வெளிச்சத்திற்கு வரும் சூரியன்கள் ...

(கொஞ்சம் பெரிய்ய... சிறுகதை / திருப்பூர் முருகானந்தன் )




“என்னங்க , இந்த ஸ்கூல்லயே படிச்சா என்னவாம்...? “ குழப்பத்தோடு கேட்டாள் சாருமதி . ” வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிட்டதுபோல” மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

ஒவ்வொரு வருடமும் என்னுடைய இந்த முடிவை முன்வைக்கிற பொழுதெல்லாம் சாருவும்,என் அம்மாவும் ஏதாவது காரணம் சொல்லி ( சில நேரங்களில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து...?) தடுத்துவிடுவார்கள் . இந்த முறை அதற்கு வாய்ப்பு தந்துவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

’’இங்க பாரு சாரு , நீ நினைக்கிறமாதிரி இது நம்ம ஊரு மெட்ரிக்குலேசன் ஸ்கூல் அல்ல.... இண்டர்னெசனல் ஸ்கூல். ஊர்ல இருக்கிற முக்கியமான விஐபிங்களோட பசங்க எல்லாம் அங்கதான் படிக்கிறாங்க. அங்க சீட் கிடைக்கிறதுக்கு அவனவன் என்ன பாடுபடறான் தெரியுமா..? மந்திரியை பார்க்கலாமா,கலெக்டர பார்க்கலாமா, கிறிஸ்டியன் பாதர்ஸ் யாரையாவது பார்த்தா காரியம் ஆகுமான்னுட்டு ...லோ,லோன்னு அலையறான். அங்க படிச்சான்னா வினோத்தோட எதிர்காலமே ரொம்ப பிரைட்டா ஆயிடும்... நுனி நாக்கு இங்கிலீஸ், பிரமாதமான கோச்சிங்... எவ்வளவு சிரமப்பட்டு என் நண்பர்கள் மூலமா அந்த ஸ்கூலோட பிரின்ஸிபாலுக்கு சொந்தக்காரங்க ஒருத்தரை பிடிச்சு, சீட் வாங்கியிருக்கேன் தெரியுமா.. ? உனக்கெல்லாம் சொன்னா புரியாது சாரு .... கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சவாதான நீ... ? கோபம் அதிகமாகிவிட , மட்டம்தட்டி அடக்க முயற்சித்தேன்.

” ஆமாங்க நான் கவர்மெண்ட் ஸ்கூல்தான்... உங்க அளவுக்கு படிக்கலைதான்.. ஆனா என் குழந்தைககளை கவனிச்சுக்கிற அளவிற்கு படிச்சிருக்கேன்...ஒரு நல்ல மருமகளா உங்க அம்மா,அப்பாவ பார்த்துக்கிறேன்.. அது போதுங்க எனக்கு.
இங்க பாருங்க... அம்மா,அப்பா,அன்பு,பாசம், சொந்த,பந்தம் இதெல்லாத்தையும் அவன் ஹாஸ்டலுக்கு போனா ’மிஸ்’’ பண்ணிடுவான்... இந்த வயசுல நம்மகூட இருந்தான்னாதான் வாழ்க்கையோட கஸ்ட, நஸ்டம் அவனுக்கும் தெரியும்.... சின்ன,சின்ன தப்பு பண்றப்பவே அன்பா சொல்லி நாம திருத்தமுடியும்... அவனுக்கும் புரியும்.. எனக்கு இதில் கொஞ்சம்கூட சம்மதமில்ல...” கண்களில் நீர் தளும்பியது சாருவுக்கு. நான் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை திருப்பிக்கொண்டாள்.

இங்க பாரு சாரு , நீ என்ன சொன்னாலும் சரி.. இந்த முறை நான் மனசு மாறப்போறதில்ல... வலிய வந்த சீதேவியை எட்டி
உதைக்க என்னால முடியாது... பையனோட லைப் ரொம்ப முக்கியம் . அடுத்த வருசம் சிக்ஸ்த் ஸ்டேண்டர்டு அவன் அந்த ஸ்கூல்லதான் படிக்கபோறான்...ப்ச்.. என்ன இன்னொரு ஐம்பதாயிரமோ , ஒரு லட்சமோ ஜாஸ்திதான்... பட் நான் முடிவு பண்ணிட்டேன் ... திங்க கிழமை நாம போறோம் .. அட்மிசன் பீஸ் ஐம்பதினாயிரத்தை முதல்ல கட்றோம் .... இதில மாற்றமே இல்லை.. “ கறாராக சொல்லிவிட்டு , அலுவலகத்திற்கு கிளம்பினேன்.

” இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் வம்பு ...வெள்ளிக்கிழமை காலை எப்போதும் கோயிலுக்கு போகும் அம்மாவும், அப்பாவும் வந்துவிட்டால் ,மருமகளோடு கூட்டணி சேர்ந்து விடுவார்கள்... ஸ்கூல் பீஸை கட்டிட்டம்னா அப்புறம் ஒண்ணும் பண்ண முடியாது... அப்பா புரிந்துகொள்வார்....அம்மாதான் அழுது வைப்பாள் ...மாதத்திற்கு ரெண்டு மூணு முறை போய் பார்த்துட்டு வரலாம் என்று எதையாவது சொல்லி சமாளிப்போம் ... நாலைந்து மாசத்தில எல்லாம் சரியாகிடும்...” மனதிற்குள் நினைத்துக்கொண்டே காரை கிளப்பினேன்.

இந்த இடத்தில் ஒரு சிறு அறிமுகம் செய்துகொள்வோமா.... ?
நான் ஒரு பெரிய பைனான்ஸ் கம்பெனியின் திருப்பூர் கிளையின் உதவி மேலாளர் . பிகாம் கோல்ட் மெடல் . பிறகு பிஎஸ்ஜி கல்லூரியில் எம்பிஏ . சொந்தமாக தொழில் தொடங்க முயற்சித்து, சரிவராமல் போக, இந்த கம்பெனியில் சீனியர் எக்ஸிகியூடிவாக வேலையில் சேர்ந்தேன். ஆறு மாதத்தில் தங்கைக்கு சென்னையில் நல்ல இடத்தில் சம்பந்தம் வர , கொஞ்சம்கூட தாமதிக்காமல் தட,புடலாக முடித்தோம். கல்யாணத்திற்கு அவங்க வீட்டோடு வந்த சாருவைப்பார்க்க .... மனதிற்கு பிடித்துவிட்டது எனக்கு. மாப்பிள்ளைக்கு ஏதோ தூரத்து சொந்தம். என் அம்மாவிடம் சொல்ல, அங்கேயே விசாரித்தாள்.. கட்டுகிற முறைதான் என்று தெரிந்தது. ஜாதகமும், லெளலீகமும் ஓகே ஆகிவிட, பிறெகென்ன... அடுத்த ஆறு மாதத்திலேயே சிம்பிளாக கல்யாணமும் செய்தாகிவிட்டது. அழகான , அன்பான ..முக்கியமா.. எனக்கு பயப்படுகிற மனைவி சாருமதி. இந்த இடத்தில், சாருவைப்பற்றி உங்களிடம் முக்கியமாக ஒன்றைச் சொல்லவேண்டும் ..வெகு அருமையாக சமைப்பாள். கத்தரிக்காய் வத்தல்குழம்பு வைத்தால் அந்த வீதியே அன்று எங்கள் வீட்டுககு ஆஜராகிவிடும் என்றால்... பார்த்துக்கொள்ளுங்களேன்.

வயதான அம்மாவும், அப்பாவும் , வாழ்ந்த ஊரை விட்டுவிட்டு வர மறுத்ததால் , அதே நிறுவனத்திலேயே வேலையைத்தொடர வேண்டியதாயிற்று. சாருவும் அவர்களை விட்டு பிரிய மறுக்க , இங்கேயே செட்டிலாகிவிட்டேனென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் என் தியாகத்தை....! ( ச்சு..ச்சு..ச்சு.. நீங்கள் உச்சு கொட்டுவது கேட்கிறது....தேங்க்ஸ் ) அதனால்தான் என் பையனையாவது அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவிற்கோ அனுப்பி விட வேண்டுமென்று முழுமூச்சாக இருக்கிறேன்.. ஆனால் என் அம்மாவும்,அப்பாவும் அதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.. முட்டாள் சாருவும் அவர்களோடு சேர்ந்துகொண்டு ..... என்னோடு மல்லுக்கு நிற்கிறாள். அந்த மாதிரி நேரங்களில் மட்டும்தான் நான் அவளை கடிந்துகொள்வேன்.. மற்றபடி .. ”ஐ லவ் யூ சாரு” ரகம்தான்... நான்.

பையன் வினோத் அருகிலுள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாவது படிக்கிறான். ரொம்ப ஜீனியஸ்... நன்றாக கிரிக்கெட் விளையாடுவான் . எதிர்த்த வீட்ல இருக்கிறவங்க “உங்க பையன் பெரியவன் ஆனதுக்கு அப்புறமே நாங்க எங்களோட மேல் வீட்டு கண்ணாடி ஜன்னலை மாத்திக்கொள்கிறோம்” என்கிற அளவிற்கு குறும்பு மட்டும் கொஞ்சம் ஜாஸ்தி.....பட், சமர்த்து.

பொண்ணு ஐஸ்வர்யா . ரெண்டு வயது சங்கீதம் . ”குழல் இனிது, யாழ் இனிது”ன்னு வள்ளுவரோட குரளை ஒத்துக்கொள்ளாதவர்கள் இவளோட மழலை மொழிகளை கேட்காதவர்கள் என்பேன் ..... அவ்ளோதான் என் பயோ டேட்டா..

அலுவலகத்திற்கு சீக்கிரமே வந்ததற்காய் செக்யூரிட்டி ஆச்சரியமாக பார்த்தான். அவனின் வணக்கத்தை அலட்சியமாக ஏற்றுக்கொண்டே பைல்களில் மூழ்கினேன்.

1 மணிக்கு மதிய உணவினை முடித்துக்கொண்டு சற்றே கண்மூடி இருந்தேன். செல்போன் அடித்தது. வீட்டிலிருந்து அழைப்பு. நிச்சயம் ஏதோ பிரச்னையாகத்தான் இருக்கும்..

என்ன சாரு .. எதுக்கு கூப்பிட்டே.. ?

”உங்க அம்மாவும் , அப்பாவும் சாப்பிடாமா அடம் பிடிக்கிறாங்க. நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்கிறாங்க” அவளது குரலில் லேசாக கேலி தொனித்தமாதிரி இருந்தது எனக்கு ”என்னதான அடக்குவீங்க... இவங்களை என்ன பண்ணுவீங்க” என்பதுமாதிரி

”அம்மாகிட்டே போனை முதல்ல குடு ”

அம்மா லைனில் வந்தார் .

”என்னம்மா இது... புதுசா சத்தியாக்கிரகமெல்லாம் பண்ணீட்டு... .யார் சொல்லிக்கொடுத்தது..? சாரு ஏதாச்சும் கிளப்பி விட்டாளா..? நீங்களே சர்க்கரை நோயாளி. சரியான நேரத்திற்கு சாப்பிடாமபோய் ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது... ? இப்ப சாப்பிடுங்க ......எதுவா இருந்தாலும் நான் வந்ததற்கு பிறகு பேசிக்கலாம்.”.

”அதெல்லாம் முடியாது... வினோத்தை அனுப்பலேன்னு சொல்லு .. நாங்க சாப்பிடறோம்...” இது அம்மா.

இதென்ன விளையாட்டு ? அப்பாவும், நீயும் என்னை புரிஞ்சுக்கவே மாட்டிங்களா... என் பையனோட எதிர்காலத்தை நல்ல படியா அமைச்சு தர வேண்டியது , அப்பாவான என்னோட கடமை இல்லையா.. ? நான் கடிந்துகொண்டேன்.

”ஏன்டா.. நீயெல்லாம் இங்கதானா படிச்ச... இப்ப நல்லா இல்லையா..கை நிறைய சம்பாரிக்கலையா.. படிக்கிறவன் எங்க இருந்தாலும் படிப்பான்டா “ அம்மா மடக்கினார்.

”அம்மா . உனக்கு புரியாது.. அப்ப காலம் வேற... இப்ப இருக்கிற காலம் வேற... அன்னைக்கெல்லாம் படிச்சா மட்டும் போதும். இன்னைக்கு ? எக்ஸ்ட்ராவா கம்யூட்டர், ஆங்கிலம் ,அது இதுன்னுட்டு .. ஏகப்பட்ட விசயம் தெரிஞ்சாதான் .. ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தில செட்டில் ஆக முடியும்... அதுக்கு அவன் அங்க படிச்சாதான் சரி....எனக்கு மட்டும் என்ன ஆசையா.. அவனைத் பிரிஞ்சிருக்க.... வேற வழி இல்லாமத்தான் இந்த ஏற்பாட்டை செஞ்சேன்.. நீங்க ரெண்டு பேரும் இப்ப சாப்பிடலைன்னா நானும் இங்க சாப்பிடமாட்டேன்... என்ன சொல்றீங்க..? ” அவர்கள் வழியிலேயே அவர்களை மடக்கினேன் ஒரு பொய்யைச்சொல்லி.

அம்மாவுக்கு தெரியும் , நான் பசி தாங்க மாட்டேன் என்று . உடனே வழிக்கு வந்து விடுவாள்.

எதிர்பார்த்த மாதிரியே அந்த பக்கம் அம்மா மூக்கை உறிஞ்சிக்கொண்டே கம்மிய குரலில் பேசினாள்.....
” நீ முதல்ல சாப்பிடுடா... நாங்க சாப்பிடறோம்”
டொக்”கென்று போனை வைத்ததில் அவளது இயலாமை
தெறித்தது.

பிற்பகல் 3 மணி இருக்கும்.திரும்பவும் செல்போன் அழைத்தது. “யாராக இருக்கும்” என்று யோசனையிலேயே போனை எடுத்தேன்.

”சார் , வணக்கம். நேரு நற்பணி மன்றத்திலிருந்து சங்கர் பேசறேன் . என்ன மறந்திட்டீங்களா..? சரியா 4 மணிக்கு விழா தொடங்கிடும் . சீப் கஸ்ட் நீங்க...ஒரு 10 நிமிடம் முன்னதாகவே வந்திட்டா தேவலை. ஞாபகப்படுத்ததான் கூப்பிட்டேன் ..” அவசரம் தெறித்தது குரலில்.

”ஓ..சங்கர்....?? ஸாரி..... கொஞ்சம் வேலை பிஸி.. மறந்திட்டேன்...
கட்டாயம் வர்றேன்... ஞாபகப்படுத்தினதுக்கு தேங்க்ஸ் “

”தேங்க்யூ சார் ...பள்ளியில் சந்திப்போம் “ போனை துண்டித்தான்.

என் ஊரில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளியில் இன்று பரிசளிப்பு விழா. இந்த நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள்
ஏற்பாடு செய்திருந்தார்கள். பள்ளிக்குழந்தைகளுக்கு வருடா,வருடம் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசளிக்கும் நிகழ்ச்சி அது. இந்த ஆண்டு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கிறபோது , வேலை நேரத்தில் இதுமாதிரி விழாக்களை அவர்கள் விரும்புவதில்லை என்பதால், நானுமே கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிடுவேன்..
ஆனால் இவர்கள் விடாப்பிடியாக இருந்தார்கள்... இந்த ஆண்டு நான் தான் வரவேண்டுமென்று. உள்ளூரில் இருக்கும் பெரிய மனிதர்களுக்கிடையே , சுயமுயற்சியினால் படித்து , படிப்படியாக உயர்ந்து ஒரு பெரிய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்...சொந்த ஊராக வேறு போய்விட்டபடியால் நானும் ஒத்துக்கொண்டேன் வழியில்லாமலே....


வேலை கொஞ்சம் குறைவாக இருந்ததால் , முக்கால் மணி நேரம் முன்னதாக , மூணேகாலுக்கெல்லாம் என் வேலைகளை முடித்துக்கொண்டு சீனியர் மேனேஜரிடம் தெரிவித்துவிட்டு கிளம்பினேன்.

பள்ளியின் முகப்பிலேயே சங்கர் வரவேற்றார் . சுறு,சுறுப்பான இளைஞர். எங்கள் பகுதியில் கோவில் கும்பாபிசேகம்,மருத்துவ முகாம், இரத்ததான முகாம் என்று கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நன்றாக இயங்கி கொண்டிருந்தது அவரின் இளைஞர் நற்பணி மன்றம் . விழா மேடையிலும், மைதானத்திலுமாக சுமார் 20 இளைஞர்கள் பம்பரமாக இயங்கி கொண்டிருந்தார்கள். முன்புறமாக சேர்கள் வரிசையாக போடப்பட்டிருந்தன . பின்புறமிருந்த இருக்கைகளில் ,மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொருவராக வந்து அமரத்தொடங்கி இருந்தார்கள். முன்புற இருக்கைகள் மாணவர்களுக்காக காலியாக விடப்பட்டிருந்தன போலும்..

நடுத்தரமான பள்ளிக்கூடம்தான் அது.
தலைமையாசிரியரின் அறைக்கு என்னை அழைத்துச்சென்றார் சங்கர். இனிய முகத்தோடு என்னை வரவேற்றார் தலைமையாசிரியர். அவரது தலைக்கு மேலே காந்தியும், காமராஜரும் , புகைப்படங்களில் அழகாய் புன்னகைத்தார்கள். சுவாமி விவேகானந்தரின் மார்பளவு சிலை , பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்டிருக்கும் போலும்.. தத்ரூபமாக இருந்தது.... மேஜையின் இடதுபுறமிருந்த கண்ணாடி அலமாரியிலிருந்து கம்பீரமாக மாணவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. ஐந்தாம் வகுப்பு அறையென்பதை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த ஐந்தாம் வகுப்பு ஏ பிரிவு, மொட்டுக்கள் 35 , மலர்கள் 32 என்ற வாசகங்கள் காண்பித்துக்கொடுத்தன. மாணவர்கள் எல்லோரும் வெள்ளைச்சட்டையை நன்றாக கால்சட்டைக்குள் ”இன்” செய்து அமர்ந்திருந்தார்கள். மாணவிகள் எண்ணெய் தலையை படிய,படிய வாரிச்சீவி ஆகாய புளூ கலர் ரிப்பன் வைத்து ஜடை பின்னிக்கொண்டு பளிச்சென்று இருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

அதைவிட ஆச்சரியம் , எல்லோரும் எழுந்து நின்று ஒரே நேரத்தில் “ குட் ஆப்டர் நூன் சார். காட் பிளஸ் யூ சார் “ என்று என்னை வாழ்த்தியது..... எதிர்பாராதது...

ஓ.. குட் ஆப்டர் நூன் ..தேங்க் யூ ..எல்லொரும் உட்காருங்க.... உட்காருங்க “ வியந்துகொண்டே அவர்களை அமர சொன்னேன். என் வியப்பினை அறிந்துகொண்டவர்போல ” புதிதாக உங்களைப்போல முக்கியமானவங்க யார் வந்தாலும் இப்படி ஆங்கிலத்தில வரவேற்கச் சொல்லிக்கொடுத்திருக்கோம் சார்....” என்றபடி தலைமையாசிரியர் புன்னைகைத்தார்..
.

” அரசுப்பள்ளிகளில் பொதுவா தமிழ்லாதான் வரவேற்பாங்க.. ஆனா இஙகதான் வித்தியாசமா ஆங்கிலத்திலேயே மாணவர்கள் வெல்கம் பணறாங்க.. அதான் எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது “ ஆச்சரியத்தை மறைக்கவில்லை நான்.

”எஸ் ..எஸ்.. நீங்க சொல்றது சரிதான்.. ஆனா பிரைவேட் ஸ்கூல்ல ஐந்தாவது படிக்கிற மாணவன் தப்போ, சரியோ... முழுக்க,முழுக்க ஆங்கிலத்திலேயே பேசுகிற போது, கவர்மெண்ட் ஸ்கூல்ல அதே வகுப்பில படிக்கிற மாணவன் ஒரளவுக்காவது ஆங்கிலத்தில பேசட்டுமேன்னுதான் , நாங்களே கொஞ்சம் முயற்சியெடுத்து இதுமாதிரியெல்லாம் சொல்லித்தர்றோம்.. இந்த மாதிரி சமயங்கள்ளே நாம இந்த மாணவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொல்லி உற்சாகப்படுத்தினாதான் .. தப்போ, ரைட்டோ அவங்களும் பேசிப்பழகுவாங்க்.... ஏன் தமிழ் மீடியத்தில படிக்கிற குழந்தைங்க ,பெரியவனான பிறகு இங்கிலீஸ்ல தடுமாறுதுன்னா ...கூச்சமும், தப்பா பேசிட்டா கேலி பேசுவாங்களோங்கிற பயமும்தான் காரணம்... இன்னும் சொல்லப்போன 1ம் வகுப்புல இருந்து 5 ஆம் வகுப்பு வரைங்கிறது.. அடிப்படையான காலகட்டம்.. இங்கீலிஸ் மட்டுமில்லாம .. எதை கத்துக்கிறதா இருந்தாலும் , இந்த காலகட்டத்தில அதன் மேல இருக்கிற பயம் போனதான் , பின்னாடி தைரியமா டெவலப் பண்ண முடியும்.. அதுனாலதான் எங்களால முடிஞ்ச வறக்கும் ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து .. பேச வைக்கிறோம்.. தமிழ் , தமிழ் நாட்டுக்கு... ஆங்கிலம் மத்த நாட்டுக்கு” ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தார் எச்எம்.

நீங்க சொல்றது ரொம்ப சரி.. எல்லா அரசு பள்ளிக்கூடத்திலேயும் உங்களை மாதிரி பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டா ... நாட்டில பிரைவேட் ஸ்கூலுக்கே வேலை இல்லாம போயிடும்போல இருக்கே... “ சிரித்துக்கொண்டே நான் பதில் சொல்ல, என் சிரிப்பில் அவர்கள் இருவருமே கலந்துகொண்டனர்.

” சார் . நீங்க பேசிட்டிருங்க.. நான் விழாவிற்கான ஏற்பாடுகளை
முடிச்சிட்டு வர்றேன் . நான் சொன்னதுக்கு அப்புறம் நீங்க மேடைக்கு வந்தா சரி... “ சொல்லிவிட்டு சங்கர் வெளியேறினார்.


பேச்சு திசை திரும்பியது. மெல்ல பார்வையை ஓட விட்டேன். மாணவிகளில் ஒரு பெண் கொஞ்சம் பெரியவளாக இருந்தாள். அவளை சுட்டிக்காண்பித்துக் கேட்டேன்.. ”ஏன் சார்.. அந்த பொண்ணு எட்டாவது படிக்கிறமாதிரி கொஞ்சம் பெரிய பொண்ணாட்டம் இருக்காளே..... .. ?

” நீங்க நினைக்கிறது சரிதான் .. 3 வருசம் கழிச்சு இந்த வருசம்தான் அவள் திரும்பவும் ஸ்கூலுக்கு வந்திருக்கா...” தலைமையாசிரியர் பதில் சொன்னார்.

“ஏன் சார், என்ன ஆச்சு.. ? ”

நடந்தவைகளை நினைவு கூர்ந்தார் தலைமையாசிரியர்
” அந்த பொண்ணு 4ம் வகுப்பு படிக்கிறப்போ , அவ அம்மாவுக்கு இன்னொரு ஆண்குழந்தை பொறந்திருக்கு . அவ அப்பா,அம்மா ரெண்டு பேருமே கூலி வேலை. வறுமையான சூழல். வெளியூர்ல இருந்து , பொழப்பு தேடி , திருப்பூருக்கு வந்தவங்க.. வீட்ல பெரியவங்கன்னு யாரும் இல்ல.. சொந்த,பந்தமும் கிடையாது.. அதுனால அந்த குழந்தையை மூணுவருசமா அவள்தான் பார்த்துக்க வேண்டியதா போச்சு... பக்கத்து வீட்டில ஒரு வயசான பாட்டி ஏதோ கூடமாட ஒத்தாசைய இருந்திருக்காங்க...
விட்டுப்போன குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கறதுக்காக வீடு,வீடா போனப்பா, தற்செயலா அவங்க வீட்டுக்கு எங்க டீச்சர் போனப்பதான் இந்த விசயமே எங்களுக்கு தெரிய வந்தது. டீச்சர பார்த்ததும் அந்த பொண்ணு ”ஓ”ன்னு அழ ஆரம்பிச்சுட்டா. “ டீச்சர்.. எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு.... எங்க அம்மாவும், அப்பாவும் என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டீங்கறாங்க டீச்சர் ...... நீ ஸ்கூலுக்கு போனா தம்பிய யாரிடி பார்த்துக்குவான்னு எங்கப்பா என்னை அடிக்கிறாரு டீச்சர் “ னு கதர்றா... எங்க அப்பாகிட்டே சொல்லி என்னை ஸ்கூல்ல திரும்பியும் சேர்த்துக்குவீங்களா...ப்ளீஸ் ? உங்களை மாதிரியே நானும் ஒரு டீச்சரா வரணும்னு ஆசை, ஆசையா இருக்கு “ னு சொல்லி அழுதத தாங்க முடியாமா எங்க டீச்சர் வந்து சொன்னாங்க.

அப்புறம்தான் நாங்க ஒரு நாலைஞ்சு டீச்சர் எப்படியாவது அவங்க அப்பாவை சமாதானப்படுத்திடலாமுன்னு அவங்க வீட்டுக்கே போனோம். அந்த பையனையே காரணம் காண்பிச்சு முடியவே முடியாதுன்னுட்டார். ” உங்க பையனை வேணா ஸ்கூலுகு பக்கத்திலேயே இருக்கிற பால்வாடியில பத்திரமா பாத்துக்குறோம்” கிற உறுதிமொழியையும் கொடுத்தும் மனுசன் அசைஞ்சு வர்லே....

” நீங்க சொல்றதெல்லாம் சரி டீச்சர்... ஆனா எங்களால இப்ப இருக்கிற நிலைமையில ஒரு சல்லிக்காசு கூட செலவு பண்ணமுடியாது ....எனக்கும் வேலை முன்ன மாதிரி ரெகுலரா கிடைக்கிறதில்ல.. இவ அம்மாவுக்கு அடிக்கடி ஏதாவது உடம்புக்கு வந்திடுது.. ... இதுல புக்கு வாங்கிறதுக்கு, சட்டைக்கு, செருப்புக்குன்னெல்லாம் எங்க போயி செலவு பண்றது.....?” அவரின் சிரமங்களை பட்டியலிட்டாரே தவிர, தன் பொண்ணோட எதிர்காலம் குறித்து கொஞ்சம் கூட யோசித்த மாதிரி தெரியலை.

”இங்க பாருங்க, உங்க பொண்ணுக்கு ஒரு ரூபா கூட செலவு செய்ய வேண்டாம்.. அவ படிக்கிறதுக்கு வேணுங்கிறா எல்லாமெ நாங்க பார்த்துக்குறோம்... நீங்க உங்க பொண்ணை மட்டும் ஸ்கூலுக்கு அனுப்பிச்சு வைங்க... சின்ன பொண்ணு ,படிக்கணும்னு ஆசைப்படுது..” ன்னு சொன்னதிற்கு பிறகும் அரைகுறை மனதோடு சம்மதித்தார். இப்ப அவ தம்பி பால்வாடியில.. இந்த பொண்ணு இங்கே “



”படிப்பு எவ்வளவு முக்கியம்னு கூட தெரியாமா , இன்னும் நாட்டில நிறைய ஜனங்க இருக்கத்தான் செய்றாங்க.. என்ன செய்றது... ? ” பெருமூச்செறிந்தார்.

அவரின் உறுதியை பார்த்து திகைத்துப்போனேன் நான். “அது சரி.. அப்ப இந்த பொண்ணோட படிப்புக்கு நீங்க என்ன பண்றீங்க... ? அடுத்த கேள்வி தானாகவே வந்தது என்னிடமிருந்து.

”முருகப்பன்னு சொல்லி இந்த பள்ளியோட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். ரொம்ப நல்ல மனிதர். தன் சொந்த பணத்தில இருந்து வருசா,வருசம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் தொகையை இதுமாதிரி குழந்தைகளின் படிப்பு செலவுக்காக உதவுறார். பத்தும், பத்தாதற்கு சங்கரோட இளைஞர் அமைப்பும் உதவி பண்றாங்க. அதுபோக இன்னும் சில நல்ல மனிதர்கள் இருக்காங்க . அவங்களோட தயவிலதான் சமாளிக்குறோம்.. எப்படியோ இதுவரைக்கும் பிரச்னை இல்லை..“ சொன்னவரை பார்க்கும்போது , எனக்குள் ஏதோ ஒன்று உறுத்துவது போல இருந்தது..


ரெண்டு நிமிடம் மெளனம் நிலவியது அங்கே.

எச்எம்மே அதை உடைத்தார் . ”அதைவிட , ரொம்ப வித்தியாசமான மாணவர்களை நீங்க பார்க்க வேண்டாமா..?

”முருகா....எழுந்திரு. போய் இசக்கி, கணேசன்,வெள்ளையன், முத்தாயி ,இலட்சுமிய கூட்டிட்டு வா...”

குடு,குடுவென்று ஓடினான் முருகன். 3 நிமிட நேரத்தில் மேற்சொன்ன அனைவரும் கைகளை கூப்பியபடி உள்ளே வந்தனர். மற்ற குழந்தைகளை விட இவர்களின் உடையானது அழுக்காக இருந்தது. அதில் ரெண்டு பேருக்கு யூனிபார்மும் இல்லை. பொண்ணுகளின் தலை எண்ணெய் பசை காணாமல் பறட்டையாக இருந்தது. ஆனாலும்.... சுத்தமாக இருந்தார்கள்.

”இவங்கெல்லாம் யார் தெரியுமா சார்.... அந்த ஈஸ்வரன் கோயில் முக்குல தேர் நிலைக்கு பக்கத்தில ஒரு கூட்டமா இருப்பாங்களே ... பார்த்திருக்கீங்களா.. ?”

”ஓ.. அந்த நரிக்குறவங்க தானே.. பார்த்திருக்கேனே ” நான்.

”அந்த நரிக்குறவங்களோட குழந்தைகதான் இவங்க எல்லாம்..”

வியப்பில் புருவங்கள் மேலேறியது எனக்கு ”நரிக்குறவங்களோட குழந்தைகள் ஸ்கூல்ல படிக்கிறாங்களா...? “

” ஆமாம்... முதல் தலைமுறையா படிக்க வந்திருப்பவர்கள் ......எல்லோருக்கும் கல்வின்னு அரசு ஒரு திட்டம் கூட அறிவிச்சிருக்கே... அந்த திட்டத்தில இந்த பசங்களையும் சேர்த்திடணும்னு கிட்டத்தட்ட நானும்,எங்களோட டீச்சர்ஸும் ஒரு பத்து நடை நடந்திருப்போம் பெத்தவங்க கிட்ட பேசி சம்மதம் வாங்கறதுக்கு... முதல் தடவை போனப்ப ....கூட்டமா கூடி சண்டைக்கே வந்துட்டாங்க......நாயெல்லாம் ஒரு பக்கம் வாள்,வாள்ன்னு குரைக்குது.. அப்பப்பா.. . அப்ப நம்ம சங்கர் மட்டும் இல்லைன்னா ... ரொம்ப சிரமத்தில மாட்டிருப்போம்...சாம,தான,பேத ,தண்டம்னு...எல்லா வழிகளையும் கையாண்டுதான் சேர்த்தமுடிஞ்சுது... ரேசன் கார்டெல்லாம் எதுவும் கிடையாது...இருந்தாலும் மணியக்காரர்கிட்டே சொல்லி ,இருப்பிட சான்று வாங்கி எப்படியோ சேர்த்திட்டோம் “ கொஞ்சம் நிறுத்தி ஆசுவாசப்படுத்திகொண்டார்.


”இவ்வளவுக்கும் காரணம் இந்த முருகன்தான் சார்.. நான் கிளாஸ் எடுக்கிறப்போ ஜன்னல் ஓரமா வந்து நின்னுக்குவான்.. போடான்னு சொன்னாலும் போக மாட்டான்... அவங்கிட்ட இருக்கிற உடைஞ்ச சிலேட்டில போர்டில நான் எழுதிப்போடறது மாதிரியே எழுதிப்பார்ப்பான்.. அதுமட்டுமில்ல... . அவங்களை நீங்க கவனிச்சு இருக்கீங்களா.. ? பொதுவா காலையில ஒண்ணு சாப்பிட மாட்டாங்க..டீயோ , பன்னோ அதோட சரி.. மதியானம் பெரும்பாலும் ஏதாவது பழையது.... இரவிலதான் அடுப்பு பத்த வைச்சு சூடா சாப்பாடு... இதுதான் அவங்க வாழ்க்கை முறை.
ஒரு நாள் மதிய உணவு நேரத்தில ஸ்கூல்ல படிக்கிற குழந்தைகள் எல்லாம் லைனா சாப்பாடு வாங்கிட்டு போறப்ப.. இந்த முருகனும் .. ஒரு உடைஞ்ச தட்ட நீட்டிட்டு வந்தான்.. அன்னைக்கு ஏதோ நல்ல பசி மயக்கத்தில இருந்திருப்பான்போல. பாக்கவே பாரிதாபமா இருந்துச்சு... சரின்னு .. அவனுக்கும் சாப்பாடு போடச்சொன்னேன்.. அப்புறம் பார்த்தா டெய்லி வர ஆரம்பிச்சுட்டான்... போனா போகுது ..ஒருத்தன் தானேன்னு .. சாப்பாடு போட ஆரம்பிச்சோம்.. தட்டுல சாப்பாடு வாங்கிட்டு, அங்கேயே சாப்பிடாம .. எடுத்துட்டு வெளியே போயிடுவான்.. வீணா எறிஞ்சுட்டு போயிடுவானோன்னு , ஒரு நாள் சந்தேகம் வந்து ஒரு பையனை அவன் பின்னாலயே அனுப்பிவைச்சு பார்க்கச் சொன்னேன்... என்னாடான்னு பார்த்தா.. இதோ ....இவங்கள்ல மீதி இருககிற அஞ்சு பேரும் வர்ற வழியில இருக்கிற அந்த பெருமாள் கோயில் மண்டபத்தில் இவனுக்காக காத்திட்டிருகாங்க .. இவன் கொண்டு வர்ற சாப்பாடை சாப்பிடறதுக்கு.... ஆளுக்கு கொஞ்ச, கொஞ்சம்தான் வரும்.. ஆனா அதையும் பங்கு போட்டு சாப்பிடராங்கன்னா.. அடடா.. நினைச்சு பாருங்க...அந்த ஒற்றுமையை.. இப்ப ஸ்கூல்கூட அப்படித்தான்.. ஒரு குழுவாத்தான் சேர்ந்தே இருப்பாங்க .. சாப்பிடுவாங்க....விளையாடுவாங்க ... படிப்பிலயும் ஆர்வமா இருக்குதுங்க.. ஒத்துமையாகவும் இருக்கிறாங்க ... சேர்த்துக்குவோம்னு முடிவு செஞ்சோம் .. சேர்த்திட்டோம் “ அவர் பேசப்,பேச எனக்கு வாய் அடைத்துக்கொண்டது திகைப்பில்.


”அதெல்லாம் சரிங்க சார் .. நீங்க எதுக்கு...?” நான் கேள்வியை முடிக்கவில்லை...


”.... இத்தனை ரிஸ்க் எடுத்து இந்த வேலையை செய்யிறேன்னு கேட்கிறீங்களா.. ? ஆசிரியர் இடைம்றித்தார்

’எஸ்.. எதனாலன்னு தெரிஞ்சுக்கலாமா... ?. என்றேன்.

” ஏன்னா... நானும் சின்னவயசில ரொம்ப அடிபட்டவன் சார்.. .. எங்க அப்பா நான் ரெண்டாவது படிக்கிறப்பவே காலமாகிட்டார்... எங்க வீட்டில, என்னோட சேர்த்து 4 பேர்... வறுமைன்னா ,வறுமை ..அப்படி ஒரு வறுமை.. அம்மா எப்படியோ நாலுவீடல பாத்திரம் தேச்சு எங்களுக்கு கூழோ,கஞ்சியோ ஊத்தி வளர்த்தினாங்க.. பட்..படிக்கிறதுக்கு....?. ஊரில் இருந்த ஒரு ரிடையர்டு கல்லூரி பேராசிரியர், நல்ல மனிதர் ... ஆனா அவருக்கு குழந்தையில்லை.. அவரோட தயவில நாங்க மூணுபேரும் படிச்சு,முடிச்சோம்.. இன்னைக்கு எல்லோரும் ஒரு நல்ல நிலைமையில இருக்கோம்.. அன்னைக்கு எங்களுக்கு ஒரு தெய்வம்,மனித ரூபத்தில் உதவியது. இப்போ என்னால முடிஞ்சதை நான செய்யவேண்டாமா....? குரல் தழு,தழுத்தது. மாணவர்கள் அறியாமல் கண்களை துடைத்துகொண்டார்.


நானுமே கண்கலங்கி விட்டேன்.

சங்கர் அப்பொழுதுதான் உள்ளே வந்தார்.” சாரி சார் , விழா ஒரு அரைமணி நேரம் தாமதமாயிடுச்சு. போலாமா..? ”

அனைவருமே விழா மேடையை நோக்கி நடந்தோம்.

விழா தொடங்கியது. பரிசளிப்புகள், பாராட்டுகள் எல்லாம் முடிந்து , எல்லோரும் பேசி முடித்தபிறகு.. இறுதியாக என்முறை.

” இந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் உயர்ந்த உள்ளத்தையும், சங்கர் மற்றும் அவரின் குழுவினரின் தொண்டுகளையும் மனமாறப் பாராட்டுகிறேன். இந்த பள்ளி இவர்களால் பெருமைப்படுகிறது. இப்படிப்பட நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் இன்னும் இந்த தேசத்தின் பண்பாடும்,பெருமையும் உயரத்தில் பறக்கிறது.. . உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தியினை சொல்ல கடைமைப்பட்டிருக்கிறேன்.... இவர்களின் இந்த உன்னதமான முயற்சிகள் தொடர , நானும் அணில் பங்காவது உதவ விரும்புகிறேன்.. இது என் இதயப்பூர்வமான விருப்பம் மட்டுமல்ல.. வளமான பாரதத்திற்கான என் சிறு பங்களிப்பும் கூட.....ஆனால் இதைக்கொண்டு உங்களால் இன்னும் பல அப்துல்கலாம்களையும், ஐன்ஸ்டீன்களையும், எடிசன்களையும் நிச்சயமாகவே உருவாக்க முடியும் என்று நான மனப்பூர்வமாக நம்புகிறேன் ... ஆம், இந்த ஆண்டு முதல் உங்கள் பள்ளி மாணவர்களின் கல்வி ம்ற்றும் பொது நலனிற்காக ஒவ்வொரு வருடமும் 50000 ரூபாயகளை என்னுடைய நன்கொடையாக தர முடிவு செய்திருக்கிறேன்...வளரட்டும் உங்கள் மகத்தான கல்விப்பணி ” சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்தின் கரகோசம் பள்ளிக்கட்டிடத்தின் சுவர்களில் பட்டு, ஆகாயம் எங்கும் எதிரொலித்தது. காலையில் கனத்திருந்த மனம் இப்போது லேசாக , காற்றைப்போல இருப்பதாக உணர்ந்தேன்.

ஏகப்பட்ட பாராட்டுக்களிலிருந்து விடுபட்டு வீடு நோக்கி விரைந்தேன்... மணி எட்டு

எதிர்பார்த்ததுபோலவே... அம்மாவும், அப்பாவும் .. வாசலிலேயே.... வாடிய முகங்களோடு காத்திருந்தார்கள்... அம்மாவின் மடியில் வினோத் தேம்பிக்கொண்டிருந்தான்.. செல்ல மகள் அண்ணனின் அழுகைக்கான காரணம் புரியாமல் சோகமாக அவனருகே. உள்ளே சத்தம் கேட்டது ..சாரு ஏதோ பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தாள். வீடே கலகலப்பின்றி இருளாய் ...

” ஏய்... சாரு ..எங்கே இருக்கே நீ... ? எல்லாத்துக்கும் ஒரு குட் நீயூஸ்.... வினோத் எங்கேயும் போகலை.. இங்கேயே படிக்கட்டும்.... முடிவு பண்ணிட்டேன்..“ உரத்த குரலில் சொல்லியவாறே சிரித்தபடியே காரிலிருந்து நான் இறங்க
” ஹோய்... ஹோய்......அப்பான்னா.. அப்பாதான்... நல்ல அப்பா ” கத்திக்கொண்டே ஒடிவந்த வினோத் என் தோளைப்பிடித்துகொண்டு தொங்கினான். ”ஹையா...அண்ணா.... சிச்சிட்டான்...சிச்சிட்டான்...”கைகளை தட்டி, கெக்கலித்தாள் ஐஸ்வர்யா .

என்னடா... நிஜமாத்தான் சொல்றியா .. ? அம்மாவும், அப்பாவும் நம்பமுடியாமல் கேட்க , எட்டிப்பார்த்த சாருவும் என்னுடைய இந்த தீடீர் மனமாற்றத்திற்கு காரணம் புரியாமல் திகைத்தாள்....

”அப்புறம் சொல்றேன் எல்லாத்தையும் விவரமா.. ? என்ன சரிதானே...?” நான் சிரித்தபடி தலையாட்டினேன். மகிழ்ச்சியில் எல்லோருமே இணைந்துகொள்ள ...... சிரித்தபிறகும் நீண்டது அந்த ஆனந்தம்...!

எழுதியவர் : muruganandan (29-Feb-12, 3:03 pm)
பார்வை : 683

சிறந்த கவிதைகள்

மேலே