இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் - பாண்டியன் – முத்தொள்ளாயிரம் 72
நேரிசை வெண்பா
(வல்லின மெய் ப், ற் எதுகை)
இப்பியீன்(று) இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது - கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும். 72
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
சிப்பி ஈன்று அளித்த ஒளி வீசும் முத்துக்கள் துறைமுகப் பட்டினமாகிய கொற்கையின் கடற்கரையில் மட்டும் கிடைக்கக் கூடியது அல்ல;
கொற்கைத் தலைவனாகிய இரத்தம் படிந்த வேலையுடைய பாண்டியனது குளிர்ந்த சந்தனம் பூசப்பட்ட மார்பினை அணையக் கருதிய தலைவியர் கண்களிலும் இயலாமையால் கண்ணிர் முத்துக்கள் தோன்றும்.
இப்பி – சிப்பி, ஈன்று இட்ட – ஈன்றளித்த, எறிகதிர் நித்திலம் – ஒளி வீசும் முத்து,
படுவது – அகப்படுவது; கிடைக்கக் கூடியது, குருதிவேல் – பகைவரது இரத்தம் படிந்த வேல்,
குளிர் சாந்து – குளிர்ந்த சந்தனம், அகலம் – மார்பு
அகலங் கருதியார்’ என்னுந் தொடர் வாயிலாக பாண்டியனுடைய அழகிய மார்பைத் தழுவ பல அழகியர் விரும்பினர் எனவும், அவ்வாறு தழுவ வாய்ப்பில்லாத ஏமாற்ற உணர்வால் கண்ணீர் மல்க ஏங்கினவர் கண்களில் பெருகிய கண்ணீர்த் திவலைகளும் முத்துக்களைப் போலக் காட்சியளித்தன எனப்படுகிறது.

