கல்லூரி காதல்

“எவன் டி உன்ன பெத்தான்....கையில கிடைச்சா செத்தான்” என்ற STR’ன் குரல்கள் காதினை நிறைத்து கொண்டிருக்கும் வேலையிலியே பேருந்து கல்லூரிக்குள் நுழைந்தது. மனதில் நிறைய ஆசைகளுடனும், கனவுகளுடனும் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தான் விஜயன். பொறுங்க!! பொறுங்க!! விஜயன் கல்லூரியில் புதுசா சேர்ந்திருக்குற ஸ்டூடண்ட் இல்லங்க!! புதுசா சேர்ந்திருக்கும் பேராசிரியர்.

விஜயன் நேராக பாலகிருஷ்ணனை பார்க்க சென்றான். மன்னிச்சுக்கங்க உயர்திரு. மாண்புமிகு. திரு. பாலகிருஷ்ணன் ஐயா அவர்களை பார்க்க சென்றான் விஜயன். புரிஞ்சுருச்சா! ஆமாங்க பால்கி தான் கல்லூரியின் முதல்வர். பால்கியிடம் மிகவும் அடக்கியே வாசித்தான் விஜயன். விஜயனை அழைத்து கொண்டு சிவபிரகாசத்தை பார்க்க சென்றார் பால்கி. சிவபிரகாசம் கல்லூரியின் கட்டிடவியல் (Civil Engineering) துறைக்கான தலைவர். விஜயன் சிவபிரகாசத்திடமும் மிகவும் அடக்கியே வாசித்தான்.

சிவபிரகாசம் விஜயனிடம் ஆசிரியர் பணியின் பொறுப்பறிந்து நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். விஜயனின் காதுகள் மட்டுமே சிவபிரகாசத்தை கவனித்துக் கொண்டிருந்தது. மற்ற அனைத்து புலன்களும் ஆய்வகத்தில் நின்று கொண்டிருந்த மூன்று மாணவிகளையே நோட்டமிட்டு கொண்டிருந்தது. விஜயனிற்கு வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும் உணர்வினை ஏற்படுத்தியது. தனது கல்லூரி காலத்தில் அழகான பெண்களை கண்டால் அடிக்கடி விஜயனிற்கு ஏற்படும் உணர்வு தான் இந்த பட்டாம்பூச்சி நோய். இன்று மீண்டும் அவனுக்கு அந்த நோய் வந்ததை அவன் உணர்ந்தான்.
எதையோ நினைத்தவனாய் மீண்டும் சிவபிரகாசத்திடம் தன் கவனத்தை திருப்பினான். தனக்குள்ளேயே “ அடக்கு, அடக்கு” என்று கூறிக் கொண்டான். சிவபிரகாசம் விஜயனை இரண்டாம் ஆண்டு வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றார். முதல் முறையாய் வகுப்பறைக்குள் ஆசிரியராய் நுழையும் விஜயனிற்கு, முதல் நொடியிலேயே பட்டாம்பூச்சி உணர்வு ஏற்பட்டது. இம்முறை இந்த உணர்வு ஏற்பட்டதற்க்கு மாணவிகள் யாரும் பொறுப்பில்லை. வகுப்பில் படம் நடத்தி கொண்டிருந்த பேராசிரியை அமுதாவே அதன் காரணம்.

அமுதா அந்த கல்லூரியில் இரண்டு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தவள். சேர்ந்த இரு மாதங்களிலேயே மாணவர்களிடமும், சக ஆசிரியர்களிடமும் நல்ல மதிப்பை பெற்றிருந்தாள். சிவபிரகாசம் விஜயனை, மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு விஜயனை பார்த்து கை நீட்டி ஏதாவது பேசுங்கள் என்று சைகையிலேயே உத்தரவிட்டு வெளியே சென்றார். இதற்காகவே கடந்த சில நாட்களாய் பயிற்சி செய்து வந்த விஜயன், தான் மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளை மாணவர்களிடம் ஒப்புவிக்க ஆரம்பித்தான். தான் ஒப்புவித்தலை முடித்து விட்டு விஜயன் அமுதாவிடம் சென்று, “மன்னிச்சுக்கோங்க. வகுப்பு நேரத்துல வந்து உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்துவிட்டேன்” என்று அசட்டு புன்னகையுடன் வழிந்தான். பின் அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அமர்ந்தான்.

முதல் வேலையாக கணினியில் கல்லூரிக்கான வலைத்தளத்தினை திறந்து அதில் கட்டிடவியல் துறைக்கான பேராசிரியர்கள் பட்டியலை நோட்டமிட்டான். அதில் தனது புகைப்படத்தை பார்த்து மிக குஷியானான் விஜயன். பின் அமுதாவை அந்த பட்டியலில் தேடினான். அப்பட்டியலில் அவளின் பெயர் செல்வி. அமுதா என்று எழுதப் பட்டிருப்பதை பார்த்ததும் மிகவும் பூரிப்படைந்தான் விஜயன்.

இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தினமும் முதல் வகுப்பு அமுதாவே எடுத்து வந்தாள். அடுத்த வகுப்பு விஜயனிற்கு என்று ஒதுக்கப்பட்டது. முதல் வகுப்பிற்கான நேரம் முடிவதற்க்கு 10 நிமிடம் முன்னதாகவே சென்று வகுப்பின் முன் நிற்க ஆரம்பித்தான் விஜயன். வகுப்பு எடுக்க அவனுக்கு இருந்த ஆர்வத்தினால் அல்ல. அமுதாவை நோட்டமிடவே. (தூய தமிழ்ல சொன்னா சைட் அடித்தான்).

அடிக்கடி நூலகத்திற்க்கு செல்ல ஆரம்பித்தான். புத்தகங்களில் இருந்து உரை எடுப்பதற்காக அல்ல. அமுதாவிடம் அரட்டை அடிக்கவே. அதுக்குள்ளே எப்படி அரட்டை அளவுக்கு போய்ட்டானு யோசிக்கிறீங்களா? முதலில் புத்தங்கள் சம்மந்தமாக தான் பேச ஆரம்பித்தான். பிறகு அதன் ஆசிரியர்கள் சம்மந்தமாக, அப்புறம் சக ஆசிரியர்கள், மாணவர்கள் இப்படியே போய் இப்போல்லாம் சகஜமா அரட்டை அடிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டான். இப்படியே போன இவர்களின் நட்பு, நாளடைவில் மிக நெருக்கமான உறவாய் மாறியது. சிவபிரகாசம் இவர்களை இரண்டமாண்டு மாணவர்களுடன் பெங்களூர் சுற்றுலா செல்ல அணுப்பி வைத்தார்.

சுற்றுலாவின் இரண்டாம் நாள், ஒரு அழகிய மாலை பொழுதில் தன் காதலை அமுதாவிடம் வெளிப்படுத்தினான் விஜயன். முதலில் அதை மறுத்த அமுதா, சுற்றுலாவின் இறுதி நாள் விஜயனின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தாள்.
இப்போதெல்லாம் விஜயன் வகுப்புக்கு 10 நிமிடங்கள் முன்னதாக வருவ்து இல்லை. ஏனெனில் அமுதாவே 10 நிமிடங்கள் தாமதமாக தான் வகுப்பினை முடித்துக் கொள்கிறாள். காரணம் உங்களுக்கே தெரியும். அவ்வளவு ஆழமான காதலாங்க. (தமிழ்ல சொன்னா டீப் லவ்).
விஜயன் அமுதாவின் காதல் படலம் வகுப்பறை, நூலகம், கல்லூரி உணவகம், துறை ஆய்வகங்கள் என்று பல இடங்களிலும் பரவியது. போட்டு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் சில சக ஆசிரியர்கள், இவர்களை பற்றி துறை தலைவரிடம் பற்ற வைத்தனர். இதனை துறை தலைவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு நாள் அவரின் முன்னரே இவர்களின் காதல் படலம் அரங்கேறியது. இதை கண்ட சிவபிரகாசம் மிகவும் கோபமடைந்தார். இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார் சிவபிரகாசம்.

இந்த எச்சரிக்கைகளுக்கு பயந்தவர்களாய் தெரியவில்லை விஜயனும், அமுதாவும். இரண்டு நாள் அடக்கி வாசித்தார்கள். பிறகு வழக்கம் போல இவர்களின் காதல் படலம் தொடர்ந்தது. இந்த மாதிரி போய்கிட்டு இருந்த கதைல ஒரு பெரிய திருப்பங்க( அதான் ட்விஸ்ட்).

ஒரு நாள் இவர்களின் காதல் படலம் கல்லூரி உணவகத்தில் அரங்கேறி கொண்டிருக்க அதை பால்கி பார்த்துட்டார். அவர் தாங்க உயர்திரு. மாண்புமிகு. திரு. பாலகிருஷ்ணன் ஐயா, கல்லூரி முதல்வர். மறந்துட்டீங்களா!! விஜயன், அமுதா மேல் நடவடிக்கை எடுக்கும்படி பால்கியிடம் இருந்து சிவபிரகாசதிற்கு உத்தரவு வந்தது.
அவர்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்து சிவபிரகாசம், பால்கியின் உத்தரவை விஜயனிடமும், அமுதாவிடமும் கூறினார். பின் விஜயனிடமும், அமுதாவிடமும் நீங்களாகவே இன்னும் 10 நாட்களில் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு கல்லூரியை விட்டு செல்லும்படி கூறினார். இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மூன்று நாட்கள் யோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர்.

பத்தாவது நாள் காலை சிவபிரகாசதின் அறைக்கு கையில் ஒரு கவருடன் விஜயனும், அமுதாவும் நுழைந்தனர். அந்த கவரினை சிவபிரகாசதிடம் கொடுத்தனர். அதை பார்த்து விட்டு பின் இருவரிடம் கைகளை சந்தோசத்துடன் குலுக்கினார் சிவபிரகாசம். என்னங்க யோசிக்கிறீங்க!! விஜயனும், அமுதாவும்’ கொடுத்த கவர் அவர்களின் கல்யாண பத்திரிக்கை. அதை பார்த்த சிவபிரகாசம் இருவரையும் வாழ்த்தி அனுப்பினார். அடுத்த நாள் பால்கி கூட வந்து வாழ்த்தினர்.
இப்போல்லாம் விஜயனுக்கு அந்த ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடிச்சு பறக்குற உணர்வு வர்றதே இல்லங்க. ஒரே ஒரு பட்டாம்பூச்சி தாங்க!!!

எழுதியவர் : ராம்குமார் (26-Feb-12, 7:55 pm)
பார்வை : 3428

மேலே