கண்ணாமூச்சி ரே.. ரே.....

”வேண்டாம் , ஒத்துவராது....விட்டுடு “ தீர்க்கமாக சொன்ன ரம்யாவை தவிப்போடு பார்த்தான் வினோத்.

ரம்யா, என்ன... யோசிச்சுதான் சொல்றியா..? அதிர்ந்துபோய் கேட்டான் வினோத் .

”ஒருமுறைக்கு பலமுறை யோசிச்சிட்டுதான் சொல்றேன்.. எங்க வீட்லா நிறைய பிரச்னை ஆகும் “ கைவிரல் நகங்களை வெறித்தபடியே ரம்யா சொல்ல,சொல்ல வினோத்திற்கு பதட்டம் அதிகரித்தது.

எத்தனை நாளா நான் போராடிட்டிருக்கிறேன் தெரியுமா... ? எத்தனையோ பேரை தேடி,தேடி பார்த்தும் எனக்கு நீதான்
”சரி’ன்னு பட்டது ....உன்னோட சம்மதத்தை வாங்கறதுக்கு
உன் கிளாஸ்மேட்ஸ் வனிதாவையும், ஸ்டெல்லாவையும் எவ்ளோ ”டைம்” நான் பார்த்து பேசியிருப்பேன் தெரியுமா..? இப்ப வந்து இப்படி சொல்றியே....? விட்டால் வினோத் அழுதே விடுவான் போலிருந்தது.

“இங்கே பாரு வினோத்.. நான் ஒண்ணும் வேணும்னே உன்னை ஏமாத்தணும்னு செய்யல.....எப்படியாவது மெல்ல,மெல்ல சொல்லி வீட்ல ஓகே வாங்கிடலாம்னு இருந்தேன்... அதுக்குள்ளே முந்தாநாள் கோயில்ல எங்கம்மாவை பார்த்த என் கிளாஸ்மேட் ராணி உளறிக்கொட்டிட்டா.... எங்க அம்மா அங்கேயே ”ஓ”ன்னு அழுதுட்டாங்க தெரியுமா...? வீட்டில மூணு நாளா என்கூட பேசவேயில்ல... ஒரு நாள் கூட என்னால் அவங்க கூட பேசாம இருக்கவே முடியாது... ப்ச்.. பாவம் அவங்க “ கண்கலங்கினாள் ரம்யா.

அப்ப நான் பாவமில்லையா... ? கேட்க நினைத்து வார்த்தைகளை மனசுக்குள்ளேயே அடக்கிக்கொண்டான் வினோத்.

” ப்ளீஸ்... நான் வேணா வந்து உங்க அம்மாவை சமாதான செய்யட்டுமா.... ? நிச்சயமா உங்க அம்மாவை என்னால காம்ப்ரமைஸ் பண்ண முடியும்...உங்க அம்மா கண்டிப்பா சரின்னு சொல்லிடுவாங்க....” வினோத் கெஞ்சினான்.


அய்யோ.. அதெல்லாம் வேண்டாம் வினோத். எங்க அம்மா ஒத்துக்கிட்டாலும் எங்க அப்பா ஒரு ஆட்டமே ஆடிடுவார்.. எங்கப்பாவுக்கு கோபம் வந்தா , எங்க வீட்ல யாருமே அவருக்கு
எதிரா நிற்ககூட மாட்டோம்..... ஏதோ தப்பு பண்ணிட்டேன்னு , சின்ன வயசுலா, பொண்ணுன்ணு கூட பார்க்காமா பெல்ட்டால அடிச்சத நினைச்சா .. இப்பவும் உடம்பெல்லாம் நடுங்குது... அப்பப்பா. ..ரொம்ப கோவக்காரர் .. நான் ஏதோ விளையாட்டா உங்கிட்ட ஒகே சொல்லிட்டேன்.. ஆனா இப்ப பயமா இருக்கு !!
ரம்யாவின் கண்களில் உண்மையாகவே பயத்தின் சாயல் தெரிந்தது.

”வர்றேன் வினோத்.. ஐ யாம் வெரி சாரி.... ப்ளிஸ் என்னை மன்னிச்சுடு “ அவன் பதிலுக்குகூட காத்திராமல், அறையின் கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு , படி இறங்கி போனாள் ரம்யா.

போச்சு , ஆறு மாசம் நான் கக்ஷ்டப்பட்டதெல்லாம் மொத்தமா வீணாப்போச்சு.... திரும்ப நான் காலேஜ்,காலேஜா வாசல்ல நிக்கணும்... காமிராவை தூக்கிட்டு ரோடு, ரோடா அலையணும்...
கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்த கக்ஷ்டம்...??? ச்சே.. இதெல்லாம் ஒரு தொழிலா... ? தன்னுடைய மாடலிங் தொழிலை
சபித்துக்கொண்டே , சேலை விளம்பர படத்திற்கான மாடலாக
நடிப்பதற்கு ஒத்துக்கொண்டு , இப்பொழுது அப்பாவை காரணம் காட்டி மறுத்துப்போகும் ரம்யாவையை , மனதுக்குள் திட்டியபடி
தாடியை சொறிந்தான் வினோத்.

எழுதியவர் : muruganandan (22-Feb-12, 3:08 pm)
பார்வை : 538

மேலே