சிரித்து வாழவேண்டும்
சிரித்து வாழவேண்டும்
சிரித்து வாழ்ந்தால் போதுமடா
சீருடன் சிறப்பும் சேருமடா
புன்னகை என்ற பொன்நகையே
பூமியில் இனிமை சேர்க்குமடா
நன்றாய் நாளும் சிரித்தாலே
நாடியும் நரம்பும் பலமடையும்
சுற்றமும் நட்பும் விலகாமல்
பற்றுடன் நம்மை சுற்றிவரும்
நெஞ்சின் கவலைகள் சிரித்தாலே
பஞ்சாய் பறந்தே மறைந்துவிடும்
வஞ்சக எண்ணத்தை வடிகட்டி
சஞ்சலம் விலகி பறந்தோடும்
பொன்னும் பொருளும் நிறைந்தாலும்
போற்றும் பட்டங்கள் பெற்றாலும்
புன்னகை இல்லா வாழ்வினிலே
புத்தொளி தோன்றிட வழியேது
உறவுகள் உன்னை சுற்றிவர
புறத்திலும் மற்றவர் பற்றிவர
என்றும் வாழ்வில் வெற்றிவர
புன்னகை பூப்போம் பூமியிலே.
சொ, பாஸ்கரன்

