின் விலை உண்மையாகவே பணம் படைத்தவருக்கும் மூச்சுக்காற்று வெப்பமாவது போல் மிக உயர்வாக உள்ளது, வசதியற்றவர்களின் நிலையை எண்ணி கவிஞரின் கவலை தெரிகிறது.
"உயராத கூலி உயரும் விலைவாசி வேதனையில் ஏழைகள்" - ஆம் கூலி மற்றும் விலைவாசி சமன்பாடு பாகுபாடாகவே உள்ளது அதுவே கவிஞரின் வருத்தம்.
"வேகமாக விற்கின்றது நோய் பரப்பும் குளிர்பானம் வருத்தத்தில் இளநீர்" - உடல் ஆரோக்கியம் பேண இயற்கையான இளநீர் பருகி செயற்கையான நிறங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்துள்ள குளிர்பானங்களை தவிர்க்கச் சொல்கிறார் கவிஞர்.
"பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை போனது பச்சை வயல்" - விவசாயம் குறைந்து நிலங்கள் கட்டிடங்கள் ஆனது வருத்தமே ஆனாலும் எதையும் தவிர்க்க முடியாது என்பதும் தெளிவாகிறது.
"வருமானத்தை விட தீங்கு அதிகம் ஆலைக் கழிவுகள்" - இன்று பெயர் தெரியாத நோய்கள் படுத்தும் பாடுகள் இதுபோன்ற ஆளைக் கழிவுகளின் தீங்குகளை எண்ண வைத்து வருத்தம் கொள்ள வைக்கிறது
"நிலம் விற்றுப் பெற்ற பணத்தில் அப்பாவின் முகம்" - பைசா பைசாவாக சேர்த்து உழைத்து சேர்த்த பணத்தில் அப்பா வாங்கிய நிலத்தை விற்கும் போது அப்பாவின் முகமே முன்னுக்கு கண்ணுக்குத் தெரியும்.
"காணிக்கை கேட்காத கடவுள் அம்மா" - பிரார்த்தனை, கோவில், கடவுளை வணங்குதல் என்றாலே ஏதாவது ஒரு உருவத்தில் காணிக்கை செலுத்துவது வழக்கம். கடவுள் பெயர் கொண்டு காணிக்கை கேட்கும் தேர்வுகளும் உண்டு. ஆனாலும் அம்மா என்னும் உறவுக்கு அம்மா குழந்தைகளுக்கு செய்யும் அருளுக்கு எவ்வித காணிக்கையும் கேட்க மாட்டாள், அன்பைக் கூட மனம் விரும்பினாலும் காணிக்கையாக கேட்க மாட்டாள்..! கவிஞரின் கூற்று உண்மை.
" தமிழ் என்ற சொல்லின்றி தமிழுக்கு மகுடம்" - அழகிய தமிழில் ஈரடிக் குறள்களை இயற்றிய திருவள்ளுவர் தமிழ் என்ற சொல்லை பயன்படுத்தாமலேயே உலகம் முழுவதிலும் தமிழுக்கு மகுடம் பெற்றுக் கொடுத்தார் என்று பெருமை கொள்கிறார் கவிஞர்.
"மரம் வெட்டாதே உணர்ந்திடு பொய்க்கும் மழை" எனும் கவிதையில் மிரட்டலுடன் எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை பேணும் கவிஞர்.
"உண்மையை விட போலிகள் பொலிவாக செயற்கைச் செடிகள்" - இன்று போலிகள் நிரம்பிய உலகில்தான் வாழ்கிறோம். கவிஞரின் எச்சரிக்கை கவிதை வடிவில்.
"ஒரு ரூபாய்க்கு இட்லி போட்டியில் வென்றது புற அழகல்ல அக அழகு" - எங்கள் கோவை கமலா பாட்டியின் அன்பினால் பரிமாறப்படும் மிகக் குறைந்த விலை இட்லியை மையப்படுத்தி கவிஞரின் கருத்து அருமை!
"யாரும் வாங்காமலே மலர்ந்தன பூக்கள் வாடினாள் பூக்காரி" - மொட்டாக பூக்களை வாங்கி உறங்காமல் உழைத்து பூக்களை சரமாக்கி விற்பனையில் பொருள் ஈட்டி குடும்பத்தை காக்கும் பூக்காரிக்கு விற்பனையாகவில்லை என்ற அவளின் ஆழ்ந்த வருத்தத்தையும் நஷ்டத்தையும் பதிவு செய்கிறார் கவிஞர். கருத்து அருமை! படமும் அருமை!
"ஏங்கியது குழந்தை கதை கேட்க முதியோர் இல்லத்தில் பாட்டி" - இன்றைய நாளில் ஆயிரம் வழிகளில் கதை கேட்க கருவிகள் வந்தாலும் உயிர்ப்புடன் தன் பாட்டியிடம் கதை கேட்கும் சுகம் தனி தான் குழந்தைகளுக்கும் தனிமை விலகும் பெரும்பாலும் பெற்றோர் பணிகளில் இருப்பதால். ஆனாலும் குடும்ப சிக்கலால் முதியோர் இல்லத்தில் தாத்தா பாட்டிகள். வருத்தத்துடன் கவிஞரின் வரிகள்.
"ராமன் ஆட்சி இராவணன் ஆட்சி ஒளியாத வறுமை" - கவிஞரின் இந்த கேள்வி நம் அனைவரின் மனதிலும்.
"கோபத்தை குறைக்கும் இதயத்தை இதமாக்கும் இலக்கியம்" - உண்மை.
திருக்குறள் திருவள்ளுவர் குறித்து எப்போதும் கவிஞரின் கவிதைகள் நடமாடும் அவரின் ஆழ்ந்த பற்றில்.. "முக்காலம் வாழ்பவர் எக்காலமும் ஆள்பவர் திருவள்ளுவர் " கவிதை.
என்னை பெரிதும் கவர்ந்தது "இருபாலருக்கும் பொருந்தும் பெயர்கள் பாரதி, இறையன்பு." - பாரதியையும் இறையன்புவையும் கவிஞர் நாள்தோறும் போற்றுபவர் பெயர் மட்டுமல்ல, குணங்களும் இருபாலருக்கும் பொதுவானதாக இருக்கும் உதாரணமாக பாரதி பெண்மையும் பெண்ணின் உயர்வையும் நிறைய பாடியுள்ளார் தன் கவிதைகளில் படைப்புகளில் இறையன்பு ஆண்களை மையப் படுத்தி மட்டும் அல்லாமல் பெண்களின் உழைப்பு சமயோசித புத்தி பெண்கள் அன்பு பற்றி நிறைய பதிவு செய்துள்ளார்கள் தன் படைப்புகளில். கவிஞர் கூற்று அருமையும்! பெருமையும்!.
கவிஞரின் படைப்புக்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மட்டும் போதாது எனினும் சிறப்பு!
மொத்தத்தில் மிகச்சிறந்த அடுத்த கட்ட படைப்பாளர்கள் திரும்பிப் பார்க்கும் வகையிலான படைப்பை கொடுத்துள்ளார் கவிஞர் இரா. இரவி அவர்கள்.
நல்வாழ்த்துக்கள் மேலும் பல சிறப்பான தமிழ் படைப்புகளுக்காக!!!
என்றும் அன்புடன்,

