நெல்மணியும் பெண்மணியும்

(நாத்து நடும் நாகம்மாள் , செல்லாத்தாள் இருவரும் அவர்கள் கதையையும் ,ஊரு கதையையும் பேசிக்கொண்டு நாத்துநடவு நடக்கிறது )


நாத்து நடும் நாகம்மா
நான் சொல்லுஞ் சொல்ல கேலம்மா !

என்னாத்த ஏஞ்செல்லாத்தா
சொல்லாத்தா எம் பெரியாத்தா

ஏலா எடுத்தஎடுப்பிலையே
இந்த ஆத்து ஆத்துரவ

சரி சொல்லு பெரியத்தா

''முக்காணி நெல வயக்காட்டில்
மூணு செண்டு பாத்திகட்டி
தண்ணிபாச்சி தொழியுழுது
பரம்படிச்சு உரம்போட்டு
ஊறவச்ச வெதநெல்ல
காலம் பாத்து வெதசிறனும்
அப்பப்ப தண்ணிவிட்டு
தேவபபட்டா மருந்தடிச்சு
இப்பபொறந்தபுள்ள போல
பொத்தி பொத்தி வளத்திடனும்
இருவத்தியொரு நாள்கழிச்சி
கொமரிபுள்ள ரவுக்க போல
சில்லுனு சிலுத்து நிக்கும் நாத்து ''

ஏ ஆத்தா நாஎன்ன சீமையில
இருந்தா வந்திருக்கேன்
இது எனகென்ன தெரியாதா
மீங்குஞ்சுக்கு நீஞ்ச கத்துதாரவ !

அடி போக்கத்தசிறுக்கி பொறுடி கொஞ்சம்

இந்த மூணுசெண்டு நாத்தங்கா
உன் அப்பன் வீடு
21 நாள் நாத்து நீ (21 வயசு பொண்ணு )
நடபோற வயகாடு உன் புருஷன் வீடு
நடுமுன்ன நெலத்த உழுது பரம்படிச்சு
சீர்செய்யரது உனக்கு செய்யும் சீர்
நெல்லுகாய்புடிக்கிறது நீ மசக்கையாவுறது
நெல்லாஉருமாறுவது உன் குழந்த

ஏ ஆத்தா அப்ப அருவட பண்றது

.....உம்ம் உன் கதமுடியிரது

அட அட அட ஏ ஆத்தா இத்துனூண்டு
மண்டைக்குள்ள இம்புட்டு அருவு உனக்கு

அடி நீவேற எனக்கென்னடி தெரியும் இம்புட்டு
அவ பாட்டி சொன்னானு
எம் மவ ''வளரு'' ள்ள சொன்னா !
ஏண்டி நாகு உனகெப்ப கண்ணாலம்

அட போ ஆத்தா நீ வேற
அது ஒன்னுதான் இப்ப கொறயாக்கும்

அடி ஏண்டி சல்லட இல்லாம
இந்த சலி சலிக்கிரவ

கூலிவேல காசபூரா குடிச்சழிக்கும் அப்பன்
ஆத்தா சீக்காளி அண்ணன் ஊதாரி
''தம்பி பட்டதாரி'' வேலைக்கு போக வாய்ப்பேஇல்ல

உந் தம்பிக்கு , உன் அண்ணனும் அப்பனும்
எவ்வளவோ தேவலைன்கிற

இவுக எல்லாருக்கும் இழிச்சவாச்சிநானிருக்கேன்
அட அதவிடு ஆத்தா
உம்மவ ''வளரு'' சில்லுனு வளந்து
நாத்தாட்டம் நிக்குறா
எப்ப புடிங்கி நடபோற

என் அண்ணே மயன் ''விருமாண்டி''
அவளுகின்னே பொறந்திருகான்
அவனும் கட்டுனா ''வளர'' கட்டுவேன்
இல்லாட்டி சாமியாராவேன்கிரானாம்(ரெண்டும் ஒன்னுதான்)

இந்த ஆடி போயி ஆவணில
நிச்சியத்த முடிச்சுக்கிட்டு
பொரட்டாசி அப்பிய காத்திய மாருகழி
முடிஞ்சதுமே தையில தாலிதான் !

ஏ ஆத்தா அந்த ''விருமாண்டி'' பய
என் அப்பன்கூட சேந்துகிட்டு
தண்ணி வெண்ணி அடிகிரான்னு தகவ

''அடி போடி தெருக்கு தெரு கள்ளுகட
கள்ளுகட காசுலதான்
கவர்மண்டு நடக்குதுன்னு
காத்தால பேப்பருல
கணக்கு போட்டு சொல்லுறாங்க
அந்த காந்திதாத்தா இப்ப வந்தா
அவருகூட எப்புடியோ ?
எம்மவ ''வளரு'' ரொம்ப மதிஉள்ளவ
அதனாலதானே ''வளர்மதி'' நு பேர்வச்சேன்
இவள கட்டிப்போன எட்டாநாளு
அந்த சண்டியர சாணியல்ல வச்சிருவா
அவன சுருக்குபையபோல
அவ கொசுவத்துல முடிஞ்சிருவா - அவன்
பச்ச தண்ணிகுடிக்க கூட - இவ
பெர்மிசனு கேக்கவப்பா''
அப்புறம் எங்கிட்டு
இந்த சண்டியரு
சாராயம் குடிக்கிறது !

அப்புறம் உம் மவ
உன்னமாதிரிதானே இருப்பா !

அடியே நாகு வயகாறேன் வாராண்டி!
வெட்டிகத பேசிநின்னா கூலிதரமாட்டாண்டி!
வெரசா நடுடி நாத்த !








எழுதியவர் : மோகனதாஸ் காந்தி (19-Nov-11, 1:05 pm)
பார்வை : 1276

மேலே