இரண்டொரு நாள் மட்டும்.! பொள்ளாச்சி அபி

அன்புள்ள கவிஞனே..! இதுவரை
நீ எதை எழுதியிருந்தாலும்
அது யாருக்கான கவிதையோ..
எதற்கான கவிதையோ..
எதுவாய்வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப்போகட்டும்..!

இத்தனைநாளும் உன்னை..
உன் உணர்ச்சிகளை
உள்ளத்துக் கிளர்ச்சிகளை
விதவிதமாய் உன் எழுத்துக்கள்
வெளிப்படுத்தியிருக்கும்..!

வாசலில் வந்துநிற்கும்
பிச்சைக்காரனுக்குக்கூட
நீ மறுத்துவிட்டால் மற்ற வீடுண்டு.
உன் தாயும் தந்தையும்
இரத்த சொந்தங்களையும்
அடுத்தவீட்டு வாசலில்
நிற்பதாக உன் கற்பனை நீளுமா..?

ஆனால்..
உண்ணஉணவின்றி
உறங்க உறைவிடமின்றி
உறவுகளின்றி,இனி
உயிரிருக்குமாவென்ற நம்பிக்கையுமின்றி
ஒரு கூட்டம் இருப்பது
உனக்கும் தெரிந்திருக்கும்..!

அப்படியொரு நிலை
அதைவிட ஆயிரம்மடங்கு
நிதர்சனத்தில் இன்றுண்டு..
அதை மாற்றிட உனக்கும்
சக்தியுண்டு..!
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட
இனப் படுகொலைக்கு
காரணமான ராட்ஷசர்களை
தண்டிக்க உனக்கின்று
அதிகாரமுண்டு..!

இன்று ஒரு நாள் அல்ல
இன்னும் இரண்டுநாள்..மட்டும்
அந்த அதிகாரத்தை உனது
எழுத்தின் மூலம் வெளிப்படுத்து..
எங்கெல்லாம் எதிரொலிக்கமுடியுமோ
அங்கெல்லாம் எடுத்துச் செல்..
நமது காதலும்,காதல் தோல்வியும்
இன்னும்பல சங்கதிகளும்
அடுத்தவாரமும் நம்மோடுதானிருக்கும்
அடுத்து இந்த சந்தர்ப்பம்
எப்போதும் கிடைக்காது.

மத்தியஅரசே,இலங்கையில்
நிகழ்ந்தது போர்க்குற்றமே..என
அமெரிக்கா கொண்டுவந்த
தீர்மானத்தை ஆதரி என்று..!
ஒருவரி ஒரேயொருவரி எழுது
இத்தளத்தில் உன் எழுத்தால்
எழுதவும் தூண்டு...

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (19-Mar-12, 5:50 pm)
பார்வை : 191

மேலே