சுவர் தேடும் சித்திரங்கள்

சுவர் தேடும் சித்திரங்கள்
நாங்கள்.....
விண்வெளியில்
கல்பனாவாக ....
காவலில்
கிரண்பேடியாக ....
ஆராய்ச்சியில்
அப்துல் கலாமாக மாற
சுவர் தேடும் சித்திரங்களே
நாங்கள்....
ஆனால்,
எங்கள் சித்திரம்
நான்கு சுவர்களுக்குள்ளேயே
அடக்கப்பட்டுவிட்டது...
ஒலிம்பிக்கில்
பி.டி.உஷாவாக
ஓட வேண்டிய நாங்கள்,
வாழ்கையின் ஓட்டத்திலேயே
ஓட முடியாமல் தவிக்கிறோம்...
குற்றலீஸ்வரனாக
வங்கக்கடலில்
நீந்த வேண்டிய நாங்கள்
கண்ணீர்க்கடலிலேயே
மீள முடியாமல் தவிக்கிறோம்....
கல்வி எங்களுக்குக்
கானல் நீரானது;
பள்ளி எங்களுக்குப்
பகல் கனவானது;
எங்கள் கனவுகளுக்கு
வெளிச்சம் தருவதற்கு
நாங்கள் அடுக்கும்
தீக்குசிகள் கூட
உதவுவதில்லை....
அதனால்தானோ என்னவோ
எங்கள் மனதையும்
மத்தாப்பூ போல
சில நொடி மகிழ்ச்சிக்காக
மனிதகுலம் பயன்படுத்துகிறது...
எங்களுக்குத் தெரியாமலேயே
எங்கள் வாழ்க்கை
எங்களோடு நின்றுபோனது....
எங்கள் கணிதம்
தீக்குச்சியோடு நின்றது;
எங்கள் அறிவியல்
வெடிமருந்தோடு நின்றது;
எங்கள் விளையாட்டு
மேஜை துடைத்தே
முடிந்து போனது;
சீருடை அணிந்து
புத்தகப்பையுடன்
பள்ளியைத் தேடிச்
செல்ல வேண்டுகிறோம்
நாங்கள்...
ஆனால்,
கிழிந்த சட்டையுடன்
வானம் வெளுக்கும் முன்னே
தொழிற்சாலையைத் தேடிச்
சென்று கொண்டிருக்கிறோம்....
சுவரில் சித்திரமாக
விரும்புகிறோம் - நாங்கள்;
எங்களைக்,
காகிதக் கிறுக்கலாகவாவது
வாழ விடுங்கள் - நீங்கள்;
ஏனென்றால்,
நாங்கள்
குழந்தைத் தொழிலாளர்களாம்!!!
மாணவர்களாகக்
கல்வி பெற வேண்டிய
வயதில் - நாங்கள்
குழந்தைத் தொழிலாளர்களாம்!!!