உப்பள கண்
நீ பிறக்கும் போது
என்னை தந்தையாய்
பெற்று மலர்ந்திருந்தது
காலம்.
நீ வளர்ந்தாய்
என் ,
-விரல் பற்றி
-மொழிவழி
-அறிவுவழி சமயங்களில்.
பல கணங்களில் உன் சுயம்வழி.
இன்று நீ உன் வாரிசோடு.
எனக்குத்தான் புரியவில்லை,
என்னில் இருந்த வித்து நீ
அன்றியும்
வித்தின் விளைச்சல் மட்டுமே
என்போல்!!
நீ மாறியது எப்படியடா மகனே?
ஆண்டுக்கு ஒரு முறை வந்து போ
உன்னில் உள்ள என்னைப்பார்க்க
ஏங்கிய என் கனவுகள்
தூங்கியது போதும்
வருவது உன் விருப்பம் எனினும்
உன் காலடி ஓசைக்கு
தவம் கிடக்கின்றன
என் காது மடல்கள் !
எனக்கான உன் பாதை எங்கும்
சிந்தி சிதறி கிடக்கின்றன
என் பார்வை கீற்றுகள் !
அயல்நாட்டுப்பணம்
அழகானதுதான்,
அளவற்றதுதான்
அன்றியும்,
என் கண்களில்
உண்டாகியது உப்பளம்-அளவில்
பெரியதாய்;
அழகாய் உன் முகம்
என் இமை இடுக்குகளில்,
தூங்கும் உறக்கங்களில்,
கனவு பிம்பங்களாய் உன்னோடு நான்….
பித்தன் என்கின்றனர்-மயங்கிகிடக்கிறேன்
வா மகனே ஒரு முறை ….
நான் என்னைக்காண !