கையறு
தாழ்நீக்கி கதவு திறந்ததும்
நெடுஞ்சாண்கிடையாக
காலடியில் விழுந்தது வெயில்
தோள் தொட்டுத்
தூக்கி நிறுத்தி
ஆறுதல் சொல்ல
நெஞ்சுக்குழியில் சுரக்கவில்லை
ஈரமாய் ஒரு சொல்
கையேந்திய கிழவன் முன்
சில்லரையற்று திகைத்து நின்ற
ஒரு பகலை
மென்று தின்னத் தொடங்கினேன்
தாழிட்டு படுக்கையறை புகுந்து
உறங்குவதான பாவனையை
போர்த்திக்கொண்டபின்னும் கேட்கிறது
கதவு தட்டும் சத்தம்