மரணத்தின் வாசலில் ............... !

உறவுகள் எல்லாம் கூடி இங்கே
கவலை கொண்ட முகங்களோடு

மரணத்தின் வாசல் நோக்கி அந்த
மரக்கட்டிலில் ஒரு மெலிந்த உடல்

சுவாசம் ஒன்றே செயல் பாடு கொண்டு
மணிக்கொரு மாற்றம் உடல் நிலையில்

மருத்துவருக்கு தெரியும் நாடி துடிப்பு
படைத்தவனுக்கு மட்டும் தெரியும் நாள் கணக்கு

பிள்ளைகளும் , வாரிசுகளும் பெயர் சொல்லி
வறண்ட நாவிற்கு பால் ஊற்ற

தொண்டைக்கு கீழ் இறங்குவதும் அந்த
படைத்தவனின் நாட்டப்படிதான்

சொந்தங்கள் சூழ்ந்து முனுமுனுப்பது
காதுகளில் கேட்டாலும் படுக்கையில்
நாவும் இயலாத நிலை மூடிய இமைகளும்

கட்டிலில் அமர்ந்து கண் திறக்குமா என்று
கனத்த மனதோடு வாழ்ந்த காலங்களை
வரிசை படுத்தி பேசி கொள்ளும் உறவுகள்

அசையும் விழி நோக்கி ஆசையுடன்
எல்லோரும் உற்று நோக்க

கண்ணீர் விழிகளில் வழிந்தோடும் அன்றி
பேசாத வாய் மட்டும் திறந்திருக்கும்

சோதனைகளை அடியானுக்கு
இறைவன் கொடுப்பதில் வல்லவன்

கூலிகளையும் , தண்டனையும்
தருவதில் நேர்மையானவன்

அல்லாஹுவின் நாட்டப்படிதான்
எல்லாம் நடக்கும் என்று எண்ணி

படைக்கப்பட்ட நோக்கம் என்ன
வணக்கங்களும் அவனுக்காக என்று

மனம் உருகி வேண்டி நிற்போம்
வேதனையில் இருந்து காத்தருள

எங்கள் மரணத்தின் வாசலை
இலகுவாக்கி தருவாய் ரஹுமானே !

துவாவுடன் !

ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (1-Apr-12, 11:29 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 242

மேலே