[208 ] துணைக்கு வாரும்..!

செல்லாத காசெனவே சிதறியே கிடந்தாலும்,
நல்லசில காசுக்கே நாங்களுமே விலைபோனோம்!
பொல்லாத வரதட்சணைப் பேயே நீ போய்த்தொலைக!
எல்லோர்க்கும் வாய்க்கட்டும் இனியேனும் நல்வாழ்வு!

தூக்கத்தின் முன்னே தொடையமுக்கி விட்டிடுவார்!
ஏக்கத்தைக் கூட எதிர்நின்று பேசிவிடார்!
தாக்கத்தைப் புதைத்திருப்பார் தமக்குள்ளே! பிள்ளைகளின்
ஊக்கத்தைக் கூட உடையார்முன் ஒளித்திடுவார்!
போக்கத்தே பிறந்தாலும் பிறகதனை முணுமுணுக்கார்!
நோக்கத்தான் மாட்டாரே நொடிப்பொழுதும், நாணத்தால்
தாக்கியவர் போலுடனே தலைகுனிவர் ! இன்றவரோ
படித்துவிட்டார் ! பலபடிப்பும் படித்துதலை எடுத்துவிட்டார்!
தூக்கிவைத்த தலைகுனியார்! துடுக்குடனே பேசிடுவார்!
வாக்குவாதம் தான்எதிலும்! வாய்த்ததன் அறிவினுக்கே
போக்கிடமே கணவன்எனப் புலம்பியேத் தீர்த்திடுவார்!
சீக்கைத்தான் சமுதாயச் சீர்குலைவைப் படிப்பதனால்
போக்கிடலாம் எனநினைத்தோம்! பொல்லாத சச்சரவே
தூக்கிவர நேர்ந்ததேன்? தோழர்களே! துடிக்கீரோ ?
ஆக்கிவரு வீரோ அழகுதமிழ்
தூக்கிவரும் கவிதைகளே துணிவுடனே துணையெனவே!

-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (23-Apr-12, 11:52 am)
பார்வை : 179

மேலே