நண்பனின் காதலி

பத்தாம் வகுப்பிலிருந்து
கல்லூரி வரைக்கும் என்னோடு
ஒன்றாய் படித்த பத்மா
என் நண்பனின் காதலி!

கல்லூரி முடித்ததும்
கைகோர்க்கலாம் என்றிருந்தவர்களை
சாதி தடுத்தது..
சமூகம் பிரித்தது..

மீசை முறுக்கிய அரிவாள்களும்,
மஞ்சள் பூசிய முகங்களின்
தற்கொலை மிரட்டல்களும்
பத்மாவை பணியவைத்தன!

எவனுக்கோ மணமாகி
ஏதோ ஒரு ஊர்போய் சேர்ந்தாள்!

ஆண்டுகள் சில கழித்து
என் நண்பனையும் பத்மாவையும்
பல இடங்களில் பார்த்தாக
பலர் கதைத்தார்கள்..

அவர்களுக்குள் கள்ளக்காதல் என்று
என் காதுபடவே பேசினார்கள்!

எது கள்ளக்காதல்?
முதலில் வந்ததா? அல்லது
இடையில் நீங்கள் திணித்ததா?

எழுதியவர் : க.இரத்தினகிரி (23-Jan-12, 5:53 pm)
சேர்த்தது : Rethnagiri,K
பார்வை : 825

மேலே